என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
சத்தியமங்கலம் அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது
- சிறுத்தை தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த கால்நடைகளை வேட்டையாடி வந்தது.
- சிறுத்தையை வேடிக்கை பார்க்க ஏராளமானபேர் திரண்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி, புதுபீர்கடவு, ராஜன் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும்மேலாக சிறுத்தை ஒன்று அந்த பகுதிகளில் சுற்றி வந்தது. இரவு நேரங்களில் அந்த சிறுத்தை தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த கால்நடைகளை வேட்டையாடி வந்தது.
மேலும் அதிகாலை நேரத்தில் சிறுத்தையை பார்த்த சிலர் அச்சம் அடைந்தனர். இதையடுத்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து பவானி சாகர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க புதுபீர் கடவு பகுதியில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கூண்டு அமைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவில் மீண்டும் இந்த பகுதிக்கு வந்த சிறுத்தை கூண்டில்இருந்த ஆட்டை சாப்பிட வந்த போது வசமாக கூண்டில் சிக்கியது.
இன்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது கூண்டில் சிக்கிய சிறுத்தை 5 வயது ஆண் சிறுத்தை என்று தெரியவந்தது. சிறுத்தை கூண்டில் சிக்கியதையடுத்து சிறுத்தையை வேடிக்கை பார்க்க ஏராளமானபேர் திரண்டனர். அவர்களை சிறுத்தையின் அருகே செல்ல விடாமல் வனத்துறையினர் தடுத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாளவாடியில் சிக்கிய கூண்டில்இருந்து தப்பியது. பின்னர் வனத்துறையினர் போராடி ஒரு வழியாக சிறுத்தையை பிடித்து தெங்குமரஹடா வனப்பகுதியில் விட்டனர். எனவே இந்த முறை சிறுத்தையை கவனமாக வனத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டதால் புதபீர்கடவு, ராஜன் நகர்,பண்ணாரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பிடிபட்ட சிறுத்தையை தெங்குமரகஹடா அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.








