search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச, வேட்டி சேலை திட்டத்திற்கு மூடு விழா நடத்த தமிழக அரசு திட்டம்-  அண்ணாமலை
    X

    அண்ணாமலை

    இலவச, வேட்டி சேலை திட்டத்திற்கு மூடு விழா நடத்த தமிழக அரசு திட்டம்- அண்ணாமலை

    • நூலின் கொள்முதலுக்கான டெண்டர்களை கொடுக்காமல் அரசு இழுத்தடிக்கிறது.
    • இலவச வேட்டி, சேலை டெண்டர் தாமதமானால் பா.ஜ.க. போராட்டம் நடத்தும்.

    பாஜக நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தினவிழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறந்த நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    நாட்டின் வளர்ச்சியில் கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதத்தில் 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினமாக நம் தேசம் கொண்டாடி வருகிறது. கைத்தறியின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வளர்ச்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலனை உருவாக்க தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    கைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் நூல் வாங்கும்போது அதற்கு விதிக்கப்படும் சரக்கு கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. மேலும் பருத்தி, பட்டு, கம்பளி போன்ற நூல் வகைகளுக்கு 15 சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.

    கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை உயர்த்த தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்திட மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.7 கோடியே 54 லட்சம் வழங்கி உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் நெசவு தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    கோவை மற்றும் திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் 59 நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர்தான் நெசவுக்கு கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் வாழ்வுரிமையான இலவச, வேட்டி சேலை திட்டத்தை மூடு விழா நடத்த இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

    ரூ.1 கோடி 80 லட்சம் சேலைகளும், 1 கோடி 80 லட்சம் வேட்டிகளையும் நெய்வதற்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நூலின் கொள்முதலுக்கான டெண்டர்களை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது. டெண்டர் கொடுப்பதில் தாமதம் ஆவதால் நெசவாளர்களுக்கு ரூ.486 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த டெண்டரை வழங்கவில்லை என்றால் நெசவாளர்களின் சார்பாக தமிழக பா.ஜ.க. மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×