search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For Tamil Nadu"

    • இந்த விழாவை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார்.
    • இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மக்கள் சிந்தனை பேரவை செயலாளர் அன்பரசு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சூரம்பட்டி:

    மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் 18-வது ஆண்டு புத்தக திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

    விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.அமைச்சர் முத்துசாமி, முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார்.

    இந்த விழாவை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது

    அரசின் உதவியோடு புத்தக கண்காட்சி அனைத்து மாவட்டங்களிலும் நடக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு ரூ. 4 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பழமை சிறப்பும் இலக்கிய இலக்கண வளமையும் தமிழ் மொழிக்கு உண்டு.

    இந்த தமிழ் மொழி தான் தமிழினத்தை காக்கும் காப்பானாக அமைந்திருக்கிறது. எத்தகைய படையெடுப்பு கள் வந்தாலும் அத்தனை படை எடுப்புகளையும் தாங்கி நிற்கும் வல்லமை நமது தாய் மொழிக்கு உண்டு. பட்டங்கள் வாங்கு–வதற்கு மட்டுமல்லாமல் அறிவின் கூர்மைக்காகவும் நம்முடைய சிந்தனையை வளர்த்து கொள்வதற்கா–கவும் நாம் கடந்து வந்த பாதையை அறிந்து கொள்வதற்காகவும் நாம் போக வேண்டிய திசையை சென்றடைவதற்காகவும் அறிவார்ந்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்.

    புத்தகம் வழங்குவது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே தமிழ் நாட்டில் மாறி இருக்கிறது. இந்த இயக்கம் விரிவடைய வேண்டும். வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அறியாமை என்னும் இருட்டில் தத்தளிப் பவர்களுக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர் தான் புத்தகங்கள்.

    பொய்யும் புரட்டும் கலந்த பழமை வாதம் என்னும் கடலில் சிக்கித் தவிக்காமல் நாம் கரைசேர உதவு கிற பகுத்தறிவு கப்பல்கள் தான் புத்தகங்கள்.

    தமிழ்நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது புத்தகங்களை பரிமாறிக் கொள்ளும் பண்பாடு வளர வேண்டும். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அறிவார்ந்த நூல்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். இதனால் சிந்தனையில் தெளிவு ஏற்படும் புத்தகங்களை வாசிக்க தூண்டுங்கள் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வியை இளைஞர்கள் கேட்க வேண்டும்.

    ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால் அதனை முழுமையாக நம்பி விடாதீர்கள் அதன் உண்மை தன்மையை ஆராயுங்கள். எது உண்மை என்று அறிய வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும்.

    இட்டுக்கட்டி கட்டுக்கதைகளை அவிழ்த்து தேர்ந்தவர்கள். அந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆண்டாண்டு காலமாக கட்டுக் கதைகளை நம்ப வைக்கும் திறமையை பெற்றவர்கள். தமிழ் சமூகம் பகுத்தறிவு சமூகம் பொய்களையும் கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம். தமிழகம் அறிவு புரட்சி மாநிலமாக பகுத்தறிவு புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெற வேண்டும். அறிவே அனைத்துக்கும் அரண். புத்தகங்களே புத்துணர்வு அமுதம். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மக்கள் சிந்தனை பேரவை செயலாளர் அன்பரசு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

    ×