என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.89 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81 அடியாக இருந்தது. தற்போது அதற்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடல் போல் பிரம்மாண்டமாக காட்சியளித்த பவானிசாகர் அணை தற்போது குளம் -குட்டை போல் சுருங்கி காட்சியளிக்கிறது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பெரும்பள்ளம் அணை, குண்டேரி அணை, வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இன்னும் 9 அடி நீர் குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு விடும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • விபத்தில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி இரவு செக்யூல் லாஜிஸ்டிக் என்ற பெயரில் தங்க நகைகளை கொண்டு செல்லும் தனியார் வேன் சென்று கொண்டிருந்தது.

    வேனை சசிகுமார் என்பவர் ஓட்டி வந்தார். தனியார் பாதுகாவலர் பால்ராஜ் என்பவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் உடன் வந்து கொண்டிருந்தார். வேனில் பல்வேறு தங்க நகைக் கடைகளில் பெறப்பட்ட 800 கிலோ தங்க நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.666 கோடியாகும்.

    இந்த வேன் நள்ளிரவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு சமத்துவபுரம் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தங்க நகைகளை கொண்டு வந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தங்க நகைகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த வேனை பத்திரமாக மீட்டு சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதேப்போல் விபத்தில் காயம் அடைந்த சசிகுமார், பால்ராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மற்றொரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 800 கிலோ தங்க நகைகள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யானை கூட்டங்கள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
    • வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு வன அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள், நீர் நிலைகள் வறண்டு உள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை கூட்டங்கள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயம் மனித உயிருக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.

    இதையடுத்து வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள வனத்தொட்டியில் டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்பும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள வனத்தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

    இதேபோல் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தற்போது நீர் நிரப்பி வருகின்றனர்.

    இதனையடுத்து இந்த வனப்பகுதியில் உள்ள யானை கூட்டங்கள் காலை, மதியம், இரவு நேரங்களில் தண்ணீர் தொட்டியில் நீர் குடித்து மகிழ்கின்றன. வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு வன அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு மதிய நேர பணிகள் ரத்து.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதமாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக 108 டிகிரி முதல் 110 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் வெயிலும் சேர்த்து வாட்டி வதைத்து வருகிறது.

    வெயில் தாக்கம் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    அதைப்போல் வெப்ப அலை வீசுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்க ளும், பேருந்தில் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகள் காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    தூய்மை பணியாளர்கள் வெயிலினால் படும் துன்பத்தை அறிந்து மதிய நேர பணிகள் ரத்து செய்யப்பட்டு அவர்களது பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    இதன் படி காலை 6 மணி முதல் 11 மணி வரை ஒரு ஷிப்ட், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 2-வது ஷிப்ட் என மாற்றப்பட்டுள்ளது. இதைப்போல் குப்பை கிடங்கு மற்றும் குப்பைகளை உரமாக்கும் மையங்களிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் பணி நேரம் மாற்ற ப்பட்டுள்ளது.

    வெயில் நேர பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கூறியதாவது:-

    வெயிலின் தாக்கத்தால் தூய்மை பணி யாளர்கள் பாதிக்கப்ப டுவதை தவிர்க்க ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களது பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    குறிப்பாக பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தூய்மை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை ஒரு ஷிப்ட், மாலை ஒரு ஷிப்ட் என 2 ஷிப்ட் மட்டுமே பணிகள் நடக்கிறது. காலை பணிக்கு வருபவர்கள் மாலை பணிக்கு வர மாட்டா ர்கள். வெயில் தாக்கம் குறையும் வரை மதிய நேர பணிகள் தூய்மை பணியா ளர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

    வெயில் தாக்கம் குறைந்த பின் வழக்கம்போல் பணிகள் நடக்கும். வெயில் தாக்கத்தால் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டினை போக்க மாநகராட்சியில் பணியா ற்றும் 2 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கும் தயிர், மோர், உப்பு சர்க்கரை கரைசல், பழச்சாறு வகைகள் இன்று முதல் வழங்க திட்டமிட்டுள்ளோம். அத்தியாவசிய தேவை இன்றி பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோட்டில் கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேலும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக சுமார் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் மாவட்டத்தில் கடுமையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது வரும் 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் வெயிலின் அளவு தினமும் உச்சத்தை தொட்டு 111 டிகிரி வரை பதிவாகி வருகிறது. இதனால் ஈரோட்டில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் என்ன செய்வது என தெரியாமல் மக்கள் புலம்பி வருகிறார்கள்.

    ஈரோட்டில் கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொது மக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. தொடர்ந்து நாளுக்கு நாள் வெயில் அதிகதித்து வருவதால் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும், குடை பிடித்த படியும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் சாத்துக்குடி, தர்பூசணி மற்றும் நீர்சத்து பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பழ வகைகளை அதிகளவில் வாங்கி சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான பொதுமக்கள் இயற்கைபானங்களை அதிகளவில் பருகி வருகிறார்கள். குறிப்பாக இளநீர், நுங்கு மற்றும் பழ வகை சாறுகளை அதிகளவில் பருகி வருகிறார்கள். இதனால் இளநீர் மற்றும் நுங்கு கடைகள் பல பகுதிகளில் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டுவதால் பொதுமக்கள் பலர் நீர் நிலைகளை தேடி குளித்து வருகிறார்கள். குறிப்பாக வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் நீச்சல் குளங்களுக்கு சென்று நீண்ட நேரம் குளித்து மகிழ்கிறார்கள். மேலும் பலர் குளம், குட்டைகளுக்கு சென்று குளித்து வெப்பத்தை தணித்து வருகிறார்கள்.

    அக்னிவெயில் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம். அவர்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுரை கூறி பார்த்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதே போல் இன்று கொடிவேரி, காளிங்கராயன் அணைக்கட்டு மற்றும் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் இளைஞர்கள் வந்து நீண்ட நேரம் குளித்துக் கொண்டே இருந்தனர். கடும் வெப்பத்தால் சிறுவர்கள் பலர் தண்ணீரை விட்டு வெளியே வராமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்து சூட்டை தனித்தனர்.

    • 110 டிகிரிக்கு மேல் வெயில் கூட்டெரித்து வந்தது.
    • திடீரென மழை பெய்தது இதனால் மக்கள் மகழ்ச்சி அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, ஆசனூர் மற்றும் வனப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியான இந்த பகுதியில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து பசுமையாக காணப்பட்டு வருகிறது.

    இங்கு யானை உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி எப்போதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இந்த வனப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இந்த வனப்பகுதி வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த வழியாக இயற்கை ரசித்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மாவட்டத்தில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெயில் கூட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவுக்கு அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதே போல் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வனப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து வெயில் வாட்டுவதால் வனப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகள் காய்ந்து கிடக்கிறது.

    இந்த நிலையில் தாளவாடி, ஆசனூர், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் மக்கள் மகழ்ச்சி அடைந்தனர்.

    இதே போல் நேற்று பகல் நேரத்தில் சத்தியமங்கலம், தாளவாடி உள்பட பல்வேறு பகுதிகளில் வழக்கம் போல் வெயில் வாட்டியது. இதை தொடர்ந்து நேற்று மாலை சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மேக மூட்டமாக காணப்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதே போல் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், தொட்டகாஜனூர், தலமலை உள்பட வனப்பகுதிகளில் நேற்று மாலை திரென பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. வனப்பகுதிகளில் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இரவு முழுவதும் குளிந்த காற்று வீசியது.

    தொடர்ந்து வெயிலின் தாக்கத்தால் அவதி பட்டு வந்த மக்கள் பலத்த மழை பெய்ததால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இதே போல் புளியம்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக கொட்டியது. பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமாகின.

    மேலும் நம்பியூர் பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணி மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது.

    அதிக வெப்ப தாக்குதலால் 4 வகையான பாதிப்புகள் ஏற்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெப்பம் வாட்டி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 நாட்கள் ஈரோட்டில் 104 டிகிரி வெப்பம் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உட்பட 8 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட இந்த வார்டில் வெப்ப அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி அளிக்க செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை உறை விட மருத்துவ அதிகாரி கூறியதாவது:-

    அதிக வெப்ப தாக்குதலால் 4 வகையான பாதிப்புகள் ஏற்படும். வெப்ப எரிச்சலால் புண் ஏற்படும், தோல் சிவப்பாக மாறும், கால்களில் நரம்பு இழுத்துக் கொள்ளும், நீர்ச்சத்து குறைவால் வயிற்று வலி ஏற்படும், கோடை காலத்தில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகின்றனர். வெப்ப அலற்ஜி அல்லது வெப்ப பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படும் போது உடனடியாக உடல் வெப்பத்தை குறைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்டவர்களின் கழுத்து பகுதி, முழங்கால் மடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஐஸ்கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும், உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்க குளுக்கோஸ், உப்பு கரைசல் நீரை வழங்க வேண்டும் என்று கூறினார்.

    • தற்போது சில வாரங்களாக ஈரோடு பகுதியில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கினாலும் வரத்து சீராக உள்ளது.
    • கர்நாடகா, தர்மபுரி பகுதிகளில் அறுவடை செய்த தரமான மஞ்சளுக்கு ஈரோடு பகுதியில் விலை கிடைப்பதால் அவற்றை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூடங்கள் ஆகிய 4 இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இங்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூட்டைகள் வரை மஞ்சள் விற்பனையாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் மஞ்சள் தேவை அதிகரித்ததன் காரணமாகவும் தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளிலும் புதிய மஞ்சள் அறுவடை நடந்ததாலும் மஞ்சள் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த மார்ச் 13-ம் தேதி கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 557 முதல் 21 ஆயிரத்து 369 வரை என விலை உயர்ந்தது. அதற்கு இணையாக பிற இடங்களிலும் தரமான மஞ்சள் ரூ.20 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையானது. அதன் பின் மீண்டும் விலை குறைய தொடங்கியது.

    பின்னர் மார்ச் 27-ம் தேதியில் குவிண்டால் ரூ.17 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் மஞ்சள் மார்க்கெட்டுக்கு 10 நாட்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏலம் தொடங்கியதும் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரமாக நீடித்தது. தேர்தலுக்குப் பின் கடந்த 12 நாட்களில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து ரூ.18 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் சீசன் தொடங்கி புதிய மஞ்சள் வரத்தால் குவிண்டால் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. அதே நேரம் பஸ்மத், நாம்டேட் உட்பட பல மாநிலங்களில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கியதால் மஞ்சள் வரத்து அதிகரித்தது.

    இதனால் விலை குறைய தொடங்கியது. தற்போது சில வாரங்களாக ஈரோடு பகுதியில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கினாலும் வரத்து சீராக உள்ளது. கர்நாடகா, தர்மபுரி பகுதிகளில் அறுவடை செய்த தரமான மஞ்சளுக்கு ஈரோடு பகுதியில் விலை கிடைப்பதால் அவற்றை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர்.

    அதன் காரணமாக கடந்த 12 நாட்களில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்து நேற்று அதிகபட்சமாக குவிண்டால் ரூ.18 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 29 முதல் ரூ.18 ஆயிரத்து 599 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.9 ஆயிரத்து 600 முதல் ரூ.16 ஆயிரத்து 719 வரையிலும் விற்பனையானது.

    அதேபோல ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 900 முதல் ரூ.18 ஆயிரத்து 810-க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 9 முதல் ரூ.17 ஆயிரத்து 99-க்கும் விற்பனையானது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கும் மொத்தம் 445 மூட்டைகளில் மஞ்சள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 623 மூட்டை மஞ்சள் ஏலம் போனது. தொடர்ந்து மஞ்சள் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • வனத்தொட்டியில் தண்ணீர் நிரப்ப மக்கள் கோரிக்கை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக தாளவாடி, பர்கூர் வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. எந்த ஆண்டு இல்லாத வகையில் இந்த ஆண்டு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. குளம், குட்டைகளும் வரண்டுவிட்டன.

    இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீரை தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தாள வாடி, பர்கூர் வனப்பகு தியில் கடும் வறட்சி நிலவுவதால் பச்சை பச்சை என காட்சியளித்த மரம், செடி, கொடிகள் காய்ந்து விட்டன.

    இந்த வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு விட்டன. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் அருகே இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இவ்வாறு கிராமங்களு க்குள் நுழையும் யானை களால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோ ளம், வாழைமரங்கள், தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டஈடும் ஏற்பட்டுள்ளது. சில சமயம் யானை களால் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு விடுகிறது.

    அதேபோன்று மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவு, தண்ணீருக்காக யானைகள் அந்த பகுதியில் வரும் வாகனங்களை வழி மறைத்து வருகிறது. வாகனங்களை யானை துரத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    கிராமத்துக்குள் புகும் யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் நீண்ட சிரமத்திற்கு பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்ப வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, `தாளவாடி, பர்கூர் மலை கிராமங்களில் உள்ள மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.

    ஆனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

    இது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலர் லட்சக்கணக்கில் நஷ்டங்களை சந்தித்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதி முழுவதும் ஆங்காங்கே வனத்துறையினர் தொட்டிகளில் நீர்களை நிரப்ப வேண்டும்.

    இதற்கென்று வனத்துறையினர் பணியாளர்களை நியமித்து தினமும் காலை, மாலை வேலை என இரு வேலைகளில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் நீரை நிரப்ப வேண்டும். இவ்வாறு நீர் நிரப்புவதன் மூலம் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் எண்ணிக்கை குறையும்.

    இதேபோல் வனப்பகுதி முழுவதும் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வனத்துறையினர் யானை கள் ஊருக்குள் புகாதவாறு அகழிகளை வெட்டி இருந்தனர். தற்போது அவை மண் நிறைந்து சமமாக ஆகிவிட்டது. இதனால் யானைகள் எளிதாக ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே வனத்துறையினர் மீண்டும் அகழிகளை ஆழமாக வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார்.
    • காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தூக்கி வீசும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார். காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார். விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    கடந்த மாதம் 27-ந்தேதி அன்று நடைபெற்ற விபத்து தொடர்பான வீடியோவை ஆய்வு செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • மாவட்டத்தில் ஒருபுறம் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது மற்றொரு புறத்தில் மழை பெய்து வருவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் காய்ந்து கிடக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் தாளவாடி அடுத்த எரகனள்ளி, நெய்தாலபுரம், கல்மண்டிபுரம், ஜீர்கள்ளி ஆகிய கிராமத்தில் சூறாவளி காற்றுடன் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இந்த சூறைக்காற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    அதேபோல கல்மண்புரம் கிராமத்தில் 2 தென்னை மரங்களும் காற்றில் முறிந்து விழுந்தது. அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயி கவலை அடைந்துள்ளார். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புழுக்கத்தால் அவதி அடைந்து இரவில் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் ஒருபுறம் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது மற்றொரு புறத்தில் மழை பெய்து வருவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

    • பிரதமர் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல.
    • கர்நாடகவில் தமிழகத்திற்கு வழங்கும் அளவிற்கு தண்ணீர் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகிறது. பிரதமர் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல.

    தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என மக்களிடையே மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. முதற்கட்ட தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளது. தோல்வி பயத்தால் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பிரதமர் பேசியிருக்கிறார். ஹிட்லரின் வழியை மோடி பின்பற்றுகின்றார்.

    இத்தகைய செயல்பாடு நாட்டிற்கு உகந்தது அல்ல. இனியாவது தேர்தல் ஆணையம் கண்ணை கட்டிக்கொள்ளாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேராசிரியர் நிர்மலாதேவி தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இவர் யாருக்காக மாணவிகளை தவறாக பயன்படுத்த முயற்சித்தார் என்ற கேள்விக்கு பதில் வெளிவரவில்லை.

    உரிய விசாரணை நடத்தி பெரும் புள்ளியை கண்டறிய வேண்டும். நிர்மலா தேவிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது ஒருதலைப்பட்சமான தீர்ப்பு. ஈரோட்டில் அதிக வெப்பநிலை உயர்ந்துள்ளதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து கண்டறிந்து தீர்வு காணப்பட வேண்டும்.

    கர்நாடகவில் தமிழகத்திற்கு வழங்கும் அளவிற்கு தண்ணீர் உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மேகதாதுவில் அணை கட்டுவோம் என டி.கே சிவக்குமார் சொல்வது வாக்கு கேட்பதற்காக சும்மா சொல்கிறார்.

    தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். விருதுநகரில் வெடிமருந்து வெடித்து சிலர் உயிரிழந்த நிலையில் குவாரிகளை முறைப்படுத்த வேண்டும்.

    குவாரிகளில் மேற்கொள்ளபட வேண்டிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். இதில் அதிகாரிகள் கவனக்குறைவாக இருக்கின்றனர். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கேமரா பழுது ஏற்பட்டதை வைத்து ஒன்னும் செய்ய முடியாது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இவற்றில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுவது சரியல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×