search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலம்- தாளவாடி பகுதியில்  2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை: மக்கள் மகிழ்ச்சி
    X

    சத்தியமங்கலம்- தாளவாடி பகுதியில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை: மக்கள் மகிழ்ச்சி

    • 110 டிகிரிக்கு மேல் வெயில் கூட்டெரித்து வந்தது.
    • திடீரென மழை பெய்தது இதனால் மக்கள் மகழ்ச்சி அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, ஆசனூர் மற்றும் வனப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியான இந்த பகுதியில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து பசுமையாக காணப்பட்டு வருகிறது.

    இங்கு யானை உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி எப்போதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இந்த வனப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இந்த வனப்பகுதி வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த வழியாக இயற்கை ரசித்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மாவட்டத்தில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெயில் கூட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவுக்கு அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதே போல் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வனப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து வெயில் வாட்டுவதால் வனப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகள் காய்ந்து கிடக்கிறது.

    இந்த நிலையில் தாளவாடி, ஆசனூர், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் மக்கள் மகழ்ச்சி அடைந்தனர்.

    இதே போல் நேற்று பகல் நேரத்தில் சத்தியமங்கலம், தாளவாடி உள்பட பல்வேறு பகுதிகளில் வழக்கம் போல் வெயில் வாட்டியது. இதை தொடர்ந்து நேற்று மாலை சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மேக மூட்டமாக காணப்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதே போல் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், தொட்டகாஜனூர், தலமலை உள்பட வனப்பகுதிகளில் நேற்று மாலை திரென பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. வனப்பகுதிகளில் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இரவு முழுவதும் குளிந்த காற்று வீசியது.

    தொடர்ந்து வெயிலின் தாக்கத்தால் அவதி பட்டு வந்த மக்கள் பலத்த மழை பெய்ததால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இதே போல் புளியம்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக கொட்டியது. பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமாகின.

    மேலும் நம்பியூர் பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணி மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது.

    Next Story
    ×