search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தோல்வி பயத்தால் பிரதமர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்
    X

    தோல்வி பயத்தால் பிரதமர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்

    • பிரதமர் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல.
    • கர்நாடகவில் தமிழகத்திற்கு வழங்கும் அளவிற்கு தண்ணீர் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகிறது. பிரதமர் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல.

    தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என மக்களிடையே மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. முதற்கட்ட தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளது. தோல்வி பயத்தால் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பிரதமர் பேசியிருக்கிறார். ஹிட்லரின் வழியை மோடி பின்பற்றுகின்றார்.

    இத்தகைய செயல்பாடு நாட்டிற்கு உகந்தது அல்ல. இனியாவது தேர்தல் ஆணையம் கண்ணை கட்டிக்கொள்ளாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேராசிரியர் நிர்மலாதேவி தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இவர் யாருக்காக மாணவிகளை தவறாக பயன்படுத்த முயற்சித்தார் என்ற கேள்விக்கு பதில் வெளிவரவில்லை.

    உரிய விசாரணை நடத்தி பெரும் புள்ளியை கண்டறிய வேண்டும். நிர்மலா தேவிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது ஒருதலைப்பட்சமான தீர்ப்பு. ஈரோட்டில் அதிக வெப்பநிலை உயர்ந்துள்ளதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து கண்டறிந்து தீர்வு காணப்பட வேண்டும்.

    கர்நாடகவில் தமிழகத்திற்கு வழங்கும் அளவிற்கு தண்ணீர் உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மேகதாதுவில் அணை கட்டுவோம் என டி.கே சிவக்குமார் சொல்வது வாக்கு கேட்பதற்காக சும்மா சொல்கிறார்.

    தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். விருதுநகரில் வெடிமருந்து வெடித்து சிலர் உயிரிழந்த நிலையில் குவாரிகளை முறைப்படுத்த வேண்டும்.

    குவாரிகளில் மேற்கொள்ளபட வேண்டிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். இதில் அதிகாரிகள் கவனக்குறைவாக இருக்கின்றனர். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கேமரா பழுது ஏற்பட்டதை வைத்து ஒன்னும் செய்ய முடியாது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இவற்றில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுவது சரியல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×