என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நேற்று முன்தினம் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
    • வாலிபரிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை நேற்று சிகிச்சைக்காக அழைத்து வந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆகியிருந்ததையும், ரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டு இருந்ததும் தெரிந்தது.

    உடனே சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு அந்த வாலிபரும், இளம்பெண்ணும் கணவன்-மனைவி தானா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இதுகுறித்து கோபி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பொன்மணிக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து பொன்மணி மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று வாலிபரிடமும், சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணிடமும் விசாரணை நடத்தினார். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன. அதன் விவரம் வருமாறு:-

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 20 வயதுடைய வாலிபர் ஒருவர் தன்னுடைய தாயார் மற்றும் 19 வயதுடைய இளம்பெண்ணுடன் கடந்த ஆண்டு கோபி கச்சேரிமேடு சீத்தாம்மாள் காலனியில் உள்ள வீட்டுக்கு குடிவந்துள்ளார். இளம்பெண் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது வாலிபருக்கும், அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் ஆகாமலேயே கணவன்-மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

    இதற்கிடையே மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனால் மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வாலிபர் திருப்பூரில் இருந்து கோபிக்கு குடிவந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வாலிபர் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன்பின்னர் மாணவிக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை. ஒருநாள் முழுவதும் வீட்டிலேயே வைத்து பார்த்த வாலிபருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவியை சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்படவே விஷயம் வெளியில் வந்துவிட்டது.

    இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் வாலிபர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு வாலிபரின் தாய் குழந்தையை கண்காணித்து வந்தது தெரிந்தது. மேலும் வாலிபர் யூடியூப் பார்த்து பிரவசம் பார்த்த அறையில் இருந்து தொப்புள் கொடியை கைப்பற்றினர். தொடர்ந்து வாலிபரிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
    • தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது‌.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப் பக்கூடல், அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் நிலவியது. இந்தநிலையில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பின்னர், மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் நல்லிக்கவுண்டன் புதூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் கிளையும், அத்தாணி- செம்புளிச்சாம்பாளையம் செல்லும் சாலையில் தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.

    மேலும், அத்தாணி கருப்பண்ணகவுண்டன் புதூர் பிரிவில் இருந்து கருப்பண்ணகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் இருந்த இலகுவான 2 மரங்கள் வேரோடு சாய்ந்து ஒரு மரம் மின்கம்பிகளின் மீதும், மற்றொரு மரம் சாலையிலும் விழுந்தது.

    இதைத் தொடர்ந்து, பவானி நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளையும், வேரோடு சாய்ந்து மின்கம்பிகளின் மீது விழுந்த மரங்களையும் அகற்றினர். ஆப்பக்கூடலில், நேற்று மாலை 3.30 மணிக்கு மேல் தூரல் மழையாக ஆரம்பித்து 30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது, அதன் பின்னரும், அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய தூரல் மழை இரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது.

    • கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
    • எஸ்.பி. சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட எஸ்.பி. சுஜாதா நேரில் விசாரணை நடத்தியதுடன், கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை போலீசாரை நியமித்து உத்தரவிட்டார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ராமசாமி, பாக்கியம் தம்பதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நேற்று மதியம், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை வாங்க மறுத்த உறவினர்கள், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில், எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி, முன்னாள் மாவட்ட தலைவர் வேதானந்தம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற பெருந்துறை டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் தனியாக வசித்து வருபவர்களை கண்காணித்து, உள்ளே புகுந்து அவர்களை கொலை செய்துவிட்டு பணம் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி விடுவதுடன், அச்சமின்றி சுற்றி திரிவதால் அவர்களை உடனடியாக கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர். இதனை ஏற்று உயிரிழந்த தம்பதியின் உடல்களை உறவினர்கள் வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் எஸ்.பி. சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்தநிலையில் கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டார பகுதியில் உள்ள 100 சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர்.
    • கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விலாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன் கவிசங்கர் முத்தூரில் மோட்டார் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

    மகள் பானுமதிக்கு திருமணம் ஆகி கணவருடன் முத்தூர் அருகே சர்க்கரை பாளையத்தில் வசித்து வருகிறார். ராமசாமி தனது மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினமும் ராமசாமி தனது மகன், மகளுடன் போனில் பேசி வந்துள்ளார்.

    கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கவிசங்கர் பெற்றோருக்கு போன் செய்துள்ளார், ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து மேகரையான் தோட்டத்து பகுதியில் வசித்து வரும் தங்களது உறவினர்களை செல்போனில் அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார்.

    இதனையடுத்து கவிசங்கரின் உறவினரான நதியா மற்றும் நல்லசிவம் ஆகியோர் ராமசாமி வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவரது வீட்டின் முன் பகுதியில் ராமசாமியும், வீட்டுக்குள்ளே பாக்கியமும் படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசியது. எனவே அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஐ.ஜி செந்தில் குமார், டி.ஐ.ஜி சசி மோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாக்கியம் அணிந்திருந்த 7 பவுன் தாலி கொடி, 5 பவுன் வளையல், மோதிரம் என 12 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது.

    ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். கொலை நடந்த வீடு தனியாக உள்ள தோட்டத்து வீடாகும். இதன் அருகே வீடுகள் இல்லை. சற்று தொலைவில் வீடுகள் இருந்துள்ளன.

    இதனை சாதகமாக்கி கொண்ட மர்ம கும்பல் தங்களது திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் ராமசாமி வீட்டில் ரத்தக்கரை படிந்திருந்தது. நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி விவேகானந்தம் தலைமையில் 8 தனிபடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோன்று திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளை மர்ம கும்பல் கொலை செய்துள்ளது. அந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குள் அதே பாணியில் தற்போது வயதான தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மே தின நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
    • 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அ.தி.மு.க. சார்பில் மே தின நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * என்னை பொறுத்தவரை கட்சியில் தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.

    * இந்த இயக்கம் மண்ணிலே வளர வேண்டும். இயக்கத்தில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது கண்ணீர் துடைக்கப்படும்.

    * வேலைவாய்ப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். தொழிலாளர்கள் நலன் காக்கப்படும். விவசாயிகள் நலன் காக்கப்படும்.

    * 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆடுகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயி ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டு இருக்கும் ஆடுகள், மர்ம விலங்குகள் கடித்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இதை கண்டித்து விவசாயிகள் ஏற்கனவே போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

    உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று மாவட்ட நிர்வாகமும் ஏற்கனவே உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கியிருந்தனர். இந்நிலையில் மீண்டும் பட்டியில் கட்டப்பட்டிருந்த 5 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஈரோடு தங்கம் நகர், நாரங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் விவசாயம் செய்து வருகிறார். ஈஸ்வரன் இவரது விவசாய தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.

    ஈஸ்வரன் தோட்டத்தில் உள்ள பட்டியை பார்த்தபோது 10 ஆடுகளில் 5 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.நள்ளிரவில் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொண்றது தெரிய வந்தது.

    இது குறித்து ஈஸ்வரன் வருவாய் துறை மற்றும் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டு வரும் ஆடுகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயி ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையம், ஸ்ரீ கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், ஒரு மகளும், வெங்கடேஷ் (வயது 22) என்ற மகனும் உள்ளனர்.

    வெங்கடேஷ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியின் இன்டென் சிப் மூலமாக கடந்த ஒன்றரை வருடமாக வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் வெங்கடேஷ் வேலை செய்யும் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. இதனால் தன்னையும் வேலையை விட்டு நீக்கி விடுவார்களோ என்ற பயத்தில் வெங்கடேஷ் இருந்துள்ளார். இது குறித்து தனது தந்தையிடம் கூறி மனம் வருந்தி உள்ளார். அதற்கு அவர் தந்தை இந்த நிறுவனம் இல்லை என்றால் வேறு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று மகனுக்கு ஆறுதல் கூறி வந்தார்.

    இந்நிலையில் வெங்கடேஷ் பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அன்று காலை வெங்கடேஷ் சத்தியமங்கலத்தில் தான் தங்கியிருக்கும் அறைக்கு சென்று தங்கி விட்டு தேர்வு எழுதி வருகிறேன் என்று கூறிவிட்டு காரை எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து வெங்கடேஷ் தன்னுடன் படிக்கும் கவுதம் என்பவருக்கு போன் செய்து சத்தியமங்கலம்-அத்தாணி மெயின் ரோட்டு அருகே உள்ள ஒரு பேக்கரி கடையில் இருக்கிறேன் நீ இங்கு வா என்று கூறியுள்ளார்.

    அதன் பேரில் கவுதம் அங்கு சென்றார். அப்போது வெங்கடேஷ் சோர்வுடன் இருந்துள்ளார். இதுகுறித்து கவுதம் கேட்டபோது ஒன்று மில்லை என்று கூறிவிட்டார். பின்னர் வெங்கடேஷ், கவுதமை தனது காரில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தபோது திடீரென வெங்கடேஷ் ரத்த வாந்தி எடுத்து உள்ளார்.

    இதுகுறித்து கேட்டபோது வேலை போய்விடும் என்ற பயத்தில் தான் விஷம் குடித்து விட்டதாகவும், தனக்கு மயக்கம் வருவது போன்று இருப்பதாகவும் கூறினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் வெங்கடேசை அழைத்து கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்து வெங்கடேசை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வெங்கடேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது.
    • தமிழக-கர்நாடக இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பன்னாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் போலீஸ்-வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது.

    இது தமிழக-கர்நாடகா எல்லை என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடந்து வருகிறது. திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்டறியும் வகையில் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனை சாவடியில் இரும்பினால் ஆன தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இதில் நுழையும் வாகனங்கள் உயரமான மற்றும் அகலமான பாரங்களை ஏற்றி வந்தால் செல்ல முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று பண்ணாரி சோதனை சாவடி தடுப்பு கம்பியில் சிக்கிக் கொண்டது.

    இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் தமிழக-கர்நாடக இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு லாரியை அங்கிருந்து நகர்த்தினர். இதன்பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
    • காலை, மாலை, இரவு நேரம் என பண்ணாரி அம்மன் கோவில் அருகே அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், கரூர் என அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சோதனை சாவடி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை ஒன்று அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றி வருகிறது.

    வனத்துறையினர் பட்டாசை வைத்து விரட்டினாலும் சிறிது நேரம் மீண்டும் சாலையோரம் வந்து விடுகிறது. காலை, மாலை, இரவு நேரம் என பண்ணாரி அம்மன் கோவில் அருகே அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது. இதனால் பண்ணாரி அம்மன் கோவில் செல்லும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதைப்போல் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உணவு தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வாகனங்களை வழிமறிப்பது, கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதை ஆகி வருகிறது.

    தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. எனவே கோவில் செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக வனப்பகுதிக்குள் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த ஒற்றை யானையின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றனர்.

    • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு எஸ்.பி. சுஜாதா உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜீவா நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து பவானி இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு அப்பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பவானி, குருப்பநாயக்கன்பாளையம், ஜீவா நகர் பகுதியில் வசிக்கும் சரவணன் (வயது 33) என்பவர் அவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெள்ளை துண்டு சீட்டில் எழுதி வைத்து கொண்டு விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சரவணனை கைது செய்து அவரிடம் இருந்து ரொக்கப் பணம் 8 லட்சத்தது 56 ஆயிரம் ரூபாய், 3 செல்போன்கள் மற்றும் 65 வெள்ளை துண்டு சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் மாதையன், விக்கி, கணேசன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்காக திவாரியை அழைத்துச் சென்றனர்.
    • கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வழியாக நாள் ஒன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக ஈரோடு வழியாக வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒடிசா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று இரவு ஜோலார்பேட்டை வந்தது. பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

    ஈரோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையில் ரெயில்வே போலீசார் ராஜ்குமார், செந்தில் ராஜா, சதீஷ்குமார் ஆகியோர் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ் 4 பெட்டியில் இருக்கை எண் 28-ல் பயணம் செய்த ஒடிசா மாநிலம் பலாங்கிரியை சேர்ந்த அபினேஷ் திவாரி (வயது 28) என்பவரின் பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் 13 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்ததும் 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்காக அபினேஷ் திவாரியை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அபினேஷ் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒற்றை யானை ஒன்று இக்கலூர் கிராமத்துக்குள் புகுந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வெயில் வாட்டி வதைப்பதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வெளிவருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

    சில நேரங்களில் மனித உயிருக்கும் ஆபத்தை விளை விக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று இரவு நேர காவலில் இருந்த விவசாயியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இது பற்றிய விபரம் வருமாறு:- தாளவாடி அடுத்த இக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு சாமி (வயது 55). விவசாயி.

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது. தற்போது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இக்கலூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் இரவு நேரத்தில் தங்களது தோட்டங்களில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு பிரபு சாமி தனது கரும்பு தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்துள்ளார். அப்போது அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று இக்கலூர் கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் பிரபுசாமி கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது.

    திடீரென யானை தோட்டத்திற்குள் வந்ததால் அதிர்ச்சியடைந்த பிரபு சாமி அங்கிருந்து தப்பி ஓடுவதற்குள் ஒற்றை யானை அவரை தாக்கியது. இதில் இரு கால்களில் பலத்த காயம் அடைந்த பிரபு சாமி வலியால் அலறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து தோட்டத்தில் இருந்த விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    பின்னர் யானை தாக்கி படுகாயம் அடைந்த பிரபு சாமியை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபு சாமி கோவை மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×