என் மலர்
ஈரோடு
- வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
- போலியாக ஆதார் அட்டை பெற்று பெருந்துறையில் சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பப்லு சர்தார் உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இதையடுத்து பெருந்துறை போலீசார் அவ்வப்போது சிப்காட் பகுதி, பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்களாதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்களாதேச தம்பதியினரை போலீசார் கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு வீரப்பன்சத்திரம், காமராஜ் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தம்பதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த பப்லு சர்தார் (37), அவரது மனைவி ரிபியா காடுன்(37) ஆகியோர் என்பதும், இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் சட்ட விரோதமாக தங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
போலியாக ஆதார் அட்டை பெற்று பெருந்துறையில் சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பப்லு சர்தார் உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. உரிய பாஸ்போர்ட் விசா எதுவும் இன்றி வசித்து வந்துள்ளனர். இதையடுத்து பப்லு சர்தார், அவரது மனைவி ரிபியா காடுன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரே இடத்தில் எங்கும் அசையாமலும், நகராமலும் அந்த ஒற்றை யானை நின்று கொண்டே இருந்தது.
- யானை வழக்கத்துக்கு மாறாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலை ஒட்டிய சோதனை சாவடி அருகே சத்தி- மைசூர் தேசிய நெடுஞ் சாலை ஆரம்பமாகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் இந்த நெடுஞ்சாலை இருப்பதால் இங்கு அடிக்கடி வனவிலங்குகள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் சுற்றி வருகிறது.
ஒற்றை யானை நடமாட்டத்தால் பக்தர்கள் ஒரு வித அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று பண்ணாரி அம்மன் கோவில் அருகே வந்து நின்றது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஒரே இடத்தில் எங்கும் அசையாமலும், நகராமலும் அந்த ஒற்றை யானை நின்று கொண்டே இருந்தது.
யானை வழக்கத்துக்கு மாறாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. இதனால் அந்த ஒற்றை யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கருதி வனத்துறையினர் அந்த யானையின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். இரவு நேரம் முழுவதும் அந்த இடத்தில் இருந்த ஒற்றை யானை காலை ஆனதும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
- நிரந்தரக் கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பது அரசாணையில் இருக்கிறது.
- மார்க்கெட்டில் சுங்க கட்டணத்திற்கு ரசீது கொடுப்பதே இல்லை.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக கடந்த மே 5-ந் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீர்மானங்களை அறிவித்திருந்தார்.
குறிப்பாக வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 லட்சம் தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தி மீண்டும் ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மே 5-ந் தேதியை வணிகர் தினமாக அரசு அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பழ மார்க்கெட் வாகனம் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதே போன்று சுங்க கட்டணம் வசூலிப்பதற்கும் அரசு அனுமதி அளித்திருக்கிறது.
சுங்க கட்டணம் என்று சொன்னால் தற்காலிக கடைகளுக்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். நிரந்தரக் கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பது அரசாணையில் இருக்கிறது. ஆனால் இதை அரசுத்துறை அதிகாரிகள் ஏனோதானோ என்று முடிவு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்க்கெட் சுங்கம் வசூலிப்பவர்கள் தானாகவே ரவுடிசத்தை கையில் எடுக்க கூடிய சூழ்நிலையும் தமிழக முழுவதும் பல்வேறு மார்க்கெட்டுகளில் இது போன்ற சூழ்நிலைகள் இருக்கிறது. எனவே அரசு இதனை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆணையாளர், அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் சுங்க கட்டணத்திற்கு ரசீது கொடுப்பதே இல்லை. அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதற்கு என்ன உள்நோக்கம் இருப்பது என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கம் கேள்வியாக எழுப்புகிறது. இந்த பிரச்சனைக்கு முறையாக நல்ல தீர்வு ஏற்படும் என நம்பிக்கை உள்ளது.
இல்லையென்றால் மாவட்டம் தோறும் வணிகர் பேரமைப்பின் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தனியார் கட்டிடங்களில் நாங்கள் கடைகளை நடத்துகிறோம். அதற்கு அரசு முறையாக லைசன்ஸ் வழங்கியுள்ளது. அந்த கடைகளுக்கு சுங்க கட்டணம் தேவையில்லை என்பதை அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
இதை தாண்டி சுங்க கட்டணம் வசூல் செய்வது தேவையற்றது. தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு வருகின்ற ஜூலை மாதம் 22ம் தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு உள்பட 7 அமைப்புகள் சார்பில் தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்ட திட்டங்களை மாற்றி அமைத்து விட்டார்கள். மீண்டும் தமிழகத்தில் வால்மார்ட்டு டி மார்ட் உடன் சேர்ந்து நுழைய சதிவலை பின்னிக் கொண்டிருக்கிறது. இது குறித்து முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகள் முதலில் இலவசம் என்ற பெயரில் கொடுப்பார்கள். தமிழர்களின் ஒட்டு மொத்த வருமானத்தையும் கார்ப்பரேட் நிறுவனம் சுரண்டி கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் அந்த ஒற்றை யானை கிராமத்துக்குள் வந்தது.
- நேற்று இரவு தாளவாடி ஊருக்குள் ஒற்றை யானை புகுந்தது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
சமீப காலமாக உணவு, தண்ணீரை தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அடுத்த அருள்வாடி புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தன.
யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் அந்த ஒற்றை யானை கிராமத்துக்குள் வந்தது. இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி ஊருக்குள் ஒற்றை யானை புகுந்தது. அந்த பகுதியில் உள்ள நேதாஜி சர்க்கிள் என்னும் இடத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தி உள்ளது.
இதுவரை கிராமத்துக்குள் புகுந்த யானை தற்போது முதல் முதலாக தாளவாடி ஊருக்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாழைக் கன்றுகளையும் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
- தோட்டத்துக்குள் புகுந்த யானைகளால் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
சமீப காலமாக உணவு, தண்ணீரை தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் சாமிநான் (வயது 41) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவு 12 மணியளவில் புகுந்த காட்டு 2 யானைகள் வாழைகளை நாசம் செய்தது.
இதைப்போல் வாழைக் கன்றுகளையும் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதையடுத்து விவசாயி ராமசாமி மற்ற விவசாயிகள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராடி பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
எனினும் ராமசாமி தோட்டத்துக்குள் புகுந்த யானைகளால் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதே போல் கடந்த வாரம் தோட்டத்தில் புகுந்த யானை வாழையை சேதாரம் செய்தது. தொடர்ந்து வாழையை யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து சேதாரம் செய்து வருவதால் விவசாயி வேதனை அடைந்துள்ளனர்.
சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், யானையை விரட்ட வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏ.டி.எஸ்.பி விவேகானந்தனை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
- துணை விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் பணி தொடர்வார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்துப் பகுதியில் கடந்த 1-ந் தேதி ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதி கொலை செய்யப்பட்டு 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில் கண்காணிப்பு கேமரா அடிப்படையில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த பழம் குற்றவாளி ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்து வந்த பெருந்துறை டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் திடீரென மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி விவேகானந்தனை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
சிவகிரி தம்பதி கொலை வழக்கு விசாரணையை விரைந்து துரிதப்படுத்தி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு டிசம்பர் மாதம் இறுதிக்குள் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தர வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் துணை விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் பணி தொடர்வார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதான ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரின் நீதிமன்ற காவல் வரும் 2-ந் தேதி உடன் முடிவடைகிறது. சிவகிரி இரட்டை கொலை, திருப்பூரில் 3 பேர் கொலை மேலும் சில வழக்குகளில் இவர்கள் 3 பேருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
எனவே இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 2-ந்தேதிக்கு பிறகு மூன்று குற்றவாளிகளையும் நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
- மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாட மலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். அப்பொழுது மக்கள் ஆபத்தை உணராமல் பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாயாற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகரித்து வருகிறது. தற்போது கோவை மாவட்டம் பில்லூர் அணை தனது முழு கொள்ளளவு எட்டி உள்ளதால் 18 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மாயாற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இருகரையும் தொட்டபடி நீர் பாய்ந்து செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை ஆபத்தை உணராமல் தெங்குமரகஹாட கிராம மக்கள் பரிசலில் பயணம் மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
திடீர் திடீரென வெள்ளபெருக்கு ஏற்பட்டு சில சமயம் ஊருக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். வயிற்று பிழைப்புக்காக ஆபத்தான முறையில் பரிசலில் கடந்து செல்கிறோம். இதற்கு நிரந்தர தீர்வாக மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.
கோரிக்கை விடுத்தும் வருகிறோம். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பஸ்சில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியாத நிலையில் ஓரமாக ஒதுங்கினர்.
- மலைப்பகுதியில் நல்ல தரத்துடன் உள்ள பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. சில தினங்களாக தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆசனூர், தலமலை, இக்களூர், கெட்டவாடி, கோடிபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
மலைக்கிராமங்களில் மக்கள் அன்றாட தேவைகளுக்கு அரசு பஸ்சை நம்பியுள்ளனர். இந்த அரசு பஸ் கிராமங்களில் இருந்து தாளவாடிக்கும், வெளியூருக்கும் சென்று வருகிறது. இந்நிலையில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிளை ஏற்றி கொண்டு அரசு பஸ் நேற்று மாலை 5.30 மணியளவில் சத்தியமங்கலம் புறப்பட்டது.
மாலை 6 மணியளவில் பஸ் ஆசனூர் அருகே சென்ற போது பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் பஸ்சின் மேற்கூரையில் ஆங்காங்கே உள்ள துவாரத்தின் வழியாக மழை நீர் அருவியாக கொட்டியது. இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியாத நிலையில் ஓரமாக ஒதுங்கினர்.
ஆனால் ஆங்காங்கே மழை நீர் துவாரம் வழியாக கொட்டியதால் பயணிகள் நனைந்தபடி பயணித்தனர். பஸ்சில் மழைநீர் அனைத்து பகுதியில் கொட்டியதால் பெரும் சிரமத்துக்குள்ளாகிய பயணிகள் நிம்மதியிழந்து பயணித்தனர். இதை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து அதை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மலைப்பகுதியில் ஓட்டை ஓடசல் பஸ்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுதாகுவதும், மழைநீர் கொட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே மலைப்பகுதியில் நல்ல தரத்துடன் உள்ள பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டம் பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சடையப்பன் மனைவி பாப்பாள் (70). ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்.
பாப்பாள் வங்கி கணக்கில் அவருக்கு வரும் ஓய்வூதிய பணம் ரூ.1.76 லட்சம் சேமித்து வைத்திருந்தார். இதனை அவருக்குத் தெரிந்த அரச்சலூர் ஜே.ஜே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபால் (38) என்பவரிடம் அந்தப் பணத்தை எடுத்து தர சொல்லி உள்ளார்.
கோபாலும் மூதாட்டி ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து தருவது போல் உதவி செய்து நடித்து பாப்பாள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொண்டார். இதை அடுத்து பாப்பாளை ஏமாற்றி அவரது ஏ.டி.எம் கார்டினை எடுத்துக்கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாப்பாள் இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- புதுமஞ்சள் வரத்து இல்லாததால் விலை குறைந்துள்ளது.
- மஞ்சள் வணிகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் விராலி மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மருத்துவ குணம் மிகுந்து காணப்படுவதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.
இங்கு சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் ஏலம் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மார்க்கெட்டில் கடந்த 16-ந்தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15 ஆயிரத்து 40-க்கு ஏலம் போனது. பின்னர் படிப்படியாக குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 200 வரை விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் நேற்று கோபி சொசைட்டியில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.13 ஆயிரத்து 169-க்கு விலை குறைந்து விற்பனையானது. ரூ.1,300 வரை விலை குறைந்து விற்பனையானது. மஞ்சள் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த ஏலத்துக்கு ஈரோடு மற்றும் அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைவித்த மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,149 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் 982 மூட்டைகள் விற்பனையானது. விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 519 முதல் ரூ.13 ஆயிரத்து 859 வரை விற்பனையானது. இதே போல் ஈரோடு வெளி மார்க்கெட்டில் 1,807 மூட்டைகள் வரத்தாகின.
இதில் 940 மூட்டைகள் விற்பனையாகின. இதில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 169 முதல் ரூ.13 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது. இதை போல் ஈரோடு சொசைட்டி யில் 905 மூட்டைகள் வரத்தாகின. இதில் 838 மூட்டைகள் விற்பனையானது. இந்த சந்தையில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 819 முதல் ரூ.13 ஆயிரத்து 339 வரை விற்பனையானது.
கோபி சொசைட்டியில் 157 மூட்டைகள் வரத்தாகின. 90 மூட்டைகள் விற்பனையாகின. இந்த சந்தையில் விராலி மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 319 முதல் 13 ஆயிரத்து 169 வரை விற்பனையானது. மஞ்சள் விலை தொடர்ந்து சரிந்து வருவது குறித்து ஈரோடு வியாபாரிகள் கூறியதாவது:- புதுமஞ்சள் வரத்து இல்லாததால் விலை குறைந்துள்ளது.
பழைய மஞ்சள் இருப்பு வைத்துள்ளவர்கள் விலை சரியாக இல்லாததால் விற்பனைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மஞ்சள் குவிண்டால் ரூ.2 ஆயிரம் வரை குறைந்துள்ளது. வரும் நாட்களில் தரமான புதிய மஞ்சள் விற்பனைக்கு வரும்போது மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் மஞ்சள் வணிகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
சில மாநிலங்களில் விளைச்சல் அளவீட்டிற்கு ஏற்ப ஈரோடு மஞ்சள் விலையும் மாறுதலுக்கு உள்ளாகிறது. ஆனாலும் ஈரோடு மஞ்சள் விலை தற்போது சற்று குறைந்திருந்தாலும் மீண்டும் அதிகரிக்கவே செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பெருந்துறையில் 2013-இல் ஹேமலதா மற்றும் பாலாஜி கடத்தல் வழக்கில் யுவராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 2013-இல் ஹேமலதா மற்றும் பாலாஜி கடத்தல் வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கும் எதிரான சாட்சிகள் அனைத்தும் பிறழ் சாட்சியாக மாறியதால் யுவராஜ் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து ஈரோடு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விடுதலை குறித்து எக்ஸ் தளத்தில், யுவராஜின் ஆதரவாளர்கள் கொண்டாட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த வழக்கு கோகுல்ராஜ் கொலை வழக்குடன் தொடர்புடையதல்ல. இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் ஆகும். இதனால் கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் கோவை மத்திய சிறைக்கு யுவராஜ் அழைத்துச் செல்லப்பட்டார்.
- கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூக்கள் ரூ.10-க்கு விற்பனையானது.
- பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டால் மறுபடியும் பூ பூக்காது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி பூக்கள் பயிரிடப்படுகின்றன. நாள்தோறும் 5 டன் பூக்களுக்கு மேல் விளைகிறது. அவைகளை விவசாயிகள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள்.
சத்தியமங்கலம் , பவானிசாகர், புளியம்பட்டி பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சம்பங்கி பூக்கள் விளைச்சல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. திருமண சீசன் போது கிலோ ரூ.500-க்கு விற்பனையான சம்பங்கி பூக்கள் கடந்த சில வாரங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ 50 ரூபாயாக சரிந்தது. இதற்கிடையே கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூக்கள் ரூ.10-க்கு விற்பனையானது.
இதனால் கடும் வேதனை அடைந்த விவசாயிகள் விரக்தி காரணமாக சம்பங்கி பூக்களை பறித்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டு நீரோடைகளில் டன் கணக்கில் கொட்டி வருகிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சம்பங்கி பூக்கள் விலை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதை பயிரிட ஆயிரம் கணக்கில் செலவு செய்தோம். தற்போது சம்பங்கி பூ விலை கிலோ ரூ.10-க்கு சரிந்துள்ளதால் நாங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டால் மறுபடியும் பூ பூக்காது. தற்போது 10 டன் சம்மங்கி பூக்களை பறித்து ஓடைகளில் கொட்டி அழித்து வருகிறோம் என்று வேதனையுடன் கூறினர். மேலும் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






