என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோட்டில் ஒரே வாரத்தில் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.2 ஆயிரம் குறைந்தது
- புதுமஞ்சள் வரத்து இல்லாததால் விலை குறைந்துள்ளது.
- மஞ்சள் வணிகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் விராலி மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மருத்துவ குணம் மிகுந்து காணப்படுவதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.
இங்கு சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் ஏலம் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மார்க்கெட்டில் கடந்த 16-ந்தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15 ஆயிரத்து 40-க்கு ஏலம் போனது. பின்னர் படிப்படியாக குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 200 வரை விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் நேற்று கோபி சொசைட்டியில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.13 ஆயிரத்து 169-க்கு விலை குறைந்து விற்பனையானது. ரூ.1,300 வரை விலை குறைந்து விற்பனையானது. மஞ்சள் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த ஏலத்துக்கு ஈரோடு மற்றும் அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைவித்த மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,149 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் 982 மூட்டைகள் விற்பனையானது. விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 519 முதல் ரூ.13 ஆயிரத்து 859 வரை விற்பனையானது. இதே போல் ஈரோடு வெளி மார்க்கெட்டில் 1,807 மூட்டைகள் வரத்தாகின.
இதில் 940 மூட்டைகள் விற்பனையாகின. இதில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 169 முதல் ரூ.13 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது. இதை போல் ஈரோடு சொசைட்டி யில் 905 மூட்டைகள் வரத்தாகின. இதில் 838 மூட்டைகள் விற்பனையானது. இந்த சந்தையில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 819 முதல் ரூ.13 ஆயிரத்து 339 வரை விற்பனையானது.
கோபி சொசைட்டியில் 157 மூட்டைகள் வரத்தாகின. 90 மூட்டைகள் விற்பனையாகின. இந்த சந்தையில் விராலி மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 319 முதல் 13 ஆயிரத்து 169 வரை விற்பனையானது. மஞ்சள் விலை தொடர்ந்து சரிந்து வருவது குறித்து ஈரோடு வியாபாரிகள் கூறியதாவது:- புதுமஞ்சள் வரத்து இல்லாததால் விலை குறைந்துள்ளது.
பழைய மஞ்சள் இருப்பு வைத்துள்ளவர்கள் விலை சரியாக இல்லாததால் விற்பனைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மஞ்சள் குவிண்டால் ரூ.2 ஆயிரம் வரை குறைந்துள்ளது. வரும் நாட்களில் தரமான புதிய மஞ்சள் விற்பனைக்கு வரும்போது மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் மஞ்சள் வணிகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
சில மாநிலங்களில் விளைச்சல் அளவீட்டிற்கு ஏற்ப ஈரோடு மஞ்சள் விலையும் மாறுதலுக்கு உள்ளாகிறது. ஆனாலும் ஈரோடு மஞ்சள் விலை தற்போது சற்று குறைந்திருந்தாலும் மீண்டும் அதிகரிக்கவே செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






