என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிவகிரி தம்பதி கொலை வழக்கு - விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்
    X

    சிவகிரி தம்பதி கொலை வழக்கு - விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்

    • ஏ.டி.எஸ்.பி விவேகானந்தனை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
    • துணை விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் பணி தொடர்வார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்துப் பகுதியில் கடந்த 1-ந் தேதி ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதி கொலை செய்யப்பட்டு 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    அதனைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில் கண்காணிப்பு கேமரா அடிப்படையில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த பழம் குற்றவாளி ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்து வந்த பெருந்துறை டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் திடீரென மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி விவேகானந்தனை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.

    சிவகிரி தம்பதி கொலை வழக்கு விசாரணையை விரைந்து துரிதப்படுத்தி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு டிசம்பர் மாதம் இறுதிக்குள் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தர வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் துணை விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் பணி தொடர்வார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதான ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரின் நீதிமன்ற காவல் வரும் 2-ந் தேதி உடன் முடிவடைகிறது. சிவகிரி இரட்டை கொலை, திருப்பூரில் 3 பேர் கொலை மேலும் சில வழக்குகளில் இவர்கள் 3 பேருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    எனவே இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 2-ந்தேதிக்கு பிறகு மூன்று குற்றவாளிகளையும் நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×