என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகர் சங்க பேரமைப்பு"

    • நிரந்தரக் கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பது அரசாணையில் இருக்கிறது.
    • மார்க்கெட்டில் சுங்க கட்டணத்திற்கு ரசீது கொடுப்பதே இல்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக கடந்த மே 5-ந் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீர்மானங்களை அறிவித்திருந்தார்.

    குறிப்பாக வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 லட்சம் தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தி மீண்டும் ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மே 5-ந் தேதியை வணிகர் தினமாக அரசு அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பழ மார்க்கெட் வாகனம் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதே போன்று சுங்க கட்டணம் வசூலிப்பதற்கும் அரசு அனுமதி அளித்திருக்கிறது.

    சுங்க கட்டணம் என்று சொன்னால் தற்காலிக கடைகளுக்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். நிரந்தரக் கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பது அரசாணையில் இருக்கிறது. ஆனால் இதை அரசுத்துறை அதிகாரிகள் ஏனோதானோ என்று முடிவு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மார்க்கெட் சுங்கம் வசூலிப்பவர்கள் தானாகவே ரவுடிசத்தை கையில் எடுக்க கூடிய சூழ்நிலையும் தமிழக முழுவதும் பல்வேறு மார்க்கெட்டுகளில் இது போன்ற சூழ்நிலைகள் இருக்கிறது. எனவே அரசு இதனை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆணையாளர், அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மார்க்கெட்டில் சுங்க கட்டணத்திற்கு ரசீது கொடுப்பதே இல்லை. அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதற்கு என்ன உள்நோக்கம் இருப்பது என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கம் கேள்வியாக எழுப்புகிறது. இந்த பிரச்சனைக்கு முறையாக நல்ல தீர்வு ஏற்படும் என நம்பிக்கை உள்ளது.

    இல்லையென்றால் மாவட்டம் தோறும் வணிகர் பேரமைப்பின் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தனியார் கட்டிடங்களில் நாங்கள் கடைகளை நடத்துகிறோம். அதற்கு அரசு முறையாக லைசன்ஸ் வழங்கியுள்ளது. அந்த கடைகளுக்கு சுங்க கட்டணம் தேவையில்லை என்பதை அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

    இதை தாண்டி சுங்க கட்டணம் வசூல் செய்வது தேவையற்றது. தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு வருகின்ற ஜூலை மாதம் 22ம் தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு உள்பட 7 அமைப்புகள் சார்பில் தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்ட திட்டங்களை மாற்றி அமைத்து விட்டார்கள். மீண்டும் தமிழகத்தில் வால்மார்ட்டு டி மார்ட் உடன் சேர்ந்து நுழைய சதிவலை பின்னிக் கொண்டிருக்கிறது. இது குறித்து முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகள் முதலில் இலவசம் என்ற பெயரில் கொடுப்பார்கள். தமிழர்களின் ஒட்டு மொத்த வருமானத்தையும் கார்ப்பரேட் நிறுவனம் சுரண்டி கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மின்சார மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்க தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தற்போது ஒருமுனை (சிங்கிள் பேஸ்) போர்டுகளுக்கு ரூபாய் 300-ம் மும்முனை இணைப்புக்கு ரூ.720-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதையும் அதிகப்படுத்திட மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நடவடிக்கைகள் ஏற்கனவே நிதிச்சுமையில் உள்ள வணிகர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதோடு, வணிகத்தை விட்டு வெளியேறும் நிலைமை உருவாகிவிடக்கூடாது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, மின்மீட்டர் வாடகை, மின் இணைப்பு சாதனங்களுக்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றை தவிர்த்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், ஜி.எஸ்.டி துறையில் அமலாக்கத்துறை அனுமதிக்ககூடாது என்பதை வலியுறுத்தியும், அதிகபட்ச 28 சதவிகித வரியை குறைக்க வலியுத்தியும் தென்மண்டலம் சார்பாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா கர்நாடகா உள்ளிட்ட வணிக நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை வருகின்ற ஆகஸ்ட் 5-ந் தேதி அன்று சந்தித்து முறையிட இருக்கின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×