என் மலர்
திண்டுக்கல்
- சால்வையை வீராசாமிநாதனுக்கு அணிவித்து விட்டு திடீரென கத்தியால் அவரை வயிற்றில் குத்தினார்.
- பிடிபட்டவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன் (வயது 55). இவர் சொந்தமாக கல்வி நிறுவனங்கள் நடத்தி வருவதுடன், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். மேலும் தமிழகம், பாண்டிச்சேரியில் பர்னிச்சர் டீலராகவும் இருந்து வருகிறார்.
இவர் வேடசந்தூர் கோவிலூர் பிரிவில் உள்ள தோட்டத்தில் தனது மனைவி தாமரைசெல்வியுடன் வசித்து வருகிறார். இவரது 2 மகன்கள் ஸ்ரீகாந்த், சச்சின் ஆகியோருக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அவர்கள் தந்தையின் தொழிலையே கவனித்து வருகின்றனர். இவரது தோட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தொடர்ந்து கட்சி பணிகள் ஆற்றி வந்தார். தினந்தோறும் தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களுக்கு சென்று முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகளும் வழங்கி வந்தார்.
இதனால் அவரை பார்க்க தினந்தோறும் காலையிலேயே கட்சியினர் தோட்டத்து வீட்டிற்கு வருவது வழக்கம். இன்று காலை அவரது உறவினரான குளத்தூர் காளனம்பட்டியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க வந்தார். அழைப்பிதழை வீராசாமிநாதனிடம் கொடுத்து விட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவருக்கு சால்வை அணிவிக்க வந்தார். சால்வையை வீராசாமிநாதனுக்கு அணிவித்து விட்டு திடீரென கத்தியால் அவரை வயிற்றில் குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு சத்தம் போட்டார். இருந்த போதும் வீராசாமிநாதனின் பின் தலையிலும் குத்தினார். உடனே அருகில் இருந்த நாச்சிமுத்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அப்போது நாச்சிமுத்துவையும் அவர் கத்தியால் குத்தினார்.
இதனை தொடர்ந்து அவர் சத்தம் போடவே அங்கிருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த வீராசாமிநாதன், நாச்சிமுத்து ஆகியோர் உடனடியாக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வீராசாமிநாதன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிடிபட்டவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் எரியோடு பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகன் மணிகண்டன் (27) என தெரியவந்துள்ளது. அவர் எதற்காக கத்தியால் குத்தினார். தேர்தல் முன்விரோதம் காரணமாக குத்தினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீராசாமிநாதனை கத்தியால் குத்திய சம்பவம் அறிந்ததும் ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். பிடிபட்ட வாலிபரின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பல இடங்களில் தற்போதே மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் மற்றும் பேரூராட்சி பகுதிக்கும் அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மழை போதிய அளவு பெய்யாத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் முறையாக ஆங்காங்கே பழுது ஏற்படும் குழாய்களை சரி செய்யாததால் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்லும் சம்பவமும் நடந்து வருகிறது.
இதனை சரி செய்வதற்கு அதிகாரிகளும், பணியாளர்களும் கடுமையாக முயன்றாலும் மற்றொரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இது போன்ற காரணங்களால் கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளை ஆராய்ந்து அதனை சரி செய்ய ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். பல இடங்களில் தற்போதே மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர். பழுதடைந்த சாலைகளில் குழாய் உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வீணாவதோடு சாலைகளும் சேதமடைகிறது. மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
- விராலிபட்டி, நொக்கியோடைபட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பபட்டி,
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல் கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கொசவபட்டி, செம்மடைப்பட்டி கொழிஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தமாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொக்கியோடைபட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கவராயபட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் மின்பகிர்மான செயற்பொறியாளர் பிரகதீஸ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
- வீடியோ வைரலான நிலையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் என தெரிய வந்தது.
கொடைக்கானல்:
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் ஆர்வ மிகுதியில் பல்வேறு வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வது, தடை செய்யப்பட்ட அருவிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்று அதன் அனுபவங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இது போல கடந்த சில நாட்களாக கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் (25) என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வீடியோவில் பதிவு செய்த வாள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இது போன்று வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- விரைவாக செல்லவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்லவும் ரோப் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.
- ரோப்கார் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். விரைவாக செல்லவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்லவும் ரோப் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை ரோப்கார் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் திடீரென மின்னணு பழுது ஏற்பட்டதால் ரோப் கார் இன்று காலை இயக்கப்படவில்லை. இதனால் ரோப் கார் ஊழியர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்தும் ரோப்கார் இயக்க முடியாததால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரெயில் மூலமாக மலைக்கோவில் சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி திடீரென ரோப்கார் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
- சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.
- தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு அவர் விளக்கம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
அதேபோல் செங்கோட்டையனும் அரசியலுக்காக பேசி வருகிறார். அவர் அ.தி.மு.க.வில் இருந்த போது தனிப்பட்ட முறையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த போது பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்தார். தற்போது அவர் பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நயினார் நாகேந்திரன் குறித்தும் பேசி வருகிறார். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் சென்றால் வள்ளலார் ஆட்சி என்பார். தூத்துக்குடி சென்றால் வ.உ.சி. ஆட்சி என்பார். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.
தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது. தனது சொந்த செல்வாக்கில் ஜெயிக்க வேண்டும். மேலும் 30 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகிறார். ஆனால் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். அவர்கள் தி.மு.க.வில் எதுவும் அறுவடை செய்ய முடியுமா என்பதற்காக அங்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
- சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தவசிமேடையில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 800 காளைகளை மண்டல இணை இயக்குனர் விஷ்ணுகந்தன், துணை இயக்குனர் சரவணன், உதவி இயக்குனர்கள் சரவணகுமார், ஜெயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர் பிரபாகர் தலைமையிலான குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.
இதே போல் மாடுபிடி வீரர்கள் 350 பேரை வட்டார மருத்துவ அலுவலர் ஜெனி தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து காளைகளை அடக்க அனுமதித்தனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் 7.40 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் திருமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் விஜயன், கிழக்கு தாசில்தார் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் ரஞ்சித் குமார், வி.ஏ.ஒ. ரிச்சர்டு ஆகியோர் உடன் இருந்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.
அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் குட்டி புலி, வீரா, வெடிகுண்டு, கருப்பு, அசுரன், வெள்ளப் பறவை உள்ளிட்ட பல்வேறு விதவிதமான பெயர்களில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டத்தில் காளையை அடக்கிய பாலகுரு பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் ஆள் மாறாட்டம் செய்வதை தவிர்க்க மாடுபிடி வீரர்களின் கையில் வண்ண கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் உரிமையாளர் பாலமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 22) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவ குழுவினர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில், போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், திண்டுக்கல் டவுன் போலீஸ் டி.எஸ்.பி. கார்த்திக், சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் உள்பட 340 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, அண்டா, குடம், சைக்கிள், குத்து விளக்கு, வயர் கட்டில், குக்கர், பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நர்சரி அமைத்து காரநேசன், கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
கொடைக்கானல்:
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதல் ஜோடிகள் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்து காதலர்கள் கொடைக்கானலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவர்கள் கொடைக்கானலுக்கு வந்து இங்குள்ள பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை, கோக்கர்ஸ் வாக், குணாகுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். மேலும் ஏரியில் அமர்ந்து படகு சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரும்பாலான சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் தனித்தனியாக அமர்ந்து காதல் ரசம் சொட்டச்சொட்ட பேசி மகிழ்ந்தனர்.
காதலர் தினம் என்றாலே அன்பை பரிமாறிக்கொள்ள பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். அதில் ரோஜாவுக்கு முதலிடம் உண்டு. கொடைக்கானல் மலை கிராமங்களான குண்டுபட்டி, கவுஞ்சி, மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நர்சரி அமைத்து காரநேசன், கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. 10 பூக்கள் கொண்ட ஒரு பூங்கொத்து ரூ.100க்கு விற்பனையான நிலையில் இன்று காலையில் ரூ.200க்கு விற்கப்பட்டது. நேரம் செல்லச்செல்ல அந்த பூக்களும் விற்று தீர்ந்ததால் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. இதனால் தாமதமாக வந்த காதலர்கள் தங்களுக்கு ரோஜா கிடைக்க வில்லையே என ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத்தவிர வேறு சில பரிசு பொருட்களையும் காதல் ஜோடிகள் வாங்கி பரிசளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் காதல் ஜோடிகள் குவிந்து தங்கள் பொழுதை கழித்தனர்.
ஆண்டிபட்டி வைகை அணை பூங்காவில் வழக்கமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு காலை முதலே பலர் வரத்தொடங்கினர். காதல் ஜோடிகள் பொது இடங்களில் சுற்றினாலோ, பூங்காவில் அமர்ந்து பொழுதை கழித்தாலோ அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதனால் பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காதலர் தினத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு வேறு தரப்பினர் பூங்காவிற்குள் வரத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 300 கனஅடியாக வந்தது.
- காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 300 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நி லவரப்படி 200 கனஅடியாக குறைந்து வந்தது.
காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகலாகவும் காட்சியளிக்கிறது.
ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- இந்த சம்பவம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் வைரலாகி பரவியது.
- முக்கிய அறிவிப்பு செய்வதற்கான மைக்செட் அறை மலைக்கோவிலில் மட்டுமே உள்ளது.
பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இதில் கூட்ட நேரங்களில் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கவும், உடன் வந்தவர்களை பத்திரமாக அழைத்து செல்வது மற்றும் பக்தர்களுக்கான சேவைகள் மற்றும் முருகன் பக்தி பாடல்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்படும். இதற்காக அடிவாரம், கோவில் படிப்பாதை, யானைப்பாதையில் ஒலிபெருக்கி கட்டப்பட்டுள்ளது.
கடந்த 1-ந்தேதி தைப்பூச திருவிழா நடந்ததையொட்டி கோவிலில் கூட்டம் அலைமோதியது. இதனால் படிப்பாதை, யானைப்பாதையில் ஒலிப்பெருக்கி கட்டி மைக் மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் பழனி முருகன் கோவில் யானைப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் தரிசனம் செய்ய வந்த வாலிபர், மைக்செட்டில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பாடலை ஒலிக்க செய்தார். இந்த சம்பவம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் வைரலாகி பரவியது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராமில் ஒளிபரப்பான அந்த வீடியோவில், யானைப்பாதையில் நிற்கும் வாலிபர், மைக்செட் அமைத்த இடத்தில் ஆள் இல்லாத நேரத்தில் தனது செல்போனில் இருந்த விஜய் பிரசார பாடலை மைக் மூலம் ஒலிபரப்பு செய்தார். அதை மற்றொரு நபர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்,"யானைப் பாதையில் போலீசார் சார்பில் அறிவிப்பு செய்ய மைக்செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தான் விஜய் கட்சியின் பிரசார பாடலை ஒலிக்க செய்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு செய்வதற்கான மைக்செட் அறை மலைக்கோவிலில் மட்டுமே உள்ளது. இந்த சம்பவம் குறித்து அடிவாரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
- தமிழ்நாடு போதை மாநிலமாக மாறியுள்ளது.
- தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் தெற்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. இளைஞரணி தலைவர் சியாம் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு பின் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு போதை மாநிலமாக மாறியுள்ளது. வரும் காலங்களில் மதுபானக்கடைகளை முழுமையாக மூடுவதற்கு புதிய தமிழகம் கட்சி போராடும். தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாக உள்ளது. முக்கிய துறைகளை கையாளும் 4 அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
சமூக நீதி பேசும் அமைச்சர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றனர். வருகிற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அகற்றும் கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெறும். வருகிற தேர்தலில் கூட்டணி ஆட்சியே அமையும் அதில் புதிய தமிழகம் இடம்பெறும்.
எங்கள் கட்சி வருகிற தேர்தலில் தனித்தொகுதி மட்டும் பொதுத் தொகுதிகளில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர். மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடும்ப ஆட்சியும், குடும்ப வாரிசுகளும் செழித்து வளர்ந்து வருகின்றனர். இதற்கு வருகிற தேர்தலில் முடிவு கட்டப்படும்.
நிலக்கோட்டை தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்தர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவிலில் 100-க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் அமைப்பு.
- ஒலிப்பெருக்கியில் திடீரென த.வெ.க. பாடல் ஒலித்ததால் பக்தர்கள் அதிர்ச்சி.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவில், படிப்பாதை, கிரிவலப் பாதை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தவறவிடும் உடமைகள், பொருட்கள், காணாமல் போகும் குழந்தைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்த அறிவிப்புகளை மலைக்கோவில் அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கியில் பேசினால் பழனி மலை மற்றும் அடிவாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒலிப் பெருக்கிகளில் கேட்கும் விதமாக பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பழனி மலைக் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் படிப்பாதையில் உள்ள ஒலிப்பெருக்கியில் தனது செல்போனை இணைத்து அதில் த.வெ.க. பாடலை ஒலிக்கச்செய்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பக்தர்களின் முக்கிய தேவை மற்றும் பிரச்சனைகள் குறித்து அறிவிக்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் முருகன், விநாயகர், சிவன் உள்ளிட்ட தெய்வப் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும் நிலையில் திடீரென த.வெ.க. பாடல் ஒலித்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி கோவிலில் த.வெ.க. பாடல் ஒலிக்கப்பட்டு அது பழனி அடிவாரம் முழுவதும் கேட்டிருக்குமா? அல்லது குறிப்பிட்ட அந்த ஒரு இடத்தில் மட்டும் ஒலிபரப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் கோவிலில் உள்ள ஒலிப்பெருக்கியில் செல்போனை இணைத்து த.வெ.க. பாடலை ஒலிக்கவைத்த இளைஞர் யார்? என்று அடையாளம் கண்டு, அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






