என் மலர்
கடலூர்
விருத்தாசலத்தில் உள்ள புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 63), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் தினமும் விருத்தாசலம் ரெயில்வே நிலைய நடைமேடையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அதுபோல் இன்று காலை வழக்கம்போல் ரெயில்நிலைய நடைமேடையில் ராஜவேல் நடைபயிற்சி செய்தார். பின்னர் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக நடைமேடையை விட்டு இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ராஜவேல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜவேல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராஜவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெருக வாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மகன் சஞ்சீவி பத்மநாபன் (வயது 14) இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சிதம்பரம் பிச்சாவரத்துக்கு சுற்றுலா வந்தான். பின்னர் மாலையில் சஞ்சீவி பத்மநாபன் உள்பட 7 பேர் மாங்குரோவ் காடுகளை பார்ப்பதற்காக ஒரு படகில் சென்றனர்.
அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக அதே படகில் கரைக்கு திரும்பினர். படகு கரைக்கு வந்ததும் ஒவ்வொருவராக படகில் இருந்து கீழே இறங்கினர். சஞ்சீவி பத்மநாபன் படகில் இருந்து இறங்கியபோது திடீரென்று அவனை மின்னல் தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த சஞ்சீவி பத்மநாபனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சஞ்சீவி பத்மநாபன் பரிதாபமாக இறந்தான். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே ரெட்டிச் சாவடியை அடுத்த பெரிய காட்டுபாளையத்தில் மழை கொட்டியது அங்குள்ள புளியமரத்தில் மின்னல் தாக்கியது.
இதில் மரத்தடியில் மழைக்காக ஒதுங்கி நின்ற அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (51), செல்வம் (47) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பண்ருட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 1 மணி நேரம் கடும் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் வல்லம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 2 பசுமாடுகளும், பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்த கோபால், சாந்தி மற்றும் நெல்லிக்குப்பத்தை அடுத்த எய்தூரை சேர்ந்த நாகப்பன் ஆகியோருக்கு சொந்தமான தலா 1 பசுமாடுகள் மின்னல் தாக்கியதில் உடல் கருகி இறந்தது.
மின்னல் தாக்கியதில் பண்ருட்டியை அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், திருவதிகை செட்டிப்பட்டு காலனியை சேர்ந்த சங்கர் ஆகியோரின் கூரை வீடுகள் தீ பிடித்து எரிந்தன. அக்கப்பத்தினர் உதவியுடன் தீ உடனடியாக அனைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று மழை கொட்டியது. விழுப்புரத்தில் மாலை 4 மணிக்கு வானத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம புறங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
இந்த மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் விழுப்புரம்-புதுச்சேரி சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திண்டிவனம் காமராஜ் நகர், ஈஸ்வரன் கோவில் தெரு உள்பட பல்வேறு இடங்களில் இருந்த மரங்கள் முறிந்து அங்குள்ள மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சுசீலா(வயது45). இவர்களது மகன் ராஜசேகரன் (31).
ராஜசேகரன் அதே பகுதியை சேர்ந்த லீலாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒருவயதில் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ராஜசேகரன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். முத்தாண்டிக்குப்பத்தில் சுசீலா மற்றும் லீலாவதி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த ராஜசேகரனிடம் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தாய் சுசீலாவின் நடத்தைப்பற்றி தவறாக கூறினர். இதனால் ராஜசேகரன் மனவேதனை அடைந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜசேகரன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அப்போதும் சிலர் அவரிடம், உன் தாயாரின் நடத்தை சரிஇல்லை என்று புகார் கூறினார்கள். இதனால் ராஜசேகரன் தனது தாய் மீது ஆத்திரம் அடைந்தார்.
நேற்று அவர் தனது தாய் சுசீலாவிடம் இது குறித்து கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகரன் தாய் சுசீலாவை தாக்கினார். பின்னர் அவரது கழுத்தை பிடித்து நெரித்தார்.சிறிது நேரத்தில் சுசீலா மயங்கி கீழே விழுந்தார்.இதைப்பார்த்ததும் ராஜசேகரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் சுசீலாவை மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் சுசீலா இறந்து விட்டார்.
இந்த கொலை குறித்து பேர்பெரியான்குப்பம் கிராம நிர்வாக அதிகாரி செந்தமிழ் செல்வன் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் ,சப்-இன்ஸ்பெக்டர் விஜய்பாஸ்கர் ஆகியோர் சுசீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாயை கழுத்தை நெரித்து மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அமராவதி (வயது 15). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அமராவதி முதனை பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஊ.மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அமராவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அமராவதியின் தந்தை முருகன் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகள் அமராவதியை கணித பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக பள்ளி ஆசிரியை திட்டி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் யாருடனும் பேசாமல் சோகமாகவே காணப்பட்டாள். மனமுடைந்த அவள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சி.சி.டி.வி கேமராவில் பதிவான வீடியோவை தினகரன் வெளியிட வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பஸ் நிலையம் எதிரே புதியதாக மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடலூருக்கு இன்று மதியம் வந்தார்.
அப்போது அவரிடம் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வீடியோ எங்களிடம் உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவோம் என்று டி.டி.வி.தினகரன் கூறியதை பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு சி.சி.டி.வி கேமராவில் பதிவான வீடியோவை வைத்து அவர்கள் பூஜையா செய்யப்போகிறார்கள். அதை வெளியிட வேண்டியது தானே என ஆவேசத்துடன் அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கூறினார்.
கடலூர் வடக்கு ராமாபுரம் வெள்ளக்கரை பகுதியை சேர்ந்தவர் வினோத்பாபு (வயது 17). இவர் கடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று மாலையில் வினோத்பாபும், அவரது நண்பர் வெங்கடேசனும் வெள்ளக்கரையில் இருந்து கடலூர் வந்த தனியார் பஸ்சில் பயணம் செய்தனர். அந்த பஸ் எம்.புதூர் பஸ்நிறுத்தம் அருகே வந்து நின்றது.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜூ, விஷ்ணு உள்பட 10 பேர் சேர்ந்து மாணவர் வினோத்பாபு, வெங்கடேசன் ஆகியோரை தாக்கினர். இதில் வினோத்பாபு படுகாயம் அடைந்தார். அவர் கடலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தசம்பவம் தொடர்பாக வெங்கடேசன் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குபதிவு செய்து ராஜூ, விஷ்ணு உள்பட 10 பேரை தேடி வருகின்றார்.
இதேபோல் கடலூர் எம்.புதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா(19). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.
ஜீவா வண்டிப் பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றபோது வினோத் பாபுவின் ஆதரவாளர்கள் தர்மேந்திரா உள்பட 8 பேர் சேர்ந்து ஜீவாவை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஜீவா கொடுத்த புகாரின் பேரில் தர்மேந்திரா உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது45). கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்செல்வி(32).
சண்முகத்துக்கு மது குடிக்கும்பழக்கம் இருந்தது. அவர் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி தமிழ்செல்வியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறுஏற்பட்டது. நேற்று மாலையிலும் சண்முகம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரை ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறீர்கள் என்று தமிழ் செல்வி கண்டித்தார்.
இதனை தொடர்ந்து மனைவியிடம் சண்முகம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சண்முகம், மனைவி தமிழ்செல்வியின் கழுத்தை நெரித்து கீழே தள்ளினார்.
பின்னர் அவரது கழுத்தில் காலால் மிதித்தார். இதில் சிறிது நேரத்தில் தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை அறிந்ததும் சண்முகம் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று வீட்டில் பிணமாக கிடந்த தமிழ்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறனர்.
குடிபோதையில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் முதுநகர் வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் கற்பகவல்லி (வயது20).இவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டுபடித்து வருகிறார்.
நேற்று மாலையில் அவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் கவலை அடைந்த முத்து மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் கற்பகவல்லியை காணவில்லை.
இதனை தொடர்ந்து அவர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி எங்கு சென்றார் என தேடி வருகிறார்கள்.
பண்ருட்டி:
புதுவை மாநிலம் தவளக்குப்பத்தை சேர்ந்தவர் ரவி (35) இவர் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று அதே கம்பெனியில் வேலை செய்யும் கண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் என்பவருடன் பண்ருட்டிக்கு வந்தார்.
பின்னர் மாலை 3.30 மணியளவில் பண்ருட்டி -கும்பகோணம் சாலையின் ஓரத்தில் அவர்கள் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பண்ருட்டி நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி திடீரென்று அவர்கள் மீது மோதியது.
இதில் ரவி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மணிகண்டன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மணிகண்டன் உயிரிழந்தார். விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பொயனை பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவரது மனைவி அலமேலு(வயது45).
நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 3 மணிஅளவில் மர்ம மனிதர்கள் ராமலிங்கம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு படுத்து தூங்கிகொண்டிருந்த அலமேலு கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி செயினை பறித்தனர்.
அப்போது திடுக்கிட்டு எழுந்த அலமேலு கூச்சல் போட்டு அலறினார்.அப்போது நகை பறித்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ராமலிங்கம் சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை தேடிவருகிறார்கள்.
வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று கும்பகோணம் நோக்கி நேற்று புறப்பட்டது. இந்த பஸ்சை வேலூரைச் சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (வயது 56) ஓட்டி வந்தார்.
நேற்று இரவு 10.30 மணிக்கு கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குசாலை பெட்ரோல் பங்க் அருகே அந்த பஸ் வந்தது. அப்போது சேத்தியாத்தோப்பில் இருந்து வடலூரை நோக்கி வேகமாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரியின் முன்பகுதியும் சேதமடைந்தது. விபத்தில் அரசு பஸ் டிரைவர் விஜயகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தில் ஆனத்தூரை சேர்ந்த துளசிமணி (18), வேலூரை சேர்ந்த கண்டக்டர் புனிதன் (51), குள்ளஞ்சாவடி புலியூர் காலனியை சேர்ந்த பிரகாஷ் (36), ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராகநல்லூரை சேர்ந்த தேவதாஸ் (22), தஞ்சாவூரை சேர்ந்த வெங்கடேசன் (40), சேத்தியாத்தோப்பை சேர்ந்த கவிதா (39), சோழத்தரத்தை சேர்ந்த சக்திவேல் (53), கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சிநகரை சேர்ந்த பாஸ்கர் (42), முடிகண்டநல்லூரை சேர்ந்த கவுதமன் (26), காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரானந்தபுரத்தை சேர்ந்த கமலகண்ணன் (45), விழுப்புரம் மாவட்டம் பள்ளிப்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் குமரவேல் (38 உள்பட 35 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்சந்தோஷ்முத்து, இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர்.
அவர்கள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கமலக்கண்ணன் என்பவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்துக்குள்ளான பஸ்சும், லாரியும் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம். இவரது மகன் சஞ்சய்குமார் (வயது17).இவர் நெய்வேலி புதுநகர் 5-வது வட்டத்தில் உள்ள மத்திய கல்வி திட்ட பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
தினமும் மாணவர் சஞ்சய்குமார் சைக்கிளில் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தார். கடந்த 18-ந்தேதி காலை வழக்கம் போல் சஞ்சய்குமார் பள்ளி சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் கவலை அடைந்த சிவபிரகாசம் மகனை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் சஞ்சய் குமாரை காணவில்லை.
இதனை தொடர்ந்து அவர் நெய்வேலி டவுன்சிப் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகிறார்கள்.






