என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, உறையூர், ஸ்ரீமுஷ்ணம், கானூர், விருத்தாசலம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
விருத்தாசலம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் அங்கம்மாள் (40). இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். பண்ருட்டி லிங்க் ரோட்டில் வசிக்கும் ஸ்ரீதர் என்பவரின் மகன் ஹரிஷ் (2) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தான்.
மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்கம்மாள், ஹரிஷ் ஆகிய 2 பேர் இறந்துள்ளனர். கடந்த 28-ந் தேதி கடலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விட்டனர். மேலும் 6 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதத்தில் விழுப்புரம் அருகே கல்பட்டை சேர்ந்த சின்னப்பன் ராபர்ட் (35), மரக்காணம் மந்தவாய் சுரேஷ் (40), சின்னசேலம் காந்திநகர் விஷ்ணுபிரியன் (6), சங்கராபும் அமுதா (35) ஆகிய 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர், நத்தம்மேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகள் நிவேதா (5) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாள்.
கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த கிருஷ்ணன் (34) என்பவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் அருகே உள்ளது டி.புதுப்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 58). மாட்டு வண்டி தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று மாலை சக்கரபாணி தனது மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்காக நெல்லிக்குப்பம் அருகே திருமாணிக்குழி கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றுக்கு சென்றார். அப்போது அவருடன் அவரது பேரன் சரத்குமார் (10) என்பவனும் உடன் சென்றான்.
திருமாணிக்குழி மாரியம்மன் கோவில் அருகே அவர்கள் சென்ற போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சக்கரபாணி ஓட்டிச் சென்ற மாட்டு வண்டியை மறித்தனர். அவரிடம் மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சக்கரபாணிக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த போலீசார் ஹெல்மெட்டால் தொழிலாளி சக்கரபாணியின் தலையில் தாக்கினர். இதில் சக்கரபாணி அதே இடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதையறிந்ததும் அங்கிருந்து போலீசார் தப்பி சென்று விட்டனர். போலீசார் தாக்கியதில் சக்கரபாணி இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கும், டி.புதுபாளையம் கிராம மக்களுக்கும் தெரிய வந்தது.
உடனே 100-க்கும் மேற்பட்ட ஆண்-பெண்கள் திருமாணிக்குழிக்கு திரண்டு வந்தனர். இறந்து கிடந்த சக்கரபாணியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவர்கள் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் நடுவீரபட்டு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். சக்கரபாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.
ஆனால், அங்கிருந்த உறவினர்களும், கிராம மக்களும் அவரது உடலை எடுக்க விடாமல் தடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பொதுமக்கள், “சக்கரபாணி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளிகளிடம் மாமூல் கேட்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்கரபாணியை தாக்கிய 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கடலூர் தாசில்தார் பாலமுருகன் வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு பொதுமக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். அதனை ஏற்க பொதுமக்கள் மறுத்தனர். “போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தால்தான் உடலை இங்கிருந்து எடுக்க அனுமதிப்போம்” என்று கூறினார்கள்.
பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம், போலீஸ் துணை சூப்பிரண்டு நரசிம்மன் ஆகியோர் அங்கு வந்தனர். “பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு போடப்படும்” என உறுதி அளித்தனர்.
அதனை ஏற்று சக்கரபாணியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கொண்டு செல்ல பொதுமக்கள் சம்மதித்தனர். பின்னர் சக்கரபாணியின் உடல் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதை யொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலை சந்திப்பில் 6 அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவு திடீரென்று அந்த எம்.ஜி.ஆர். சிலை துணியால் மூடப்பட்டது. மேலும் அந்த சிலை இருந்த இடத்தை சுற்றிலும் தட்டிகள் வைத்து கட்டப்பட்டது.
எம்.ஜி.ஆர். சிலை பராமரிப்பு பணிக்காக மூடி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறினர்.
இன்று திடீரென்று எம்.ஜி.ஆர். சிலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
இன்று சென்னையில் இருந்து கார் மூலம் டி.டி.வி. தினகரன் விருத்தாசலம் வழியாக அரியலூர் சென்றார். அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் அ.தி.மு.க. (அம்மா) அணி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் விருத்தாசலம் பாலக்கரையில் குவிந்தனர்.
டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் பாலக்கரை பகுதியில் குவிந்ததால் அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க எம்.ஜி.ஆர். சிலை அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
கடலூரில் நேற்று காலையில் லேசான மழை பெய்தது. ஆனால் இடி-மின்னலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மின்னல் தாக்கியதில் கடலூர் முதுநகர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க விற்பனையாளர் வசந்தி(வயது 36), செயலாளர் ராமசாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலை ஆக்ரோஷத்துடன் பல அடி உயரத்துக்கு பொங்கி எழுந்து கரையை நோக்கி பல அடி தூரத்துக்கு சீறிப்பாய்ந்தது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பண்ருட்டியில் 20.70 மில்லி மீட்டரும், மே.மாத்தூர், காட்டுமயிலூர் ஆகிய இடங்களில் தலா 5 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. இது தவிர வானமாதேவி 15.80, வேப்பூர் 10, குப்பநத்தம் 8.40, விருத்தாசலம் 6, கடலூர் 5.40 மில்லி மீட்டர் மழை பதிவானது.
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. அதன் பிறகும் நேற்று காலை வரை விட்டு விட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது.
இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினார்கள்.
இதேபோல் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் கி.கே.மண்டபத்தை சேர்ந்த விவசாயியான பாண்டுரங்கன் (வயது 55) என்பவர் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
மேலும் அவருடைய கொட்டகையில் நின்ற மாடு ஒன்று செத்தது. இதையடுத்து படுகாயம் அடைந்த பாண்டுரங்கனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
கடலூர்:
தமிழக வாழ்வுரிமை கட்சி கடலூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் இன்று கடலூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறந்தது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் முழு உண்மைகள் வெளிவராது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் தினமும் ஜெயலலிதா இறப்பு குறித்து வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
தமிழக அரசும், மத்திய அரசும் முழு விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும். மேலும் ஜெயலலிதா இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
நீட் தேர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய அரசு காலில் தமிழக அரசு விழுகிறது. எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் முன்வந்து பதவி விலக வேண்டும்.
தமிழக கவர்னர் சட்ட மன்றத்தில் அ.தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி உள்ளதா? என்பதை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, உறையூர், ஸ்ரீமுஷ்ணம், கானூர், விருத்தாசலம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தைச் சேர்ந்த சுபா (வயது 28) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகி உள்ளார். விருத்தாசலம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை. வியாபாரி. இவரது மனைவி அங்கம்மாள் (40).
கடந்த சில நாட்களாக இவர் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அங்கம்மாளுக்கு ரத்த பரிசோதனை செய்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை அங்கம்மாள் பரிதாபமாக இறந்தார்.
மேலும் கடலூரை அடுத்த பண்ருட்டி அருகே உள்ள உறையூரைச் சேர்ந்த மதியழகன் (32), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மோனிஷா (22) ஆகியோரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பெண்ணாடம் அருகே உள்ள துரையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 35). இவர் இன்றுகாலை தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது திடீரென அவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது. தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.
அந்த நேரத்தில் காற்று அதிகமாக அடித்ததால் செந்தில்குமார் வீட்டின் அருகே இருந்த பழனிவேல் மற்றும் பரமசிவம் ஆகியோரின் கூரை வீட்டிற்கும் தீ பரவியது. ஆகையால் 3 வீடுகளும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது செந்தில்குமார் மற்றும் பழனிவேல் வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் அதிர்ச்சியடைந்த அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, மகேந்திரன் உள்ளிட்ட 5 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பாகவே 3 கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
தீ விபத்தில் எரிந்து சாம்பலான பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். எப்படி தீவிபத்து நடந்தது, என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெண்ணாடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டிசாவடி பகுதியில் கஸ்டம்ஸ் சாலை உள்ளது. இன்று காலை அந்த பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருநங்கை ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (36), கூலி தொழிலாளி. இவரது மனைவி சுபா (28).
இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுபாவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே அவரை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நன்றாக உள்ளது. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் சுபாவுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது.
உடனே அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுபாவை பரிசோதித் தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரவு சுபா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுகாதாரதுறை இணை இயக்குனர் ஜவகர் கூறியதாவது:-
டெங்குகாய்ச்சலால் இறந்த பெண்ணின் சொந்த ஊரான கானூரில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று சோதனை செய்தனர். அப்போது 52 பேரை பரிசோதித்ததில் ஒருவருக்கு மட்டும் காய்ச்சல் அறிகுறி இருந்தது. அதுவும் சாதாரண காய்ச்சல்தான். 10 பேருக்கு சளி, இருமல் இருந்தது. யாருக்கும் டெங்கு அறிகுறி தென்படவில்லை. இருப்பினும் மருத்துவ குழுவினர் அந்த கிராமத்தில் தொடர்ந்து முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் து.கீழனூர், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் என்.எல்.சி. 2-வது சுரங்கம் அமைந்துள்ளது. இங்கு தோண்டப்படும் மணல்கள் அந்த பகுதிகளில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக அந்த மணல் மேடு அமைந்துள்ளது.
மழை பெய்யும் நேரங்களில் மணல்மேடு கரைந்து விவசாய நிலங்களில் படிந்து வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்தநிலையில் நேற்று மதியம் விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் மணல்மேடு கரைந்து அங்குள்ள வாய்க்காலை மூழ்கடித்தது. இதனால் மழைநீர் வெள்ளம்போல் ஓடி அங்குள்ள வயல்களில் நிரம்பி வடிந்தது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இன்று காலை வயல்களுக்கு சென்ற விவசாயிகள் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இன்று காலை 7.40 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விருத்தாசலம்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் எங்கள் வயல்களில் பயிரிட்டிருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. என்.எல்.சி.சுரங்க மண் வயல்களில் படிந்துள்ளதால் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு என்.எல்.சி.அதிகாரிகள் வந்து நஷ்ட ஈடு வழங்கும் வரை இங்கிருந்து கலைந்து செல்லமுடியாது என்று கூறினர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சாலைமறியலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் திடீரென்று தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெய் எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது மறியலை கைவிட்டு சாலையோரம் நின்றனர்.
விவசாயிகளின் இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
பண்ருட்டி குற்றவியியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் முன்னிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆகியோர் ஏற்கனவே ஆஜராகினர்.
தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. முடிவில் இரண்டு தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்ட நீதிபதி கணேஷ் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று நீதிபதி கணேஷ் தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் குற்றசாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கில் இருந்து ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி உட்பட 49 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நெப்போலியன் மீது உள்ள வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளதால் அவருக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறினார்.






