என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமூல் கொடுக்க மறுத்த மாட்டு வண்டி தொழிலாளியை அடித்து கொன்ற போலீசார்
    X

    மாமூல் கொடுக்க மறுத்த மாட்டு வண்டி தொழிலாளியை அடித்து கொன்ற போலீசார்

    கடலூர் அருகே மாமூல் கொடுக்க மறுத்த மாட்டு வண்டி தொழிலாளியை போலீசார் அடித்து கொன்றதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ளது டி.புதுப்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 58). மாட்டு வண்டி தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று மாலை சக்கரபாணி தனது மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்காக நெல்லிக்குப்பம் அருகே திருமாணிக்குழி கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றுக்கு சென்றார். அப்போது அவருடன் அவரது பேரன் சரத்குமார் (10) என்பவனும் உடன் சென்றான்.

    திருமாணிக்குழி மாரியம்மன் கோவில் அருகே அவர்கள் சென்ற போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சக்கரபாணி ஓட்டிச் சென்ற மாட்டு வண்டியை மறித்தனர். அவரிடம் மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து சக்கரபாணிக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த போலீசார் ஹெல்மெட்டால் தொழிலாளி சக்கரபாணியின் தலையில் தாக்கினர். இதில் சக்கரபாணி அதே இடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    இதையறிந்ததும் அங்கிருந்து போலீசார் தப்பி சென்று விட்டனர். போலீசார் தாக்கியதில் சக்கரபாணி இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கும், டி.புதுபாளையம் கிராம மக்களுக்கும் தெரிய வந்தது.

    உடனே 100-க்கும் மேற்பட்ட ஆண்-பெண்கள் திருமாணிக்குழிக்கு திரண்டு வந்தனர். இறந்து கிடந்த சக்கரபாணியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவர்கள் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் நடுவீரபட்டு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். சக்கரபாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

    ஆனால், அங்கிருந்த உறவினர்களும், கிராம மக்களும் அவரது உடலை எடுக்க விடாமல் தடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது பொதுமக்கள், “சக்கரபாணி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளிகளிடம் மாமூல் கேட்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்கரபாணியை தாக்கிய 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கடலூர் தாசில்தார் பாலமுருகன் வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு பொதுமக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். அதனை ஏற்க பொதுமக்கள் மறுத்தனர். “போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தால்தான் உடலை இங்கிருந்து எடுக்க அனுமதிப்போம்” என்று கூறினார்கள்.

    பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம், போலீஸ் துணை சூப்பிரண்டு நரசிம்மன் ஆகியோர் அங்கு வந்தனர். “பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு போடப்படும்” என உறுதி அளித்தனர்.

    அதனை ஏற்று சக்கரபாணியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கொண்டு செல்ல பொதுமக்கள் சம்மதித்தனர். பின்னர் சக்கரபாணியின் உடல் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதை யொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×