search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி 3 பேர் காயம்
    X

    கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி 3 பேர் காயம்

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. அப்போது மின்னல் தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
    கடலூர்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

    கடலூரில் நேற்று காலையில் லேசான மழை பெய்தது. ஆனால் இடி-மின்னலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மின்னல் தாக்கியதில் கடலூர் முதுநகர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க விற்பனையாளர் வசந்தி(வயது 36), செயலாளர் ராமசாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலை ஆக்ரோ‌ஷத்துடன் பல அடி உயரத்துக்கு பொங்கி எழுந்து கரையை நோக்கி பல அடி தூரத்துக்கு சீறிப்பாய்ந்தது.

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.  பண்ருட்டியில் 20.70 மில்லி மீட்டரும், மே.மாத்தூர், காட்டுமயிலூர் ஆகிய இடங்களில் தலா 5 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. இது தவிர வானமாதேவி 15.80, வேப்பூர் 10, குப்பநத்தம் 8.40, விருத்தாசலம் 6, கடலூர் 5.40 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. அதன் பிறகும் நேற்று காலை வரை விட்டு விட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது.

    இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினார்கள்.

    இதேபோல் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் கி.கே.மண்டபத்தை சேர்ந்த விவசாயியான பாண்டுரங்கன் (வயது 55) என்பவர் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    மேலும் அவருடைய கொட்டகையில் நின்ற மாடு ஒன்று செத்தது. இதையடுத்து படுகாயம் அடைந்த பாண்டுரங்கனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    Next Story
    ×