என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வேளாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 61). விவசாயி.
இவர் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள வேப்ப மரத்தில் திடீரென்று ஏறினார்.
அவரது கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வைத்திருந்தார். மரத்தின் மேல் ஏறி நின்ற அவர், நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த தகவல் காட்டுமன்னார்கோவில் போலீசுக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மரத்தில் ஏறி நின்ற இந்திரஜித்தை கீழே இறங்குமாறு கூறினர்.
அப்போது இந்திரஜித், “விவசாய பாசனத்துக்காக கல்லணை மற்றும் கீழணையில் இருந்து உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போதுதான் கீழே இறங்குவேன்” என்றார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த விவசாய சங்க தலைவர் இளங்கீரன், “பாசனத்துக்காக இன்னும் 3 நாட்களில் தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்” என்று இந்திரஜித்திடம் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட இந்திரஜித் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். அப்போது போலீசார் அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம் அருகே உள்ள கச்சிபெருமாநத்தம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு விருத்தாசலத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கச்சிபெருமாநத்தம்- விருத்தாசலம் இடையே உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வீடுகள் முன்பும், சாலையில் உள்ள பள்ளங்களிலும் மழைநீர் தேங்கியது. அதில் இருந்து அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகியது.
இந்த நிலையில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து வீடுகள் முன்பும், சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரியும், மர்மகாய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவ முகாம் நடத்தக்கோரியும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை கச்சிபெருமாநத்தம் கிராம மக்கள், தங்கள் வீடுகள் முன்பு தேங்கியுள்ள தண்ணீரிலும், சாலைகளில் தேங்கிய கழிவுநீரிலும் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மே.மாத்தூர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக் கட்டில் இருந்து பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலத்துக்கு தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில் கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தால் மணிமுக்தாற்றில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இளங்கியனூர், நல்லூர் தரைப்பாலம், பரவலூர் தரைப்பாலம் ஆகியன வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அண்ணாநகர், கலரங்குப்பம், எருக் கன்குப்பம், இருளர் தெரு, சேனக்குப்பம் உள்பட 30 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் மே.மாத்தூர் அணைக் கட்டுக்கு வந்த தண்ணீர் ராஜவாய்க்காலில் நேற்று மாலை பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது.
இந்த ராஜவாய்க்கால் தூர்வாரப்படாததால் அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த வெள்ளத்தால் சுமார் 500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோவிலானூர் பகுதியை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் அருமைநாதன் (வயது 28). கூலித்தொழிலாளி. திருமணமாகாதவர்.
இந்தநிலையில் அருமை நாதன் கடந்த 6 நாட்களாக காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதையடுத்து அவரை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்த தட்டு அணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அவரை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி அங்கு அனுமதிக்கப்ட்ட அருமைநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக நேற்று மாலை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அருமைநாதன் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த மங்கலம் பேட்டை சுகாதாரத்துறையினர் கோவிலானூர் பகுதியில் முகாமிட்டனர். அந்த பகுதியில் வேறு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் கோவிலானூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.வான கலைச்செல்வன் அ.தி.மு.க.தினகரன் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்தை சந்தித்து தனது தொகுதியில் மேற் கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து மனுகொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு நோயால் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் இறந்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது.
12 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பரவும் வரை இந்த ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள். அவர்கள் தங்களது பதவியை தக்க வைத்துக்கொள்வதிலே கவனம் செலுத்துகிறார்கள். மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை ஏமாற்றி விட்டது.
சசிகலா கூறியதால்தான் நாங்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக வாக்களித்தோம். எனவே அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது அனைத்தும் சரிதான்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது நானும் அவரை ஆஸ்பத்திரியில் பார்க்கவில்லை.
இந்த அரசு ஆட்சியாளர்கள் மற்றும் சில அமைச்சர்களின் நோக்கம் தவறாக உள்ளது. கட்சியினர் மீது பொய்வழக்கு பதிவு செய்கின்றனர்.
எனது தொகுதியில் 1 கோடிக்கு சாலைபணிகள் திட்டமிடப்பட்டது. தற்போது அந்த பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களது பதவியை பறிக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.
இந்த அரசை மக்கள் விரைவில் புறம் தள்ளுவார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும், மீண்டும் எம்.எல்.ஏ.க்களாக சட்டசபைக்கு வருவார்கள். இரட்டை இலை சின்னத்தை முடக்கவேண்டும் எனக்கூறிய பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரம் கூட்டுறவு சங்க துணைப்பதிவாளராக ஜெகன்மோகன் பணியாற்றி வருகிறார். இவர் வணிக குற்றவியல் புலனாய்வு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரியிடம் புகார் மனு கொடுத்தார்.
சிதம்பரத்தை அடுத்த நந்திமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை போலியாக சிட்டா அடங்கல் பயன்படுத்தி பயிர்காப்பீட்டு திட்டத்தில் 10 லட்சத்து 5 ஆயிரத்து 434 ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி கடலூர் வணிக குற்றவியல் புலனாய்வு துறை போலீசாரிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ரங்கநாதன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிகள் இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, ராஜமோகன் மற்றும் சுந்தரமூர்த்தி, மோகன், ஆறுமுகம், கவியரசு, ஜெயகாந்தன், ரவிசந்திரன், ராஜசேகர், சுகந்தி ஆகிய 12 பேரும் சேர்ந்து கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரங்கநாதன், கிருஷ்ண மூர்த்தி, ராஜமோகன், ஆறுமுகம், கவியரசு, ஜெய காந்தன், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்கள், கொலைகள், கொலை முயற்சிகள், கொள்ளைகள், தொடர் மது கடத்தல் நடந்து வந்தது.
இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். குற்றசெயலில் ஈடுபட்டவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளில் 100 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 ரவுடிகள் மற்றும் திருட்டு, வழிப்பறி வழக்குகள் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த லால் என்கிற சங்கர் லால், சேலத்தைச் சேர்ந்த சுரேஷ், தஞ்சையைச் சேர்ந்த பாடலி உள்ளிட்ட 23 கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த கடலூர், புதுவையைச் சேர்ந்த 32 பேரும், மணல் கொள்ளைத் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் சிவமணி, போதை பொருள் கடத்தல் தொடர்பாக விருத்தாசலம் சிவக்குமார், திட்டக்குடி கிருஷ்ணன் ஆகியோரும் குண்டர் சட்டத்தில் கைதானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
3 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த டி.புடையூர் மணிவேல் என்பவரும் குண்டர் சட்டத்தில் கைதானார். மாவட்டம் முழுவதும் 2 ஆண்டுகளில் 100 பேரை கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
இதன்மூலம் புதுவை ரவுடிகள் மற்றும் கடலூர் மாவட்ட ரவுடிகள் குற்ற செயல்களை குறைத்து கட்டுப்பாட்டில் வைத்து வருகிறோம். இதுபோன்ற அதிரடி நடவடிக்கை எடுப்பது மூலம் அணைத்து குற்ற செயல்களும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.
இனி வருங்காலங்களில் குற்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பண்டிகை நாட்கள் தற்போது வரவுள்ளதால் குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷ்ணிசந்திரா, தாசில்தார் பன்னீர்செல்வம், துணை தாசில்தார் முருகன் ஆகியோர் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதி வழியாக வெள்ளாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 6 லாரிகளை கோட்டாட்சியர் சந்தோஷ்ணிசந்திரா தலைமையிலான வருவாய் துறையினர் பிடித்து பறிமுதல் செய்து ஒரு லாரிக்கு ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து லாரிகளை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஆனால் இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு உளுந்தூர்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது.
உளுந்தூர்பேட்டை, காட்டுநெமிலி, பு.கிள்ளனூர், உளுந்தாண்டவர் கோவில், ஆசனூர் போன்ற பகுதிகளில் இரவு 10 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது.
இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.
உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர்ந்து இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால் அங்குள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விருத்தாசலம், கருவேப்பலங்குறிச்சி, ஆலடி, மங்களம்பேட்டை, கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், பெண்ணாடம், திட்டக்குடி போன்ற பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள ஓடைகளில் தண்ணீர் பெருகி விருத்தாசலம் மணிமுத்தாற்றில் கலந்து ஓடுகிறது. கடலூர் மற்றும் சிதம்பரம், பண்ருட்டி பகுதியில் லேசான தூறல் மழை பெய்தது. இன்று காலையில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலூரில் நேற்று இரவு 9 மணி முதல் திடீரென்று சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. மழையால் நகரின் பிரதான சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் பள்ளமான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது.
பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், அண்ணா கிராமம் போன்ற பகுதிகளில் இரவு 11 மணி முதல் மணி பெய்யத் தொடங்கியது.
இந்த மழை விடிய விடிய பெய்தது. பல இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. பல்வேறு இடங்களில் இரவில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், மங்களம் பேட்டை, கம்மாபுரம், மந்தாரக்குப்பம், பூ.மங்கலம் போன்ற பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது.
பெண்ணாடம்-திட்டக்குடி சாலையில் சூறாவளி காற்றில் 3 மின் கம்பங்கள் கீழே சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இன்று காலை வரை அந்த பகுதியில் மின்விநியோகம் செய்யப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக மழை பெய்தது. இரவு 10 மணி முதல் 12 மணி வரை விழுப்புரம், காணை, கோலியனூர், விக்கிரவாண்டி போன்ற பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் தரைப்பாலம் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
விழுப்புரம் தீயணைப்பு நிலையம் அருகேயும் மழை நீர் தேங்கியது. உளுந்தூர்பேட்டை, கச்சிராயப்பாளையம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் விடிய விடிய இடியுடன் பலத்த மழை கொட்டியது.
மழையின் போது உளுந்தூர்பேட்டை பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் பகுதியில் 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
தற்போது கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 12 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டு டெங்கு அறிகுறிகள் இருக்கிறதா என கண்டறியப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோயை கண்டறிவதற்கு பயன்படும் ரசாயனத்தில் ஒன்றான என்.எஸ்.1 என்கிற வகை ரசாயனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை மேற்கொள்ள வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெளியில் உள்ள தனியார் ஆய்வு கூடங்களில் சென்று விசாரித்தால் ரத்த பரிசோதனைக்கு ரூ.500 முதல் ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
மேலும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனித்தனி வார்டுகள் உள்ளன.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் போதிய படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வருவதை படத்தில் காணலாம்.
தற்போது உள் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுத்து நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நோயால் அல்லல் பட்டு வரும் நோயாளிகள் கொசுக் கடி, கடும் குளிர் போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி லிங்க் ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் அ.தி.மு.க. பிரமுகர் பிரகாஷ். இவரது மகன் திவாகர்(வயது 15). இவரும் பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் ஜெயப்பிரியா நகரில் சலூன் நடத்தி வரும் வெங்கடேசன் என்பரது மகன் ஹரிகேஷ் (15), வாழப்பட்டை சேர்ந்த மோகேஷ் (14) ஆகிய 3 பேரும் பண்ருட்டி லிங் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இவர்கள் மூவரும் நேற்று கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திருவதிகை அணை கட்டு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு அணையின் மேலே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆற்று தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான புதைகுழியில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.
பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் ஆற்றில் இறங்கி மாணவர்களின் உடலை தேடினார்கள். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு, தாசில்தார் விஜய் ஆனந்து ஆகியோர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 பேர் உடலை மீட்டனர்.






