என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி
    X

    விருத்தாசலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி

    டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் கோவிலானூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோவிலானூர் பகுதியை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் அருமைநாதன் (வயது 28). கூலித்தொழிலாளி. திருமணமாகாதவர்.

    இந்தநிலையில் அருமை நாதன் கடந்த 6 நாட்களாக காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதையடுத்து அவரை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்த தட்டு அணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் அவரை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி அங்கு அனுமதிக்கப்ட்ட அருமைநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர்.

    இதைத்தொடர்ந்து அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக நேற்று மாலை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அருமைநாதன் பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த மங்கலம் பேட்டை சுகாதாரத்துறையினர் கோவிலானூர் பகுதியில் முகாமிட்டனர். அந்த பகுதியில் வேறு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் கோவிலானூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×