என் மலர்
கடலூர்
கடலூர் டவுன் ஹாலில் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர். ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் இதற்கு ஆதரவு அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வழியில் நடந்து வரும் இந்த ஆட்சியில் இதற்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. ஆனால், கேரள மாநிலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகி உள்ளனர்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வலியுறுத்தி விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. மத்திய அரசுக்கு நீட் தேர்வை கொண்டு வர அனுமதி இல்லை. மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. சினிமா துறையினர் பெற்றிருக்கும், புகழையும், பெயரையும் கொண்டு தமிழகத்தில் முதல்வராகி விடலாம் என கூறுகிறார்கள். இதில் மக்கள் ஏமாறக்கூடாது.
ஏனென்றால் தமிழகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜோதிடப்பாடம் நடத்தப்படுகிறது. அதை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது செயலவை தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
விருத்தாசலம் நாச்சியார் பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). கூலிதொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அறிந்த சுகாதார துறையினர் நாச்சியார்பேட்டை பகுதியில் முகாமிட்டு வேறு யாரேனும் மர்மகாய்ச்சலால் பாதித்துள்ளார்களா? என்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அப்பகுதியில் முகாட்டு தீவிர சுகாதாரப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக பா.ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் கிருபாநிதி உடல்நிலை குறைவு காரணமாக கடலூரில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டாக்டரை பற்றி தெரியாமல் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் காட்சி அமைந்துள்ளது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும். மருத்துவர்கள் குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகின்றனர். நல்ல எண்ணத்துடனும், சமூக அக்கறையுடனும் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பற்றி ஒரு படத்தில் அவரை இழிவுபடுத்தியதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் அந்த காட்சியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் கூறினால் கருத்து சுதந்திரம். அதுவே நாங்கள் கூறினால் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் புதுப்பாளையத்தில் டி.வி ஷோரூம் கடையின் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவியது.
இதில் குடோனில் உள்ள ஏ.சி, டி.வி, பீரோ, உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கடலூர் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது.
மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. சுமார் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.
இந்த தீவிபத்து மின்கசிவால் ஏற்பட்டுள்ளது என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் பத்தினந்திட்டா மாவட்டம் ஆனிக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34).
இவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா (32). இவரும் அதே ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்கள் சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வந்தார்கள்.
இந்த நிலையில் கேரளாவில் நடக்கும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரகாஷ் முடிவு செய்தார். அதன்படி பிரகாஷ் தனது மனைவி பிரியா, உறவினர் பிரதீப் (32), பிரீத்தி (23), ஜோஷி (24) சிவா (27), குட்டி (25) மற்றும் மிதுன் (27) ஆகியோருடன் சென்னையில் இருந்து கேரளாவிற்கு வாடகை காரில் புறப்பட்டார்.
காரை பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் மாறி மாறி ஓட்டி வந்தனர். நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த எழுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுக்குள் சிக்கி பிரகாஷ், அவரது மனைவி பிரியா, உறவினர்கள் பிரதீப், ஜோஷி, சிவா, குட்டி, மிதுன் ஆகிய 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பிரீத்தி மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், ஈஸ்வரன், ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சுதாகர், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜா, மற்றும் போலீசார், திட்டக்குடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த பிரீத்தியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான 7 பேரின் உடலையும் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் காரில் இருந்து வெளியே எடுத்தனர். பின்னர் அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மற்றும் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காரை ஓட்டியவர் தூங்கியதால் இந்த கோர விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காரின் இடிபாடுக்குள் சிக்கியவர்களை போலீசார் மீட்கும் காட்சி
மரத்தில் மோதி கார் அப்பளம்போல் நொறுங்கியது.
கடலூர்:
கர்நாடகத்திலும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி அணைகள் நிரம்பி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணை வந்தடைந்தது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் சாத்தனூர் அணையிலிருந்து 9,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் விழுப்புரம் மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு, திருக்கோவிலூர் வழியாக விழுப்புரம் அருகே எல்லீஸ் அணைக்கட்டுக்கு வந்தடைந்தது.
அங்கிருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, மேல் பட்டாம்பாக்கம், மருதாடு, உண்ணாமலை செட்டிச்சாவடி, ஆல்பேட்டை பகுதி வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளப் பெருக்கினால் கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே கொம்மந்தான்மேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. அங்கு தண்ணீர் அதிகரித்து செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூருக்கு வந்த தென்பெண்ணையாற்று நீர் இறுதியில் தாழங்குடா கடலில் கலந்தது. கடந்த ஒராண்டு காலமாக வறண்டு கிடந்த தென் பெண்ணையாற்றில் தற்போது வெள்ளம் இருபுறமும் பெருக்கெடுத்து ஒடியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பார்த்தனர்.
கடலூரில் தடுப்பணைகள் ஏதும் இல்லாததால் தென்பெண்ணையாற்று நீர் வீணாக கடலில் கலந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, கடந்து செல்வதோ கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிவசக்தி நகர் 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 47). ரியல் எஸ்டேட் அதிபர்.
இவர் இன்று அதிகாலை சிதம்பரம் கூத்தன்கோவிலில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அவர் சிதம்பரம் புற வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம மனிதர்கள் வழிமறித்தனர்.
பின்னர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இது பற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பழனிசாமியை கொலை செய்த மர்ம மனிதர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக பழனிசாமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோத காரணத்தால் மர்ம மனிதர்கள் அவரை கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூர் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் ரகுமான் (வயது 43). கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் அருகே உள்ள உண்ணாமலை செட்டி சாவடியில் அவருக்கு சொந்தமான வீடு உள்ளது. விடுமுறை நாட்களில் இங்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி தனது குடும்பத்தினருடன் உண்ணாமலை செட்டி சாவடியில் உள்ள வீட்டுக்கு ரகுமான் வந்திருந்தார்.
பின்னர் வீட்டை பூட்டி விட்டு அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் ரகுமானின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இந்த நிலையில் இன்று காலை ரகுமான் தனது குடும்பத்துடன் உண்ணாமலை செட்டி சாவடிக்கு வந்தார்.
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோ திறந்து கிடந்தது. மர்ம மனிதர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு ரகுமான் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அர்ஜுன் என்கிற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி விட்டு திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். நீதிபதி வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரத்தூர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முத்தழகன் (வயது 28). என்ஜினீயர். இவர் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
இதனால் அங்கிருந்து முத்தழகன், சொந்த ஊருக்கு கடந்த 8-ந் தேதி வந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து முத்தழகனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்தழகன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் முத்தழகனின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் முத்தழகன் இறந்ததால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்களது விளைநிலத்தில் விளைந்த கரும்புகளை அறுவடை செய்து அரவைக்காக நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்புகிறார்கள். இதற்காக கரும்பு டன் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கான ரூபாய் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டியதுள்ளது. இந்த தொகை கேட்டு விவசாயிகள் பலமுறை போராடியும், நிர்வாகம் நிலுவைத்தொகையை வழங்கவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆலை கரும்பு விவசாய சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் தென்னரசு, பொருளாளர் சக்திவேல், துணை தலைவர்கள் திருமலை, கிருஷ்ணன், ரவிகுமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கரும்பு ஏந்தி கலந்து கொண்டு, நிலுவைத்தொகை ரூ.140 கோடி வழங்கக்கோரி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கரும்பு விவசாயிகள் ஆலைக்குள் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் நிலுவைத்தொகை ரூ.140 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வழங்கும் வரை இங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர். பின்னர் விவசாயிகள் ஆலை வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள எரப்பாயூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது55). தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று மாலையில் மொபட்டில் பெண்ணாடம் சென்றார்.
பின்னர் அவர் இரவு வீடு திரும்பினார். எரையூர் சர்க்கரை ஆலை அருகே வந்த போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரங்கநாதன் ஓட்டிவந்த மொபட் மீது மோதியது.
இதில் ரங்கநாதன் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரங்கநாதனை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேஉள்ள கோழியூர் பகுதியை சேர்ந்தவர் ரஜித்குமார். இவரது மனைவி இந்திரா( வயது27). இவர் நேற்று மாலை மொபட்டில் வையங்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
அப்போது 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். கோடயங்குடி என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளை திடீரென்று இந்திரா ஓட்டி வந்த மொபட் மீது மோதினர். இதில் இந்திரா கீழே விழுந்தார். அப்போது அந்த வாலிபர்கள் இந்திரா கழுத்தில் கிடந்த தாலிசெயினை பறிக்க முயன்றனர்.
இந்திரா அதனை தடுக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர்கள் இந்திராவை தாக்கி விட்டு கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.
வாலிபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் இந்திரா கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பெண்ணை தாக்கி நகை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.






