என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேத்தியாதோப்பு அருகே டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலி
    X

    சேத்தியாதோப்பு அருகே டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலி

    கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சேத்தியாத்தோப்பு அருகே என்ஜினீயர் ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரத்தூர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முத்தழகன் (வயது 28). என்ஜினீயர். இவர் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனால் அங்கிருந்து முத்தழகன், சொந்த ஊருக்கு கடந்த 8-ந் தேதி வந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து முத்தழகனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்தழகன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் முத்தழகனின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் முத்தழகன் இறந்ததால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×