search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலுவைத்தொகை"

    போக்குவரத்து கழக ஊழியர்களின் நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவையினர் போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    சென்னை:

    தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, தலைமைச்செயலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் எம்.பி. யு.ஆர்.கிருஷ்ணன், பேரவை தலைவர் தாடி ம.ராசு, முன்னாள் செயலாளர் கா.சங்கரதாஸ், பொருளாளர் அப்துல்அமீது, போக்குவரத்து பிரிவு செயலாளர் எஸ்.பழனி மற்றும் திருவொற்றியூர் ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.

    பின்னர் அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையின் சீரிய திட்டங்களால், தமிழகம் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தலைசிறந்த முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக போக்குவரத்து துறை இந்தியாவில் பல்வேறு சாதனைகளை படைத்து, முதன்மை இடத்தில் உள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில், அகில இந்திய அளவில் பல்வேறு செயல் திறன்களுக்காக 11 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

    சமீப காலங்களில் டீசல் விலை மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டபோதிலும், வரலாறு காணாத வகையில் ஊழியர்களுக்கு அரசு ஊதிய உயர்வு கொடுத்துள்ளது. போக்குவரத்து துறை சேவை மனப்பான்மையுடன் மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது.

    பொதுமக்களுக்கு சேவை அளித்து வரும் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்துடன் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும்.

    ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான 4 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைத்தலுக்கு பணம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பயன்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews
    ×