என் மலர்tooltip icon

    கடலூர்

    சிறுபாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிறுபாக்கம்:

    சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலை மகன் பிச்சன்(வயது 50), விவசாயி. இவர் தனது வயலில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்குகளை மாலையில் ஒரு லாரியில் ஏற்றி, அதனை சேலம் கிழங்கு ஆலைக்கு எடுத்து செல்வதற்காக புறப்பட்டார். அப்போது புறப்படுவதற்கு முன்பாக பிச்சன் லாரியின் முன்புறம் கற்பூரத்தை பற்ற வைத்து கீழே குனிந்த படி சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்.

    இதை கவனிக்காத டிரைவர், லாரியை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கிய பிச்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதற்குள் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான பிச்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்தியாத்தோப்பு அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 7-ம் வகுப்பு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    சம்பவத்தன்று இரவு மாணவி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த திலகர் மற்றும் ஜெய்சங்கர் அந்த மாணவியை தாக்கி, அங்குள்ள மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவளை பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது அவள் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தாள்.

    அந்த சிறுமியை பெற்றோர் மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவளிடம் பெற்றோர் விசாரித்தனர். அதற்கு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

    சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தாள். பின்னர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மயக்கம் தெளிந்த பின்னர் அந்த மாணவியிடம், அவளது பெற்றோர் எதற்காக வி‌ஷம் குடித்தாய்? என்று விசாரித்தனர். அப்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறி கதறி அழுதாள்.

    இதையடுத்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் திலகர், ஜெய்சங்கர் ஆகிய 2 வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகரை கைது செய்தனர். ஜெய்சங்கரை வலைவீசி தேடிவருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இன்று காலை கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை 8 மணியளவில் விருத்தாசலம்-சேலம் புறவழிச்சாலையில் பொன்னேரி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அதேபோல் செந்துறை தாலுகா கடந்தைப்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான வரதராஜன்(35) என்பவர் இன்று காலை தான் ஓட்டி வந்த லாரியை விருத்தாசலம் புறவழிச்சாலையில் நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.

    அப்போது வடலூரை சேர்ந்த டிரைவர் சிவக்குமார்(50) புதுக்கூரைப் பேட்டையில் இருந்து ஈரோட்டை நோக்கி காரை ஓட்டி சென்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ராஜேந்திரன், லாரி டிரைவர் வரதராஜன் ஆகியோர் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் கார் டிரைவர் சிவக்குமார் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விருத்தாசலம் போலீசில் சரண் அடைந்தார்

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று கார் மோதி இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தமிழக அரசு வழங்க கூடிய 2000 ரூபாயால் மக்கள் மனம் மாறமாட்டார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    கடலூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி இன்று கடலூர் வந்தார். அவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    மதம், ஜாதி போன்ற வேற்றுமைகளை மையப்படுத்தி பாரதிய ஜனதா இந்த தேசத்தின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைத்து வருகிறது.

    மகாத்மா காந்தி மதச்சார்பற்ற கொள்கையை கொண்டு வந்தார். ஆனால் இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கு இந்திய மக்கள் துணை போக கூடாது என்பதற்காகத்தான் இந்தியா முழுவதும் மதசார்பற்ற அணிகளை ஒன்று திரட்டி கடுமையாக போராடி வருகிறோம்.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற அணிகள் செயல்பட்டு வருகிறது. எங்கள் அணி கொள்கை ரீதியான அணி. தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொண்டுவர வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க ஒரு அமைப்பு வேண்டும். தமிழகத்தில் உள்ள பல திட்டங்களை முன்வைத்து தான் எங்கள் மதசார்பற்ற கூட்டணி அமைந்து உள்ளது.

    இதன்மூலம் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஆகையால் தான் உங்கள் ஆதரவுகளை வாக்குகளாக மாற்ற அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம்.



    தமிழ்நாட்டின் அரசியலே தேர்தல் வருவதற்கு முன்பு மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய கொள்கை. அதுதான் அவர்களின் நடைமுறையாகும். இதனை எல்லாம் மீறி தான் மக்கள் வாக்களிப்பார்கள். தற்போது தமிழக அரசு வழங்க கூடிய 2000 ரூபாயால் மக்கள் மனம் மாறமாட்டார்கள்.

    காங்கிரஸ் கட்சி தற்போது மூன்று மாநிலங்களில் தேர்தலில் வெற்றிபெற்று 48 மணி நேரத்தில் விவசாய கடனை ரத்து செய்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் கூட்டத்தில் விவசாயிகளின் கடனை ரத்து செய்வதால் இதற்கு தீர்வு ஏற்படாது என்று கூறுகிறார்.

    அதற்கு மாற்று திட்டமாவது கூற வேண்டும். ஆனால் தற்போது மத்திய அரசு விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பொருளாதார நிலையும், சமூக துறைகளிலும், விவசாய துறைகளிலும், தொழில் துறைகளிலும் பிரதமர் மோடிக்கு தெளிவான சிந்தனை கிடையாது. இதனால்தான் பண மதிப்பிழப்பு கொண்டு வந்தார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

    தற்போது பல்வேறு சலுகைகள் மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசும் தமிழக அரசும் தோல்வி அடைந்த அரசாங்கமாக இருந்து வருகிறது. தமிழக மக்களின் மனநிலை இந்த 2 அரசையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இருந்து வருகிறது. தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தினால் செலவும் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #KSAlagiri
    பாராளுமன்ற தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #Parliamentelection #Mutharasan

    சிதம்பரம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்கிற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு கோவையில் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மாநில துணை செயலாளர் சுப்பராயன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ம.தி. மு.க. தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறர்கள்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. 45 ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை தருவதாக மோடி தெரிவித்தார். இதை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

    தற்போது சென்னையில் 14 துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். அதில் அதிகமானவர்கள் பட்டதாரிகளே. இதுபோன்ற நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி, வாக்குறுதிகள் வழங்குவதில் மன்னர். அவர் மக்களையும் பாராளுமன்றத்தையும் ஏமாற்றிவருகிறார்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்கவேண்டும், அடிமையாக இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #Parliamentelection #Mutharasan

    திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை. அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். #KSAlagiri #KamalHaasan
    கடலூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கே.எஸ்.அழகிரி, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த கீரப்பாளையத்துக்கு நேற்று மாலை வந்தார். அப்போது காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

    அதனை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி, கடைவீதியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர், கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பின்னர் அவர், சேத்துக்கால் செல்லியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து திருப்பணி நத்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு கே.எஸ்.அழகிரி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பொதுமக்கள் எங்களது கூட்டணிக்கு மகத்தான ஆதரவு அளிக்க வேண்டும்.

    இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை கமல்ஹாசன் விமர்சித்து உள்ளார். இதனால் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை. அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும்.

    காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வது குறித்து அறிவிக்காமல் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறி இருக்கிறார்.

    மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்கின்ற ஆற்றல் மோடிக்கு கிடையாது. சர்வாதிகார ஆட்சியில் ஜனநாயகவாதிகள் மீது வழக்கு பதிவு செய்வதும், சிறைக்கு அனுப்புவதும் தொடர்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #KSAlagiri #KamalHaasan

    காவல்துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழா கண்காட்சியை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அமைத்திருந்த சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் 20 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த படைப்புகளை பார்வைக்காக வைத்திருந்தனர்.

    இதுபற்றி கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறுகையில், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சாலையை பயன்படுத்தும் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். பொருளாதாரத்தில் மட்டும் உயர்ந்து விட்டால் போதாது ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். இளைஞர்கள் சாலையில் சாகசம் செய்யாமல் சாலை விதிகளை மதித்து விபத்தில்லா மாவட்டமாக ஆக்க வேண்டும் என்றார்.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேசியதாவது:-

    மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு இந்த கண்காட்சியை சிறப்பாக அமைத்துள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மனம் சஞ்சலமாக உள்ள போதும், சந்தோஷமாக உள்ள போதும் வாகனம் ஓட்டக்கூடாது. அற்புதமான பிறவி மனித பிறவி. கொலை குற்றம் என்பது படுபாதக செயல். ஆனால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால் எந்த ஒரு காரணமும் இன்றி விபத்தில் மரணம் அடைவது என்பது பெரிய இழப்பாகும். விபத்தினால் ஒருவர் மரணம் அடையும் போது அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே பாதிப்பு ஏற்படுகிறது.

    சாலை விதிகளை கடைப் பிடிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளாகிய நீங்கள் சொன்னால் உங்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். இதற்கு நீங்கள் முன் னுதாரணமாக இருக்க வேண்டும். உயிரின் மதிப்பு உங்களுக்கு தெரியவந்தால் சாலை விபத்தில் உயிரிழப்பு, தற்கொலை போன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) முக்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு(ஆயுதப்படை) சரவணன், தர்மபுரி சமூக சேவகர் முரளி, கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேற்று மாலை 3.30 மணிக்கு காரில் திடீரென வந்தார். பின்னர் அவர், அங்குள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், பதிவு செய்துள்ள வழக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணி குறித்து போலீசாரிடம் கேட்டார்.

    இதனை தொடர்ந்து ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு, ரெயில் நிலைய பகுதிகளையும் பார்வையிட்டார்.

    இது குறித்து ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இது வழக்கமான ஆய்வுதான். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு முதன்முறையாக ஆய்வு செய்ய வந்துள்ளேன். ரெயிலில் பயணம் செய்யும்போதோ அல்லது ரெயில் நிலையத்தில் காத்திருக்கும்போதோ தங்களது உடைமைகளை பயணிகள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதையும் மீறி பொருட்கள் திருடுபோனாலோ அல்லது தொலைந்து போனாலோ ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து ஆந்திரா, ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ரெயிலில் பயணம் செய்யும்போது திருட்டு நடந்ததால், அது தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தில்தான் புகார் செய்ய வேண்டும் என்பது கிடையாது. தமிழகத்திற்கு வந்து, அருகில் உள்ள ரெயில் நிலையங்களிலும் புகார் தெரிவிக்கலாம்.

    ரெயிலில் பயணம் செய்யும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். அதனை பயணிகள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக ரெயிலில் பயணம் செய்யும் பெண்ணுக்கு ஏதேனும் பாலியல் தொல்லையோ அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டதால் ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப்’ என்ற செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம். அடுத்த சில நிமிடங்களில் அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது விழுப்புரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா உடன் இருந்தார்.
    மங்கலம்பேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் திடீரென பழுதடைந்தது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் கிராம மக்கள், அருகில் உள்ள கிராமங்களுக்கும், விவசாய கிணற்றுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். இது பற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலையில் கிராம மக்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு, விருத்தாசலம்- சிறுவம்பார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார் மற்றும் அதிகாரிகள், கிராம மக்களை சமாதானப்படுத்தி விரைவில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கம்மாபுரத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்.
    கம்மாபுரம்: 

    நெய்வேலியை தலைமை இடமாக கொண்டு என்.எல்.சி. இந்தியா நிறுவனம், அதன் சுற்று வட்டார பகுதியில் திறந்தவெளியில் சுரங்கம் அமைத்து, ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டியெடுத்து மின்சாரம் தயாரித்து வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரம், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோக தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரியும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 3-வது திறந்தவெளி சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கம்மாபுரம் மற்றும் புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட 40 கிராமங்களில் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும், வீடுகளையும் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க. சார்பில் கம்மாபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்தக்கோரி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பேசினார்.

    இந்த போராட்டத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், தனியார் கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், புவனகிரி ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன், கம்மாபுரம் ஒன்றிய துணை செயலாளர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாமி, சாந்தி சுந்தரபாண்டியன், இளவரசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தி.மு.க. நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மீன் வியாபாரிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏ.வள்ளியம் மேலத்தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவருடைய மகன் சின்னதுரை (வயது 34). மீன் வியாபாரி.

    கடந்த 7.3.2017 அன்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் 15 வயது சிறுமி தனியாக இருப்பதை அறிந்த சின்னதுரை, அந்த வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அங்குள்ள பாப்பாத்தி அம்மன் கோவில் அருகில் உள்ள கரும்பு வயலுக்கு சென்றார். அங்கு அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்தார். அந்த ஜூசை குடித்தவுடன், சின்னதுரை அந்த சிறுமியிடம் எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

    ஆகவே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை சின்னதுரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மயங்கிய அந்த சிறுமி சிறிது நேரம் கழித்து எழுந்தார். அப்போது அந்த சிறுமியிடம் இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் நடந்த சம்பவத்தை சொல்லவில்லை. இதை பயன்படுத்தி அந்த சிறுமியை சின்னதுரை பலமுறை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதில் அந்த சிறுமி 3½ மாத கர்ப்பிணியானார். இது பற்றி அந்த சிறுமி சின்னதுரையிடம் கூறியபோது, அவர் சில மாத்திரைகளை கொடுத்துள்ளார். அதில் அவரது கர்ப்பம் கலைந்து விட்டதாக தெரிகிறது.

    இதை அறிந்த அந்த சிறுமியின் தந்தை விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் சின்னதுரை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க இலவச சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
    காட்டுமன்னார்கோவில் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கொத்தனார். இவரது மனைவி சிலம்பரசி. இவர்களுக்கு தனபிரபு(7), அரிகரன்(5) என்ற 2 மகன்கள் உள்ளனர். தனபிரபு அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் காலை மணிகண்டன் அதே பகுதியில் நடந்த கட்டிட வேலைக்கு சென்றார். இதற்கிடையே மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் தனபிரபுவும் கட்டிட வேலை நடந்த இடத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் வேலை முடிந்ததும் மணிகண்டன், தனபிரபுவை தேடி பார்த்தார். அப்போது அவன் அங்கு இல்லாததால், மகன் வீட்டுக்கு சென்று இருப்பான் என நினைத்து அவர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் வீட்டிலும் தனபிரபு இல்லை. இதனால் மணிகண்டனும், அவரது உறவினர்களும் கட்டிட வேலை நடந்த இடத்துக்கு சென்று மகனை தேடி பார்த்தனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் தனபிரபு கிடந்தான்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் தனபிரபுவை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் தனபிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மணிகண்டன், காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×