என் மலர்tooltip icon

    கடலூர்

    பெண்ணாடம் அருகே குடிநீர் கிடைக்காமல் பெண்கள் காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பெ.கொல்லதங்ககுறிச்சி.இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு ஊராட்சிநிர்வாகம் சார்பாக ஆழ்துளை குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மழை பெய்யாததாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.

    இதன்காரணமாக அப்பகுதிமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படமுடியவில்லை. வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் குடிநீர் வழங்கப்பட்டது. அதுவும் போதுமானதாக இல்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பெண்கள் கடும் அவதியடைந்தனர்.

    அவர்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் பெண்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வயல்வெளிகளில் உள்ள கிணற்றில் தண்ணீரை எடுத்து வந்தனர்.

    கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டதால் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டனர். பின்பு அங்குள்ள சாலையோரம் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு.

    வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அங்கிருந்து கீழ் அணையில் தேக்கப்பட்டு வடவாறு வழியாக வீராணம் ஏரியில் சேமிக்கப்படும். கடந்த ஆகஸ்டு மாதம் பலத்த மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பியது. சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. பின்னர் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது. பின்னர் கீழ் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    தற்போது கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. நேற்று 43.30 அடி தண்ணீர் இருந்தது. இன்று 43.6 அடியாக குறைந்துள்ளது. சென்னைக்கு நேற்று 40 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்றும் அதே அளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரியின் நீர்மட்டம் 39 அடி இருக்கும் வரை சென்னைக்கு குடிநீர் அனுப்பமுடியும். தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏரியில் இருக்கும் தண்ணீரும் வேகமாக குறைந்து வருகிறது.

    கோப்புப்படம்

    இந்த நிலைநீடித்தால் இன்னும் 10 நாட்கள் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்பமுடியும். ஏரிக்கு நீர் ஆதாரமாக இருக்கும் 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையும் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வந்தால் மட்டுமே கீழ்அணையில் இருந்து வடவாறு வழியாக வீராணத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு சென்னைக்கு தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் அனுப்பிவைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை வீராணம் ஏரி தீர்த்து வைத்து வருகிறது. தற்போது வீராணம் ஏரியின் நீரும் குறைந்து வருவதால் சென்னை பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூரில் மனைவியை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் வில்வநகர் பகவதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 27). ஆம்புலன்ஸ் டிரைவர். இவருடைய காதல் மனைவி திவ்யபாரதி(25). இவர் பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு அனுமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி இரவு பிரவீன்குமார் பணிக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு வெளியே சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் 2 பேர் திவ்யபாரதியின் வீட்டுக்குள் புகுந்து, அவரை தாக்கி நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

    மேலும் இது பற்றி அவர் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே நன்கு அறிமுகமான நபர்களே இச்சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் சந்தேக பார்வை பிரவீன்குமார் மீது விழுந்தது. இதனால் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் திவ்யபாரதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அந்த பகுதியில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
    கடலூர்:

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து அந்த மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் இன்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

    அதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி,சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்கள் மூடப்பட்டிருந்தது. அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை 6 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை டாக்டர்களின் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதன்மூலம் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அறிவிக்கபட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அந்த பகுதியில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி இன்று காலை காலிக்குடங்களுடன் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெரும்முளை ஊராட்சிக்குட்பட்ட புதுகாலனியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் மூலம் அடி குழாய் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது நீர்மட்டம் குறைந்து விட்டதால் அந்த குழாயில் தண்ணீர் வரவில்லை.

    இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர். சீரான முறையில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

    ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த புதுகாலனியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் திரண்டனர்.

    பின்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர், சாலை வசதி, மின் விளக்குகள் போன்றவை இல்லை. எனவே அதிகாரிகள் எங்களது கோரிக்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே 7 வாலிபர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு சாலையில் அமர்ந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற வாசகம் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

    இந்த தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களிடம் யார் இந்த போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தார்கள்? எந்த அடிப்படையில் இந்த போராட்டம் நடத்துகிறீர்கள் என கேட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரிடம் கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்தனர். ஆனால் வாலிபர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீஸ் ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று காலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள மெயின்ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சேகர் தலைமையில் தேசிய குழு தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் ராமசந்திரன், நகர செயலாளர் தமிம்முன் அன்சாரி, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் பரூக்அலி உள்பட 30-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது எனவும், இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் கோ‌ஷம் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றனர்.

    சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனர்.

    இந்த திடீர் மறியல் போராட்டத்தினால் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக விழுப்புரம் சரக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சேத்தியாத் தோப்பு பகுதியில் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரனாக தகவல் தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    அதில் அவர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டியை சேர்ந்த சுந்தர் (வயது 26) என்பதும், சிதம்பரம் காமாட்சியம்மன் நகரில் உள்ள ஒரு வீட்டில் மது பானம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தியதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மத்திய புலனாய்வு போலீசார், சிதம்பரம் மதுவிலக்கு போலீசார் சிதம்பரம் பகுதியில் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டிற்குள் ஒரு சுரங்க அறை இருந்ததை கண்டு பிடித்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அதில் டாஸ்மாக் லேபில் ஒட்டப்பட்டிருந்த மதுபாட்டில்கள் மற்றும் காலி பாட்டில்கள், போலி லேபில்கள், கேன்கள் மற்றும் பேக்கிங் மிஷின்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து வழக்குபதிவு செய்து சுந்தரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் போலி மதுபானம் தயாரித்த வழக்கில் சுந்தர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்த சுந்தர் சிதம்பரத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். இதனால் சுந்தர், பட்டுக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து என்பவரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

    அவர்கள் தயாரிக்கும் மதுபாட்டில்களை கடலூர் மாவட்டத்தில் சுந்தரும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளில் மாரிமுத்துவும் விற்பனை செய்து வந்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மாரிமுத்துவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் த.மா.கா.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஞானசந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் பண்ருட்டி அண்ணாகிராமம் பகுதியில் இருந்து மாற்று கட்சி நிர்வாகிகள் த.மா.காவில் இணைந்தனர். பின்னர் நிருபர்களுக்கு ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி, அதிக இடங்களை பெற்று வெற்றி பெற வியூகம் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

    காவேரி மேலாண்மை ஆணையம் அறிவித்தது போல் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. வருடம் தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி நீர் திறப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த 8 வருடங்களாக காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

    இதன் மூலம் பெருமளவில் விவசாயமே பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் தேர்தல் ஆணையம் போல் செயல்பட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுவது மூலம் விவசாயிகள் பயன் அடைய உள்ளனர். நீட் தேர்வு தரம் அல்லது நிலை உயர்ந்து உள்ளது.

    தமிழகத்தில் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு இணையாக ஸ்டேட் போர்டு மாணவர்கள் மற்றும் நலிவடைந்த, கிராமப்புற மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


    இதனால் நீட் தேர்வு எழுதும் நலிவடைந்த கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள், ஸ்டேட் போர்டு மாணவர்கள் என அனைவரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிர்ப்பாக அரசு எந்த திட்டமும் கொண்டுவரக்கூடாது. மேலும் விவசாயிகளை அச்சுறுத்தல் ஏற்படுத்தாத வகையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளிடம் இருந்து அதிக இடங்களை பெற்று வெல்வதற்கு எங்கள் பணியை தற்போது தொடங்க உள்ளோம். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூறிய பொய்யை மக்கள் நம்பியதால் தேர்தலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு அவர்கள் அறிவித்த தேர்தல் அறிக்கையை முக்கிய காரணமாக உள்ளது.

    காங்கிரஸ் கட்சி கல்விக் கடன், விவசாயக் கடன் உள்ளிட்ட கடன்களை தள்ளுபடி செய்வோம் என கூறியதை மக்கள் ஏற்காதது ஒரு காரணம். மேலும் தமிழகத்தில் ஏரி, குளம் போன்றவற்றில் விவசாயிகள் மண்ணை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த அதிகாரிகள் எவ்வித நிபந்தனையும் விதிக்கக்கூடாது. மேலும் விவசாயிகள் மண் எடுத்து சென்றால் ஏரி, குளம் தூர்வாரி எளிதாக மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கம்மாபுரம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கம்மாபுரம்:

    கம்மாபுரம் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் அருள்முருகன் (வயது 28). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் நல்லதம்பி(29) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கோபாலபுரத்தில் இருந்து கம்மாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அருள்முருகன் ஓட்டினார். சு.கீணனூர் அருகே சென்ற போது, அங்கு பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அருள்முருகன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார்.

    இதில் அருள்முருகன், நல்லதம்பி ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருள்முருகன் பரிதாபமாக இறந்தார். நல்லதம்பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அருள்முருகன் இறந்தது பற்றி அறிந்த கோபாலபுரம் பகுதி மக்கள், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை உடனே மூடக்கோரி விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், புஷ்பராஜ் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், வாய்க்கால் பாலத்துக்காக கடந்த பல மாதங்களுக்கு முன்பு சு.கீணனூர் அருகே பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளம் மூடப்படாததால் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே பள்ளத்தை உடனே மூடவேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், இன்னும் ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    ஃபேஸ்புக் வலைதளத்தில் தன்னைப் பற்றி போலி தகவல் பரவியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.



    நெய்வேலி குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. கடலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த அவரைக் குறித்து தவறான தகவலை, அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார்  என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

    அதன் காரணமாக இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ராதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 



    ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்களும், கிராமத்தினரும் பிரேம்குமார் வீட்டை அடித்து நொறுக்கியுள்ள நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த அவரது அத்தை மகன் விக்னேஷ், ராதிகா இறந்த செய்தி கேட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, விக்னேஷின் தந்தையும், ராதிகாவின் தந்தையும் தனித்தனி புகாரை மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர். 



    தலைமறைவான பிரேம்குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், ராதிகா மரணத்திற்கு நியாயம் கேட்டும் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சு சம்பவம் நடந்தது. போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், ராதிகா மற்றும் விக்னேஷ் உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் குறவன்குப்பம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பல சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே போலி செய்தி பரவியதால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர்.
    கடலூர், காடாம்புலியூர் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார வாரியத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலை துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், கடலூர் துறைமுகம், செல்லங்குப்பம், சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, கொடுக்கன்பாளையம், சிவானந்தபுரம், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், சாத்தங்குப்பம், எஸ்.புதூர், ஒதியடிக்குப்பம், கீரப்பாளையம், ராமாபுரம், வழிசோதனைபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை மின்சார வாரியத்தின் கடலூர் செயற்பொறியாளர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கீழக்குப்பம் துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மருங்கூர், சொரத்தூர், நடுக்குப்பம், முத்தாண்டிக்குப்பம், பேர்பெரியான்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், காடாம்புலியூர், புறங்கணி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை பண்ருட்டி செயற்பொறியாளர் பழனிராஜூ தெரிவித்துள்ளார்.
    ×