search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
    X

    கடலூர் மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்

    கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அந்த பகுதியில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
    கடலூர்:

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து அந்த மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் இன்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

    அதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி,சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்கள் மூடப்பட்டிருந்தது. அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை 6 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை டாக்டர்களின் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதன்மூலம் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அறிவிக்கபட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அந்த பகுதியில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
    Next Story
    ×