search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
    X

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் த.மா.கா.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஞானசந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் பண்ருட்டி அண்ணாகிராமம் பகுதியில் இருந்து மாற்று கட்சி நிர்வாகிகள் த.மா.காவில் இணைந்தனர். பின்னர் நிருபர்களுக்கு ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி, அதிக இடங்களை பெற்று வெற்றி பெற வியூகம் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

    காவேரி மேலாண்மை ஆணையம் அறிவித்தது போல் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. வருடம் தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி நீர் திறப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த 8 வருடங்களாக காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

    இதன் மூலம் பெருமளவில் விவசாயமே பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் தேர்தல் ஆணையம் போல் செயல்பட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுவது மூலம் விவசாயிகள் பயன் அடைய உள்ளனர். நீட் தேர்வு தரம் அல்லது நிலை உயர்ந்து உள்ளது.

    தமிழகத்தில் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு இணையாக ஸ்டேட் போர்டு மாணவர்கள் மற்றும் நலிவடைந்த, கிராமப்புற மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


    இதனால் நீட் தேர்வு எழுதும் நலிவடைந்த கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள், ஸ்டேட் போர்டு மாணவர்கள் என அனைவரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிர்ப்பாக அரசு எந்த திட்டமும் கொண்டுவரக்கூடாது. மேலும் விவசாயிகளை அச்சுறுத்தல் ஏற்படுத்தாத வகையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளிடம் இருந்து அதிக இடங்களை பெற்று வெல்வதற்கு எங்கள் பணியை தற்போது தொடங்க உள்ளோம். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூறிய பொய்யை மக்கள் நம்பியதால் தேர்தலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு அவர்கள் அறிவித்த தேர்தல் அறிக்கையை முக்கிய காரணமாக உள்ளது.

    காங்கிரஸ் கட்சி கல்விக் கடன், விவசாயக் கடன் உள்ளிட்ட கடன்களை தள்ளுபடி செய்வோம் என கூறியதை மக்கள் ஏற்காதது ஒரு காரணம். மேலும் தமிழகத்தில் ஏரி, குளம் போன்றவற்றில் விவசாயிகள் மண்ணை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த அதிகாரிகள் எவ்வித நிபந்தனையும் விதிக்கக்கூடாது. மேலும் விவசாயிகள் மண் எடுத்து சென்றால் ஏரி, குளம் தூர்வாரி எளிதாக மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×