search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய வாலிபர் கைது
    X

    சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய வாலிபர் கைது

    சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக விழுப்புரம் சரக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சேத்தியாத் தோப்பு பகுதியில் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரனாக தகவல் தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    அதில் அவர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டியை சேர்ந்த சுந்தர் (வயது 26) என்பதும், சிதம்பரம் காமாட்சியம்மன் நகரில் உள்ள ஒரு வீட்டில் மது பானம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தியதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மத்திய புலனாய்வு போலீசார், சிதம்பரம் மதுவிலக்கு போலீசார் சிதம்பரம் பகுதியில் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டிற்குள் ஒரு சுரங்க அறை இருந்ததை கண்டு பிடித்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அதில் டாஸ்மாக் லேபில் ஒட்டப்பட்டிருந்த மதுபாட்டில்கள் மற்றும் காலி பாட்டில்கள், போலி லேபில்கள், கேன்கள் மற்றும் பேக்கிங் மிஷின்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து வழக்குபதிவு செய்து சுந்தரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் போலி மதுபானம் தயாரித்த வழக்கில் சுந்தர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்த சுந்தர் சிதம்பரத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். இதனால் சுந்தர், பட்டுக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து என்பவரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

    அவர்கள் தயாரிக்கும் மதுபாட்டில்களை கடலூர் மாவட்டத்தில் சுந்தரும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளில் மாரிமுத்துவும் விற்பனை செய்து வந்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மாரிமுத்துவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×