என் மலர்tooltip icon

    கடலூர்

    • மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலீசாருக்கு மர்ம நபர் போனில் தகவல் தெரிவித்தார்.
    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.

    இந்த மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலீசாருக்கு மர்ம நபர் போனில் தகவல் தெரிவித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அவரது உத்தரவின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    • சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் கிராமம் வ.உ.சி நகரில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் கவுஷிக் (வயது 12) ராமநத்தம் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு செல்ல வீட்டில் ஷூ அணிந்தார்.

    அப்போது அதில் இருந்த சிறிய பாம்பு கடித்தது. இதில் மாணவன் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீராணம் ஏரியில் இருந்து சென்னை மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீரை பம்ப் செய்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கிறது.
    • கடந்த 2 மாதத்திற்குள் 3 முறை முழு கொள்ளளவு நிரம்பியதால் சுற்றியுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் தொடங்கி காட்டுமன்னார் கோவில் லால்பேட்டை வரையில் 14 கி.மீ. நீளம் கொண்டது வீராணம் ஏரி.

    இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும், 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படுகிறது.

    வீராணம் ஏரி மூலம் டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், புவனகிரி, சேத்தியாதோப்பு, காட்டுமன்னார் கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் வட்டாரங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீரை பம்ப் செய்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கிறது.

    கோடையில் வரலாறு காணாத வகையில் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி வீராணம் ஏரி முழு கொள்ளளவு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடந்த 2 மாதத்திற்குள் 3 முறை முழு கொள்ளளவு நிரம்பியதால் சுற்றியுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கீழ் கொள்ளிடம் அணைக்கரையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வடவாற்றில்1,527 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக வீராணம் ஏரி மீண்டும் முழு கொள்ளளவு நிரம்பியது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி லால்பேட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூதங்குடி வி.என்.எஸ். மதகு ஷட்டர்களை திறந்து வினாடிக்கு 5,683 கன அடி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வைக்கும் பணியில் சேத்தியாதோப்பு வெள்ளாறு பாசன பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

    • வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டியில் வென்று தே.மு.தி.க. சரித்திரம் படைக்கும்.
    • தே.மு.தி.க. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.

    பண்ருட்டி:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் நேற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு வருகை தந்தார்.

    அப்போது அவருக்கு அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மேளதாளங்களுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் அங்கிருந்து ரோடு ஷோ மூலம் பொதுமக்கள், தொண்டர்களுடன் நடந்தவாறு பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் அருகில் இருந்து பஸ் நிலையம் வரை வந்தார்.

    அதன் பின்னர் அவர் அங்கு மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    நான் விஜயகாந்தை திருமணம் செய்த பின்பு பண்ருட்டிக்கு தான் முதலில் வந்தேன். இங்கு மக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பண்ருட்டி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்பும் சட்டமன்ற தொகுதிகள் விஜயகாந்தின் கோட்டை. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டியில் வென்று தே.மு.தி.க. சரித்திரம் படைக்கும். கர்நாடகாவில் இருந்து வரும் வெள்ள நீர் கடலூருக்கு வந்து தான் கடலில் வீணாக கலக்கிறது. மழைநீரை சேகரிக்க, மத்திய, மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை. பண்ருட்டி பலா, முந்திரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    முந்திரி ஏற்றுமதி மண்டலம் உருவாக்க வேண்டும். என்.எல்.சி.க்கு நிலம் எடுப்பதை தே.மு.தி.க.வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் பாதிக்கப்படுவதால் நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி.நிறுத்த வேண்டும்.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் மகத்தான வெற்றியை தர வேண்டும். தேர்தலின் போது மகத்தான கூட்டணி, மகத்தான வேட்பாளருடன் வருவேன். மக்கள் தே.மு.தி.க.விற்கு ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன்பிறகு பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரை மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய், விஜயகாந்த்தை அண்ணன் என குறிப்பிட்டார். விஜய் எங்களுக்கு தம்பிதான். இது அரசியலுக்கு வந்ததற்கு பிறகு வந்ததல்ல. இந்த அண்ணன், தம்பி உறவு, விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து தொடர்கிறது. தே.மு.தி.க. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றார்.

    • வருகிற ஜனவரியில் கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது.
    • மாநாடு வெற்றி பெற தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகள்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தே.மு.தி.க. சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

    திட்டக்குடி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் தொகுதிகள் விஜயகாந்தின் கோட்டை. வருகிற சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி தொகுதியை மீண்டும் முரசு சின்னம் வென்று சரித்திரம் படைக்கும்.

    வருகிற ஜனவரியில் கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது. விஜயகாந்த் வெற்றி பெற்ற முதல் தொகுதி விருத்தாசலம்.

    அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வெற்றி தொடரனும். திட்டக்குடி-விருத்தாசலம் தொகுதிக்கு இடையே உள்ள பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இது உலகமே திரும்பி பார்க்கும் மாநாடாக இருக்கும். 2011 வரலாற்று வெற்றியை மீண்டும் திரும்ப பெறுவாம் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சி முடிந்த பின் பிரேமலதா, அங்கு கூடியிருந்த பெண் தொண்டர்களுடன் கோலாட்டம் ஆடினார். பின்னர் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மதுரையில் இன்று நடக்கும் விஜய் மாநாட்டில் விஜயகாந்த் படம் வைத்தது பிரச்சனை இல்லை. ஆனால் அக்கட்சி சார்பில் அரசியலில் எங்களுக்கு விஜயகாந்த் தான் மானசீக குரு என தெரிவிக்க வேண்டும்.

    மாநாடு வெற்றி பெற தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகள்.

    விருத்தாசலம் தொகுதியில் நான் போட்டியிடுவதாக இதுவரை முடிவு எடுக்கவில்லை.

    திட்டக்குடி தொகுதியில் மாநாடு நடத்தி போட்டியிடுவது குறித்து தெரிவிப்பேன். 234 தொகுதிகளும் எங்களுக்கு சாதகமாகத் தான் உள்ளது. துரோகிகள் காலம் முடிந்து விட்டது. விசுவாசிகள் தான் உடன் இருக்கிறார்கள். கூட்டணி அமைந்த பிறகு எதுவாக இருந்தாலும் தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளர்நல்லூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் (19), ஆதினேஷ் (22), வேலு (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பயணித்த கார் விபத்துக்குள்ளானத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்கள் மயிலம் போலீசாருக்கு மற்றும் திண்டிவனம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • சுமார் 2 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மயிலம்:

    திருவாரூர் மாவட்டம் கண்டரமாணிக்கம் அக்ரகாரத் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் பிரபு (வயது 28). இவர் அரியலூரில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது டீசல் நிரப்புவதற்காக திருக்கனூருக்கு சென்றுள்ளார்.

    அங்கு டீசல் நிரப்பிய பின் மீண்டும் சென்னையை நோக்கி மயிலம் வழியாக புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டேரிப்பட்டு அருகே லாரி வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி நின்றது. பின்னர் லாரியில் தீ பிடித்து மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் பிரபு உடனடியாக கதவை திறந்து வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் அங்கு கூடிய பொதுமக்கள் மயிலம் போலீசாருக்கு மற்றும் திண்டிவனம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் இச்சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

      விருத்தாசலம்:

      விருத்தாசலம் அருகே குப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில், 2-வது மகன் ரோகித் (வயது4) இவர் குப்பநத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான்.

      இந்நிலையில், இன்று காலை ரோகித்தை பள்ளியில் விடுவதற்காக அவரது தந்தை முருகவேல் தன்னுடைய ஆட்டோவில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை பள்ளத்தில் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ரோகித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

      தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண் எதிரே ஆட்டோ கவிழ்ந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

      • ஆள் இல்லாத ரெயில்வே கேட் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
      • ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை மூடி மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

      கடலூர்:

      கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இலங்கியனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் செல்லும் ரெயில் பாதை உள்ளது. இந்நிலையில் இலங்கியனூர் அருகே உள்ள ஆள் இல்லாத ரெயில்வே கேட் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

      இந்நிலையில் அந்த பகுதியில் கேட் கீப்பர் இல்லாததால் ரெயில் வரும் நேரங்களில் மக்கள் அச்சத்துடன் சென்று வருவதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த ரெயில்வே கிராசிங்கில் கேட் கீப்பர் அமைத்து தர வேண்டும் அல்லது ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை மூடி மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

      இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

      மேலும் ரெயில்வே அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

      • தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
      • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் டவர்களையும் ஆய்வு செய்து வந்தனர்.

      பண்ருட்டி:

      கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள புதுபிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் ராஜா (45). இவர் விழுப்புரத்தில் வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

      இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 158 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

      இது குறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

      மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பண்ருட்டி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் டவர்களையும் ஆய்வு செய்து வந்தனர்.

      இந்த நிலையில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்தது வேலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (35) மற்றும் அவரது கூட்டாளிகளாக தர்மபுரியை சேர்ந்த முருகன், அசோக்குமார், தினேஷ்குமார், ஜெகதீசன் என 5 பேர் கும்பல் என தெரியவந்தது. இதில் சுரேஷ் இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

      இதனையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது குறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.
      • கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

      கடலூர்:

      கடலூர் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் செடல் உற்சவம் கடந்த 29-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சக்தி கரகம் மற்றும் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.

      இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் விழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.

      தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு உடலில் செடல் போட்டுக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும் கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

       

      பின்னர் சட்டி வைத்து கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவசத்துடன் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

      இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கொடி இறக்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

      • 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
      • வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.

      வேப்பூர்:

      கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

      இந்நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு மங்களூர், பெரியநெசலூர், காட்டுமயில், கழுதூர், சிறுப்பாக்கம், கொத்தனூர், வேப்பூர், தியாகதுருவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

      இந்த நிலையில் ஆடிப்பெருக்கு நாளைமறுநாள் (3-ந்தேதி) கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது. வாரச்சந்தையில் சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.

      இதில் கொடிஆடு, கருப்பாடு, வெள்ளாடு, ஜமுனா பூரி, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளாடு உள்ளிட்ட 8 விதமான ஆட்டுரகங்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த வாரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமான நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

      ×