என் மலர்
கடலூர்
- கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது.
- தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது.
கடலூர்:
கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் செல்வதற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 4 நாட்களும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் 3 நாட்கள் சென்னை மற்றும் பெருநகருக்கு செல்வதற்கு மற்றும் வருவதற்கும் கூடுதல் பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் இயங்குகின்ற பஸ்கள் கிராமப்புறம் செல்வதற்கும், குறைபாடுகள் இல்லாமல் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு உள்ளது.
தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ்கள் வாங்கி வருகின்றனர். அவர் அவர்கள் தனியாக ஆன்லைன் விண்ணப்பம் கொண்டு வந்துள்ளனர்.
ஏற்கனவே தனியார் ஆம்னி பஸ் சங்கத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக ஒத்துழைப்பு வழங்குவது போல் இந்தாண்டும் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என சங்க நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.
புதிதாக வருகிறவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்து உள்ளோம். இது தொடர்பாக குழு அமைத்து தீவிர விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும். எந்த நிறுவனம் ஈடுபட்டாலும் நேரடியாக தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம், மாதந்தோறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கக்கூடிய நிலை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் காலாவதியான வாகனங்கள் இயக்க முடியாது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள் விழா நாட்களில் மட்டும் ஒரு சில பஸ்கள் இயக்க நேரிடுகிறது. இதனையும் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்பாடு விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும்.
- பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் தினந்தோறும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை மற்றும் தேசிகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை என்பதால் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த வேண்டி சாலக்கரை இலுப்பை தோப்பில் மொட்டை அடிக்கும் கூடாரத்தில் திரண்டு மொட்டை அடித்து சென்றனர். சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
- அக்டோபர் மாதம் 11-ந்தேதி கடலூர் மாவட்டத்திற்கு விஜய் வந்து மக்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.
கடலூர்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக அவர் திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். 2-வது கட்டமாக அவர் நாகை, திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டர். நடிகர் விஜய் வருகிற 11-ந் தேதி கடலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். விஜய் பேசுவதற்காக கடலூரில் 2 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் வெற்றி பேரணியில் தமிழ்நாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் 11-ந்தேதி கடலூர் மாவட்டத்திற்கு விஜய் வந்து மக்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.
கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் மற்றும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை பகுதியில் மதியம் 2 மணிக்கு தலைவர் விஜய் மக்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள். ஆகையால் 2 இடங்களில் விஜய் பேசுவதற்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
- இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், தூக்கணாம்பாக்கம், ராசாபாளையம், புதபூஞ்சோலைகுப்பம்
கடலூர்:
கடலூர் நல்லாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளைமறுநாள் (23-ந் தேதி) நடக்கிறது.
இதனால் நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ் குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், புதுக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், தூக்கணாம்பாக்கம், ராசாபாளையம், புதபூஞ்சோலைகுப்பம் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் வள்ளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
- சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரி மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை 5-வது முறையாக கடந்த 1-ந்தேதி எட்டியது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கீழணையில் இருந்து பல்வேறு ஓடைகள், மதகுகள் வழியாக வீராணம் ஏரிக்கு 470 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் கடந்த வாரம் வெயிலின் தாக்கத்தில் ஏரியின் நீர் மட்டம் குறைந்த நிலையில் தற்போது தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரி 6-வது முறையாக முழு கொள்ளளவான 47.40 அடியை எட்டியது.
சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வி.என். எஸ். மதகு மூலம் 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் 470 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு 247 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் ஏரியின் மதகு, கரைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீராணம் ஏரி பகுதியில் 11 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம்.
- வரும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும்.
சிதம்பரம்:
ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க தி.மு.க. கூட்டணியில் வலியுறுத்துவோம் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
சிதம்பரம் வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம். வக்பு சட்ட திருத்தம் மூலமாக அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி ஒரு தீர்மானம் கொண்டு வந்து பரிசோதித்து பார்க்கிறார்.
அதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. இது மிகவும் வரவேற்க தக்கது. உலகில் சக்தி வாய்ந்த நாடுகள் தங்களுடைய மதத்திற்கு அதிகளவு மரியாைத கொடுப்பதில்லை.
ஆனால் இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை கொடுக்கிறோம. இந்த நிலையில் வக்பு வாரியத்திற்கு மட்டும் சட்ட திருத்தம் செய்வது ஏன்?
சட்ட திருத்தம், அனைதது மதங்களுக்கும் செய்து தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். வக்பு வாரியத்திற்கு மட்டும் திருத்தம் கொண்டு வருவதை ஏற்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு நமது அரசமைப்பு சட்டத்தை கடைபிடித்து வக்பு வாரிய சட்டத்தின் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து காப்பாற்றி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் தேர்தல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம்.
வரும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும்.
அத்துடன் தமிழகத்தில் கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க கூட்டணியில் வலியுறுத்தப்படும் என்றார்.
- மது போதையில் காரை கடற்கரை ஓரமாக மணலில் ஓட்டியுள்ளார்கள்.
- 4 வீல் டிரைவ் காரினை கடலுக்குள் ஓட்டி விஷப்பரிட்சையில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கடலூர் வழியாக பயணத்தை மேற்கொண்டனர். இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை ஓரமுள்ள சாலையை பயன்படுத்தி கூகுள் மேப் மூலமாக பயணம் செய்தனர்.
கடலூர் சொத்திகுப்பம் பகுதி அருகே இவர்கள் சென்றபோது காரில் இருந்தவர்கள் மது போதையில் காரை கடற்கரை ஓரமாக மணலில் ஓட்டியுள்ளார்கள். 4 வீல் டிரைவ் கார் என்பதால் இந்த கார் மணலில் செல்லும் என்று இவர்கள் மணல் பரப்பு வழியாக சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது.
அந்தப் போட்டியில் போர் வீல் டிரைவ் கார் மணலில் மட்டுமல்ல கடலிலும் செல்லும் என அதில் ஒருவர் கூற காரை ஓட்டிக்கொண்டு வந்தவர் திடீரென கடலுக்குள் காரை இறக்கினார். சிறிது தூரம் சென்ற கார் திடீரென கடலில் நின்று விட்டது. கடலில் தத்தளித்த இவர்களை அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் உடனடியாக படகில் இருந்து இறங்கி 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் காரை காவல்துறை உதவியுடன் டிராக்டர் மூலம் கட்டி இழுக்கப்பட்டது. காரில் வந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 4 வீல் டிரைவ் காரினை கடலுக்குள் ஓட்டி விஷப்பரிட்சையில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொள்ளை சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தினர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியில் ரெயில் நிலையம் பகுதியில் இரச்சகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் பூசாரிகளாக பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது சாமிக்ககான பூஜை பொருட்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் வைத்திருக்கும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவுக்குள் இருந்த 3 ஜோடி வெள்ளி கண்மலர், நெத்திபட்டை, மூக்கு பட்டி மற்றும் பட்டுப் புடவைகள் என சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
மேலும் கோவில் கதவின் பூட்டு உடைப்பதற்கு பயன்படுத்திய கடப்பாரையும், உடைக்கப்பட்ட பூட்டும் அருகிலேயே கிடந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் கேமராக்கள் எதுவும் இல்லாததால் அருகில் உள்ள விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவரையும் அவர்கள் தாக்க முயன்றனர்.
- இதுதொடர்பான புகாரின்பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 63). இவரது சகோதரர்களான வைத்தியநாதன், சிங்காரவேல் ஆகிய 2 பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். விவசாயிகளான இவர்கள் 3 பேருக்கும் பொதுவான நிலம் உள்ளது.
இதை பாகப்பிரிவினை செய்து கொள்வது தொடர்பாக 3 பேரின் குடும்பத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் வைத்தியநாதனின் மனைவி சின்னையாள் (47), பிரச்சினைக்குரிய இடத்தில் வீடு கட்டுவதற்கான பணியை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு சிங்காரவேலின் மனைவி செல்வராணி (55) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சின்னையாள், அவரது மகள்கள் ஜெயசித்ரா, ஜெயந்தி, அனுராதா ஆகியோர் சேர்ந்து செல்வராணியை தாக்கினர். மேலும் அவரை மரத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவரையும் அவர்கள் தாக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஓடிவந்து செல்வராணியை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுதொடர்பான புகாரின்பேரில் சின்னையாள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுராதாவை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது.
- கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டுதல் செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து வருகின்றனர்.
இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் 100 முதல் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று( 4-ந்தேதி) ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதை தொடர்ந்து அதிகாலை முதல் மணமக்கள் தங்கள் உறவினர்களுடன் திருவந்திபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து நடந்தும் ஷேர் ஆட்டோக்களிலும் சென்றனர்.
இதனால் திருவந்திபுரம் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இந்த நிலையில் கோவில் மண்டபத்தில் 105 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 130 திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாலையில் திரண்டதால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் போக்குவரத்து நெரிசலை உடனுக்குடனுக்குடன் சரி செய்து அனுப்பி வைத்தனர்.
- அரசியல் விஷயங்கள் எல்லாம் போக, போக தெரியும்.
- தாலாட்டு பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடலூர்:
கடலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம், டாக்டர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ், போக, போக தெரியும் என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், நான் அரசியல் வியாதியும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. சமூக சீர்திருத்தவாதி என்றார்.
முன்னதாக கடலூர் அருகே ராமாபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், டாக்டர் அன்புமணி பற்றிய கேள்விக்கு, சொல்வதற்கு ஏதும் இல்லை. எதுவும் இல்லை. அரசியல் விஷயங்கள் எல்லாம் போக, போக தெரியும். எதுவும் சொல்லக்கூடாது என்றார்.
அதைத்தொடர்ந்து பா.ம.க. மாவட்ட செயலாளர் கோபிநாத் வீட்டுக்கு சென்ற அவர் அவரது இரட்டை குழந்தைகளில், ஒன்றை எடுத்து கொஞ்சியபடி தாலாட்டு பாடினார். காலை எழும் சூரியனே , ஆராரோ, ஆரிராரோ என்று பாடினார்.
இந்த தாலாட்டு பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- நடப்பாண்டில் 5-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் இந்த ஏரிக்கு தண்ணீர் வரும்.
இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர்மட்டத்துக்கேற்ப வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் நீர்வரத்து காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து 4 முறை வீராணம் ஏரி நிரம்பியது. அதனை தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பியது மற்றும் சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக குறைந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டனர்.
தொடர்ந்து மேலணை மற்றும் கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 2 அடியில் இருந்த கீழணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 9 அடியை எட்டியது.
அதனை தொடர்ந்து கடந்த 23-ந்தேதி முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.
இதன் மூலம் நடப்பாண்டில் 5-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 680 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கீழணை, வீராணம் ஏரியில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.






