என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த நிலையில் இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னையில் இருந்து 990 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, 'மோன்தா' என பெயரிடப்பட உள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மசிலிப்பட்டணம்-விசாகப்பட்டினம் இடையே நாளை மறுநாள் மோன்தா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும் நாளை மறுநாள் மற்றும் 28-ந்தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் தூரப் புயல் எச்சரிக்கையான ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகள் கடற்கரை ஓரமாகவும் கடலூர் துறைமுகத்திலும் அணிவகுத்து நிற்கின்றன.






