என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 2019-ல் பூங்காவில் தனது நண்பருடன் 16 வயது பள்ளி மாணவி பேசிக்கொண்டிருந்துள்ளார்.
    • அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரது நண்பரை அடித்து தள்ளி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    2019-ல் பூங்காவில் தனது நண்பருடன் 16 வயது பள்ளி மாணவி பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரது நண்பரை அடித்து தள்ளி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் குற்றவாளிகள் ஏழு பேருக்கும் வாழ்நாள் சிறை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி இணையுமா? என்றால் எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்ட கட்சி தான்.
    • காமராஜர் செய்த பணிகள் குறித்து பேசுவதற்கு எவ்வளவோ உள்ளன.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இன்று தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க.-அ.தி.முக கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை. கூட்டணி ஆட்சி குறித்து நான் கருத்து கூற மாட்டேன். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது.

    தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சிறப்பாக இருக்கும். அதனை பெரிய தலைவர்கள் பார்த்து கொள்வார்கள். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி இணையுமா? என்றால் எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்ட கட்சி தான்.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து திருச்சி சிவா எம்.பி. பேசிய கருத்து மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப்பெரிய தலைவரை கொச்சைப்படுத்தியுள்ளனர். அதற்கு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அப்படியே விட்டு விடுங்கள் என்கிறார். முதலமைச்சரும் அவரை கண்டுகொள்ளாமல் இதில் சிலர் குளிர் காய நினைக்கிறார்கள் விட்டு விடுங்கள் என்கிறார்.

    அவர்களுக்கு யாருக்கும் பயம் இல்லை. ஓட்டுக்கு தான் பயம். காமராஜர் செய்த பணிகள் குறித்து பேசுவதற்கு எவ்வளவோ உள்ளன.

    காமராஜர் திருச்சியில் பெல் தொழிற்சாலை ஏற்படுத்தினார். இதன் மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதை சிவா எம்.பி. முதலில் சென்று பார்க்க வேண்டும்.

    இந்த பிரச்சனையில் காங்கிரஸ் தி.மு.க.வுடன் ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் மணல் கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது. மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்த மண்டல தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினரை வீடு, வீடாக சென்று பேசுங்கள். 1½ கோடி உறுப்பினரை சேருங்கள்.

    30 சதவீதம் வாக்காளர்களை சேருங்கள் என்று கூறி வருகிறார். மக்கள் தி.மு.க.வினரை நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார்.

    கோவை:

    கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது52). கட்டிட கான்ட்ராக்டராக உள்ளார்.

    இவரது சமூகத்திற்கு சொந்தமான கோவில் சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக நிலம், கட்டிடங்கள் உள்ளன.

    இந்த நிலையில் இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறைக்கு மாற்ற வேண்டும் என சுரேஷ்குமார் மற்றும் சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையடுத்து சுரேஷ்குமார், கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று, அங்கு உதவி ஆணையராக இருக்கும் இந்திரா(54) என்பவரை சந்தித்து, எங்கள் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    ஆனால் பலமுறை சந்தித்து பேசியும் இதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

    இருப்பினும் சுரேஷ்குமார் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று உதவி ஆணையர் இந்திராவை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி வந்தார்.

    அப்போது இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.3 லஞ்சம் தர வேண்டும் என கேட்டார். அதற்கு சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார். அப்போது ரூ.1½ லட்சம் கொடுங்கள். உடனே நடவடிக்கை எடுத்து விடுகிறேன் என தெரிவித்தார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார். பின்னர் நேராக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு சென்று போலீசாரிடம் இதுதொடர்பாக தெரிவித்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் கேட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சுரேஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சம் பணம் கொடுத்தனர்.

    அதனை வாங்கி கொண்ட சுரேஷ்குமார், பெண் உதவி ஆணையர் இந்திராவுக்கு போன் செய்து பணம் ரெடி பண்ணிவிட்டதாகவும், எங்கு வந்து தர வேண்டும் என கேட்டார்.

    அதற்கு இந்திரா, பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடைக்கு வருமாறு தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு சுரேஷ்குமார் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சத்தை பணத்தை எடுத்து கொண்டு அங்கு சென்றார்.

    பின்னர் பெண் உதவி ஆணையர் இந்திராவை சந்தித்தார். அப்போது அவர் தான் வைத்திருந்த மஞ்சள் நிற பேக்கை காண்பித்து அதில் பணத்தை வைக்குமாறு தெரிவிக்கவே, அவரும் அதில் வைத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    முதலில் லஞ்சம் வாங்கியதை மறுத்த அவர், பின்னர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    இன்று காலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். முன்னதாக அவரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

    • மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • பாரதிநகர் சாமநாயக்கன் பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    கோவை:

    கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக நாைள காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், மத்தம்பாளையம், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்ன மத்தம்பாளையம்,

    மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதிநகர் சாமநாயக்கன் பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • வாகனத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வேலைக்காக அருகே இருக்கும் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வழக்கம் போல காட்டம்பட்டி அருகே வாய்க்கால் வேலைக்கு புறப்பட்டனர்.

    இவர்கள் தங்கள் பகுதியில் இருந்து ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர். இந்த வாகனத்தை தேவ பாலு என்பவர் ஓட்டினார்.

    அப்போது ஆழியார் அடுத்த சின்னார்பதி மலைப்பாதையில் சென்றபோது அங்குள்ள வளைவில் வாகனம் திரும்பியது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோரும் படுகாயம் அடைந்தனர்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பார்த்து ஓடி வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நவமலையை சேர்ந்த ராணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திலகராஜ் என்பவர் உயிரிழந்தார்.

    மற்றவர்கள் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற ஒருவர் செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கியுள்ளார்.
    • போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வாரம் கோவையில் 2 நாட்கள் முகாமிட்டு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோவையில் இன்று தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

    கோவை டாடாபாத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் தொடங்கியது. போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கியுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று.

    ஆனால் கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய எடப்பாடி பழனிசாமியை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

    மேலும் தமிழ்நாட்டில் கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வை கண்டித்தும் இந்த போராட்டம் நடக்கிறது" என்றார்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
    • தமிழகத்தை திமுக அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளாக சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கடந்த 4 ஆண்டுகளாக தி.மு.க. அரசாங்கம் தமிழக மக்களை படுகுழியில் தள்ளி இருக்கிறார்கள். சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு என மக்களின் தலையின் மீது சுமையை ஏற்றி மக்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத ஆட்சி வரும் தேர்தலில் விரட்டி அடித்து அகற்றப்படும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற பெண் மீது தாக்குதல் நடந்துள்ளது. விசாரணை என்ற பெயரில் 24 பேர் லாக்கப் டெத் என்னும் காவல்நிலைய பாதுகாப்பில் இருந்தபோது மரணம் அடைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த அஜித்குமாரின் படுகொலை காவல்துறையின் படுகொலையாக பார்க்கப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி முதல்வர் ஸ்டாலின் தடுமாறி உளர ஆரம்பித்துள்ளார்.

    தமிழகத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை சுற்றியுள்ள தம்பிகளின் ஆட்சி தான் நடக்கிறது.

    அவர்கள்தான் ஒவ்வொரு துறையையும் கவனித்துக் கொள்கிறார்கள். டாஸ்மாக், மணல் கொள்ளை, பத்திரப்பதிவு ஊழல், கனிம வள கொள்ளை என தமிழகத்தை திமுக அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளாக சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். அதற்காகத்தான் மேட்டுப்பாளையத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரமாண்ட யாத்திரையை தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.

    இந்த யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தி.மு.கவை வீட்டுக்கு அனுப்புகிற யாத்திரையாக இது இருக்கும். இதே போல் இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் ஆன்மீக பூமி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதனை எங்களது தலைவர் அமித்ஷாவே பலமுறை தெரிவித்து விட்டார். நாங்கள் அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

    ஆனால் தி.மு.க கூட்டணியில் தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரே தமிழகத்தில் நடைபெறும் லாக்கப் டெத் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து தினந்தோறும் விமர்சித்து வருகின்றன.

    தேசிய கல்வி கொள்கையை பொறுத்தவரை அரசியல் காரணத்திற்காக தி.மு.க அரசு அந்த திட்டத்தை ஏற்க மறுத்து மாணவர்களின் கல்வியில் விளையாடி அரசியல் செய்கிறது.

    தமிழகத்தின் வளர்ச்சிக்காக சமூக நலன் சார்ந்த திட்டங்களான சாலை மேம்பாட்டு, ரெயில் நிலையம் மேம்பாட்டு, ஜல்ஜீவன் மற்றும் விவசாயிகளுக்கு ஆண்டுகளுக்கு 6,000 உதவித்தொகை, 3 கோடி மக்களுக்கு இலவச அரிசி என இதுவரை ரூ.11 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது.

    த.வெ.க தலைவர் விஜயின் செயல்பாடுகளை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    தேசிய ஜனநாயக கூட்டணி யாரோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது, கூட்டணியில் இன்னும் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பது போகப் போக தெரியும். தேசிய தலைமை தான் இவை அனைத்தையும் அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • யானைகள் பகல் நேரத்திலும் ஊருக்குள் புகுந்து சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.
    • கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் ஒற்றை காட்டு யானை கடந்த 2 மாதங்களாக முகாமிட்டு உள்ளது. இந்த யானை மேல் கூடலூர், கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், செம்பாலா, கோத்தர் வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உலா வருகிறது.

    பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் ஓய்வெடுக்கும் யானை மாலை நேரத்துக்கு பிறகு கூடலூருக்குள் வந்து விடுகிறது. பின்னர் அங்குள்ள வீடுகளை முற்றுகையிடுவது, பயிர்களை தின்று சேதப்படுத்துவது போன்ற செயல்களில் தினமும் ஈடுபட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை நடுக்கூடலூர் மெயின் ரோட்டில் வலம் வந்த காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் பதுங்கினர்.

    இதேபோல மாக்கமூலாவில் 3 காட்டு யானைகள் பகல் நேரத்திலும் ஊருக்குள் புகுந்து சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. பின்னர் கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமங்களான தொரப்பள்ளி, குனில்வயல், ஏச்சம்வயல், தேன்வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரத்தில் இடம்பெயர்ந்து அங்கு விளைந்து நிற்கும் பயிர்களை தின்று நாசம் செய்துவிட்டு சென்றது.

    குனில் வயல் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் ருக்குமணி என்பவரின் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து, சாப்பிடுவதற்கு உணவு பொருட்கள் கிடைக்குமா? என துதிக்கை விட்டு தேடிப்பார்த்தது.

    அப்போது வீட்டில் இருந்த ருக்குமணி அச்சத்தில் சத்தம் போட்டார். தொடர்ந்து காட்டு யானைகள் அங்குள்ள வயல்களுக்கு புறப்பட்டு சென்றன. பின்னர் விளைநிலம் வழியாக காட்டு யானைகள் மாக்கமூலா பகுதிக்கு சென்றன.

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் கார்குடி வனச்சரகர் பாலாஜி, வனவர் தங்கராஜ், வனக்காப்பாளர் வினித் உள்ளிட்ட ஊழியர்கள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • நம்முடைய ஆன்மீகத்தை விரிவாக பார்க்கக் கூடிய மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.
    • கோவிலை சார்ந்த ஆட்சியாகத்தான் அமையும்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடத்தில் நடந்த குருபவுர்ணமி விழாவில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    ஜூலை-ஆகஸ்டு மாதத்தில் வரக்கூடிய குருபவுர்ணமி அன்று வட இந்தியாவில் இரவு குறைவாகவும், பகல் அதிகமாகவும் இருக்கும். இயற்கையாகவே இந்த குருபவுர்ணமி ஒரு விசேஷமான நாள்தான். இந்த நாளுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடக்கும்.

    எனவே இந்த நாளில் குருவிடம் அருளாசி பெறும்போது இன்னும் நல்ல மனிதர்களாக, நம்முடைய ஆன்மீகத்தை விரிவாக பார்க்கக் கூடிய மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.

    மிக மிக குறைவாக மூச்சு விடுகின்ற ஆமைக்கு ஆயுள் அதிகம். பிராண ரகசியத்தை யார் உணர்ந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஆயுள் அதிகம் என்பதை மிகத்தெளிவாக, ஆமை போன்ற ஜீவராசிகளை பார்க்கும்போது நமக்கு தெரியும்.

    இந்நாட்டில் ராஜா, முதலமைச்சர் என யாராக இருந்தாலும் சன்னியாசிகள் முன் என்று தரையில் அமர ஆரம்பிக்கிறார்களோ, அன்று தான் உண்மையான ஆன்மீக ஆட்சி வந்து விட்டது எனலாம்.

    தமிழகத்தில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் இருக்கும். கோவிலை சார்ந்த ஆட்சியாகத்தான் அமையும். இது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் சனாதன தர்மம் காக்க சன்னியாசிகள் உடன் பயணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெய்லர் ராஜா கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் பதுக்கி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
    • போலீசார் பலத்த பாதுகாப்புடன் டெய்லர் ராஜாவை அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா உள்பட 120-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

    இந்த வழக்கில் தொடர்புடைய கோவை கரும்புக்கடையை சேர்ந்த டெய்லர் ராஜா என்ற ஷாஜகான் ஷேக்(வயது 47) என்பவர் தலைமறைவானார்.

    அவர் மீது கடந்த 1996-ம் ஆண்டு கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் கோவை சிறை ஜெயிலர் பூபாலன் உயிரிழந்தது, நாகூரில் சயீதா என்பவரை கொலை செய்தது, 1997-ம் ஆண்டு மதுரையில் சிறைத்துறை அதிகாரி ஜெயப்பிரகாசை கொலை செய்தது போன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

    அவர் போலீசாரிடம் சிக்காமல் கடந்த 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக கோவை கோர்ட்டு அறிவித்தது. கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் டெய்லர் ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்தநிலையில் மற்றொரு வழக்கில் தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரை ஆந்திர மாநிலம் அன்னமயா என்ற பகுதியில் கோவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் பதுக்கி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த டெய்லர் ராஜாவை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இதில் அவர் கோவையில் இருந்து தப்பிச்சென்று சத்தீஸ்கர், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மாறி மாறி சென்று 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட டெய்லர்ராஜாவை கோவை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு வெர்ஜின் வெஸ்டா உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் டெய்லர் ராஜாவை அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக டெய்லர் ராஜாவை கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவை கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று காலையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் போலீசார் உஷார் நிலையில் இருந்தனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு டெய்லர் ராஜா முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர் மீது 3 கொலை வழக்கு உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளது. அவர் தனது பெயரை சாதிக், ராஜா, வளர்ந்த ராஜா, ஷாஜகான், அப்துல்மஜீத், ஷாஜகான் ஷேக் என மாற்றிக்கொண்டு ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் பல மாநிலங்களில் 28 ஆண்டுகளாக சுற்றித்திரிந்து உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் அதிக தகவல் கிடைக்கும். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்பட்ட பஸ்களும் ஓடவில்லை.
    • கோவையில் இருந்து இயக்கப்படும் தமிழக பஸ்கள் கேரள எல்லை வரை இயக்கப்பட்டன.

    கோவை:

    நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், 42 தொழிலாளர் நல சட்டங்களை திரும்பபெற கோரி வலியுறுத்தியும் இன்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கோவையிலும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் ஆட்டோக்கள், வேன் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. குறைந்த அளவிலேயே ஆட்டோர், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கின. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சங்கத்தினர் பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கேரளாவில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருவதால், அங்கு பஸ்கள் அனைத்தும் ஓடவில்லை.

    கேரளாவையொட்டி கோவை மாவட்டம் உள்ளது. கோவையில் இருந்து அன்றாட பணிகளுக்காகவும், கேரளாவில் இருந்து கல்லூரி மற்றும் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இதற்காக கோவையில் இருந்து தமிழகம் மற்றும் கேரள போக்குவரத்து கழகம் சார்பில் 50 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று போராட்டம் நடந்த காரணத்தால், இந்த 50 பஸ்களும் ஓடவில்லை. இதேபோல் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்பட்ட பஸ்களும் ஓடவில்லை.

    கோவையில் இருந்து இயக்கப்படும் தமிழக பஸ்கள் கேரள எல்லை வரை இயக்கப்பட்டன. பயணிகள் அதில் பயணித்து அங்கிருந்து வேறு வாகனங்களில் கேரளா சென்றனர்.

    இதன் காரணமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்வோரும், அங்கிருந்து கல்லூரி மற்றும் வேலை விஷயங்களுக்காக கோவை வருவோம் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் ரெயில்களில் பயணித்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதனால் கோவை ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அதே நேரத்தில் கோவையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன.

    பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்சில் பயணித்தனர். 

    • எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
    • நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.

    2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.

    அதன்பின் பொதுமக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?. இதை சதிச் செயலாக மக்கள் பார்க்கின்றனர்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கோயில் நிதியில் அரசு கல்லூரிகள் தொடங்கியதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    ×