என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவுக்கு ஜூலை 24 வரை நீதிமன்ற காவல்
- டெய்லர் ராஜா கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் பதுக்கி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
- போலீசார் பலத்த பாதுகாப்புடன் டெய்லர் ராஜாவை அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா உள்பட 120-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய கோவை கரும்புக்கடையை சேர்ந்த டெய்லர் ராஜா என்ற ஷாஜகான் ஷேக்(வயது 47) என்பவர் தலைமறைவானார்.
அவர் மீது கடந்த 1996-ம் ஆண்டு கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் கோவை சிறை ஜெயிலர் பூபாலன் உயிரிழந்தது, நாகூரில் சயீதா என்பவரை கொலை செய்தது, 1997-ம் ஆண்டு மதுரையில் சிறைத்துறை அதிகாரி ஜெயப்பிரகாசை கொலை செய்தது போன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
அவர் போலீசாரிடம் சிக்காமல் கடந்த 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக கோவை கோர்ட்டு அறிவித்தது. கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் டெய்லர் ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் மற்றொரு வழக்கில் தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரை ஆந்திர மாநிலம் அன்னமயா என்ற பகுதியில் கோவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் பதுக்கி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த டெய்லர் ராஜாவை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இதில் அவர் கோவையில் இருந்து தப்பிச்சென்று சத்தீஸ்கர், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மாறி மாறி சென்று 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட டெய்லர்ராஜாவை கோவை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு வெர்ஜின் வெஸ்டா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் டெய்லர் ராஜாவை அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக டெய்லர் ராஜாவை கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவை கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று காலையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் போலீசார் உஷார் நிலையில் இருந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு டெய்லர் ராஜா முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர் மீது 3 கொலை வழக்கு உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளது. அவர் தனது பெயரை சாதிக், ராஜா, வளர்ந்த ராஜா, ஷாஜகான், அப்துல்மஜீத், ஷாஜகான் ஷேக் என மாற்றிக்கொண்டு ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் பல மாநிலங்களில் 28 ஆண்டுகளாக சுற்றித்திரிந்து உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் அதிக தகவல் கிடைக்கும். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






