என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொள்ளாச்சி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி
    X

    பொள்ளாச்சி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி

    • வாகனத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வேலைக்காக அருகே இருக்கும் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வழக்கம் போல காட்டம்பட்டி அருகே வாய்க்கால் வேலைக்கு புறப்பட்டனர்.

    இவர்கள் தங்கள் பகுதியில் இருந்து ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர். இந்த வாகனத்தை தேவ பாலு என்பவர் ஓட்டினார்.

    அப்போது ஆழியார் அடுத்த சின்னார்பதி மலைப்பாதையில் சென்றபோது அங்குள்ள வளைவில் வாகனம் திரும்பியது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோரும் படுகாயம் அடைந்தனர்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பார்த்து ஓடி வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நவமலையை சேர்ந்த ராணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திலகராஜ் என்பவர் உயிரிழந்தார்.

    மற்றவர்கள் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற ஒருவர் செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×