கூடலூரில் வீட்டு ஜன்னலை உடைத்து உணவு தேடிய யானை- பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

யானைகள் பகல் நேரத்திலும் ஊருக்குள் புகுந்து சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
கூடலூரில் வீட்டு ஜன்னலை உடைத்து உணவு தேடிய யானை- பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் ஒற்றை காட்டு யானை கடந்த 2 மாதங்களாக முகாமிட்டு உள்ளது. இந்த யானை மேல் கூடலூர், கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், செம்பாலா, கோத்தர் வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உலா வருகிறது.

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் ஓய்வெடுக்கும் யானை மாலை நேரத்துக்கு பிறகு கூடலூருக்குள் வந்து விடுகிறது. பின்னர் அங்குள்ள வீடுகளை முற்றுகையிடுவது, பயிர்களை தின்று சேதப்படுத்துவது போன்ற செயல்களில் தினமும் ஈடுபட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை நடுக்கூடலூர் மெயின் ரோட்டில் வலம் வந்த காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் பதுங்கினர்.

இதேபோல மாக்கமூலாவில் 3 காட்டு யானைகள் பகல் நேரத்திலும் ஊருக்குள் புகுந்து சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. பின்னர் கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமங்களான தொரப்பள்ளி, குனில்வயல், ஏச்சம்வயல், தேன்வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரத்தில் இடம்பெயர்ந்து அங்கு விளைந்து நிற்கும் பயிர்களை தின்று நாசம் செய்துவிட்டு சென்றது.

குனில் வயல் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் ருக்குமணி என்பவரின் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து, சாப்பிடுவதற்கு உணவு பொருட்கள் கிடைக்குமா? என துதிக்கை விட்டு தேடிப்பார்த்தது.

அப்போது வீட்டில் இருந்த ருக்குமணி அச்சத்தில் சத்தம் போட்டார். தொடர்ந்து காட்டு யானைகள் அங்குள்ள வயல்களுக்கு புறப்பட்டு சென்றன. பின்னர் விளைநிலம் வழியாக காட்டு யானைகள் மாக்கமூலா பகுதிக்கு சென்றன.

கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் கார்குடி வனச்சரகர் பாலாஜி, வனவர் தங்கராஜ், வனக்காப்பாளர் வினித் உள்ளிட்ட ஊழியர்கள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com