என் மலர்
சென்னை
- மோன்தா புயல் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது
- புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- சென்னைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் த.வெ.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் 'வீடியோ கால்' மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். அதன்படி, கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக கரூரில் உள்ள ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசும் வகையில், த.வெ.க. சார்பில் மண்டபம் தேடும் பணி நடந்தது. மண்டபம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மண்டபத்தின் உரிமையாளர் திடீரென விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் திருச்சியில் நிகழ்ச்சியை நடத்த கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால் அங்கும் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.
அதன்படி, இந்த சந்திப்பு இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ்' ஓட்டலில் நடைபெற உள்ளது. உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 10 பேர் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு மேற்கண்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இவர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் த.வெ.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்திக்க உள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவித்தபடி ரூ.20 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், காயம் அடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்வின்போது, காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்திக்கும் வகையில் விஜய்யின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று அதிகாலை முதலே கட்சியின் தொண்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களது கார்களில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களை கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒரு அரங்கில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு உணவு வழங்கிய பின், அங்கிருந்து 5 சொகுசு பஸ்களில் 36 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர். அவர்களை விஜய் இன்று சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
- இன்று அதிகாலை 2.30 மணியளவில் மோன்தா புயல் உருவானது
- மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், மோன்தா புயலால் சென்னையின் இன்று மிதமான மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மோன்தா புயல் சென்னைக்கும் மிகவும் குளிரான வானிலையைக் கொண்டுவரும். ஆனால் இந்த புயலால் சென்னையில் மிக கனமழை பெய்யாது.
வட சென்னையில் 50-70 மிமீ வரை மழை பெய்யும். தென் சென்னையில் 10-50 மிமீ மழை பெய்யும்.
ஆந்திராவுக்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் புலிகாட் போன்ற பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்யும். வட சென்னையில் மட்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இன்று காலை தொடங்கி நாள் முழுவதும் லேசான தீவிரத்துடனும் அவ்வப்போது கன மழை பெய்யும். நாளை காலைக்குள் மழை நின்றுவிடும்.
- இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் உதவி தொகை வழங்கினார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்நிலையில், சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு பொது மக்கள் சூழ பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
குதிரை சாரட்டில் அவரை அமர வைத்து மாலை அணிவித்து மகுடம் சூட்டி, மேலத்தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வறட்சியில் தவித்து வருகின்றன.
- 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிய பொற்கால ஆட்சி இது என்று முழங்குவது வெட்கக்கேடானது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில், 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறிதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்பட்டு "சொன்னீங்களே செஞ்சீங்களா..?" என்கிற தலைப்பில் பதிவிறே்றி வருகிறார்.
அந்த வகையில் இன்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ரூ.2000 கோடி செலவில் 200 தடுப்பணைகள் கட்டப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரூ. 2000 கோடி செலவில் 200 தடுப்பணைகள் கட்டப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 90-இல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர்மு.க.ஸ்டாலின் அவர்களே?
மருதையாற்றில் திருமானூர், தா.பழூர், கொள்ளிடம் குருவாடி, புளியங்கோம்பை அருகில் காட்டாறு, குண்டேரி, புஞ்சைபுகலூர், நன்னியூர், குளித்தலை ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என்று கொடுத்த வாக்குறுதியைக் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடப்பில் போட்டதால் இன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வறட்சியில் தவித்து வருகின்றன.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி ஏமாந்து, தற்போது தாகத்திற்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் கிட்டாமல் மக்கள் தள்ளாடும் வேளையில், 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிய பொற்கால ஆட்சி இது என்று முழங்குவது வெட்கக்கேடானது.
கொடுத்த வாக்குறுதியை வீசியெறிந்து, தாகத்தில் தவிக்க விட்ட இந்த திமுக அரசு தமிழகத்தில் இருந்து தூக்கியெறியப்படும் நாள் வெகுதூரமில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விடியா திமுக அரசு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளயாடுவதை ஏற்க முடியாது.
- பள்ளிக்காணை சதுப்புநிலம் 'ராம்சார் ஒப்பந்தம்'-படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும்.
தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கும் கொள்ளை மாடல் விடியா திமுக ஸ்டாலின் குடும்ப அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்றி குடும்ப ஆதிக்கத்தை வளர்க்க நினைக்கும் மக்கள் விரோத திமுக அரசு, கடந்த 2006-2011 மைனாரிட்டி திமுக ஆட்சியின்போது கண்ணில் பட்ட சொத்துக்களை எல்லாம் கபளீகரம் செய்ததும், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார்களை விசாரிக்க 2011-ல் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் 'நில அபகரிப்பு பிரிவு' என்ற தனிப் பிரிவை தமிழக காவல் துறையில் உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டதும் மக்கள் நன்கறிவார்கள்.
2021-ல் விடியா திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் மீண்டும் தன்னுடைய பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் சொத்துக்களை மிரட்டி கபளீகரம் செய்வதுடன், அரசுக்குச் சொந்தமான நிலங்களையும் பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக்கொண்டு தாரை வார்க்கத் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான எக்கர் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பருவமழைக் காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வடி நிலமாகவும், பல்லுயிர் பெருக்கத்திற்கு இதயமாகவும் விளங்குகிறது.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை மீட்டெடுக்க ஏற்கெனவே 16 கோடி ரூபாய் மதிப்பில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தை 2 விரிவுபடுத்தி, மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.165.68 கோடி செலவில் 'தேசிய பருவநிலை மாற்றத் தழுவல் நிதி' (National Adaptation Fund for Clin Change) கீழ், 695 ஹெக்டேர் சதுப்பு நிலத்தில் "பள்ளிக்கரணை சுற்றுச்சூழல் மீட்பு திட்டத்தினை" 2018-2019ல் செயல்படுத்த ஒப்புதல் வழங்கி, சதுப்பு நிலம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளிக்காணை சதுப்புநிலம் 'ராம்சார் ஒப்பந்தம்'-படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும்.
இதன்படி, 'ராம்சார் அறிவிக்கை செய்யப்பட்ட சதுப்பு நிலத்தியோ, அல்லது அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் எந்தவிதமான கட்டுமானங்களோ, சாலை கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது' என்று தென்மாநிலங்களுக்கான தேசிய பாமை தீர்ப்பாயம் வழக்கு எண். OA No: 91. நாள் 24.9.2025 அன்று வழங்கிய தீர்ப்பினை CMDA தன்னுடைய அலுயார்களுக்கு 610.2025 அன்று சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க சதுப்பு நிலங்கள் உயிர்நாடியாக திகழ்கின்றன என்ற காரணத்தினால், அவற்றை வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்பது ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நியதியாகும். இதை விடியா திமுக சு தளர்த்தி சுமார் 15 ஏக்கர் நிலத்தை 'பிரிகேட்' என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1250 குடியிருப்புகளை கட்ட அனுமதி வழங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
என்னதான் நவீன தொழில்நுட்பத்துடன் சதுப்பு நிலத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், அக்கட்டிடத்தின் அஸ்திவாரங்கள் அமைவனும், அதன்மேல் எழுப்பப்படும் கட்டிடங்களின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியதே! என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒரு பெரும் வெள்ளத்திற்கும். புயலுக்கும் அக்கட்டிடங்கள் தாங்காது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள். இத்திட்டத்தில் விடியா திமுக அரசு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளயாடுவதை ஏற்க முடியாது.
சென்னையின் சுற்றுச்சூழலை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த நாசகார திட்டத்திற்கு தமிழக வனத் துறை, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன? இதில் தொங்கி நிற்கும் ஊழல் என்ன? இதில் பல்லாயிரம் கோடி கை மாறியதாக வரும் செய்திகள் உண்மையா? என்பதை இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் அரணாகத் திகழக்கூடிய இந்த சதுப்பு நிலத்தில் எந்தவொரு கட்டுமான திட்டத்தையும் செயல்படுத்த இந்த அரசு அனுமதிப்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கை கட்டி வேடிக்கை பார்க்காது. கழக அரசு அமைந்தவடன் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் காளி வெங்கட் இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார்.
- பொது மக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
ஆன்லைன் பங்கு சந்தை மோசடி தொடர்பாக சென்னை காவல்துறை விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொது மக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
நடிகர் காளி வெங்கட் இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார்.
இந்த வீடியோவை சென்னை காவல்துறை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அத்துடன், ஆன்லைன் பங்கு சந்தை மோசடியில் இருந்து பொது மக்கள் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- உழவர்களின் கண்ணீரில் திமுகவின் இந்த பொய் மூட்டைகள் கரைந்து விடும் என்பது தான் உண்மை.
- திமுக அரசு துரோகம் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை?
நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல... கொடும் வேதனை! உழவர்களின் சாபம் ஆட்சியாளர்களை சும்மா விடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதை விட மிகவும் அதிகமாக ஆண்டுக்கு சராசரியாக 42 இலட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது பெரும் சாதனை என்றும் திமுக அரசு கூறியிருக்கிறது.
அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வேதனையை தங்களின் சாதனை என திமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது.
எப்போதெல்லாம் திமுக அரசு ஒரு விஷயத்தில் பெரும் தோல்வி அடைகிறதோ, அப்போதெல்லாம் கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளுடனான ஒப்பீடுகள், சராசரிக் கணக்குகள் ஆகியவற்றைத் தூக்கிக் கொண்டு வந்து தங்களின் தவறுகளை நியாயப்படுத்த திமுக அரசு முயலும். இப்போதும் கூட அதே உத்தியை திமுக அரசு கையாண்டிருக்கிறது. உழவர்களின் கண்ணீரில் திமுகவின் இந்த பொய் மூட்டைகள் கரைந்து விடும் என்பது தான் உண்மை.
திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 1.70 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. உண்மையில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 4.80 கோடி டன் நெல் விளைவிக்கப்பட்டிருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் தான் திமுக அரசு கொள்முதல் செய்திருக்கிறது. இது சாதனையா, வேதனையா?
2023&24ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 5.245 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், அதில் தமிழகத்தின் பங்கு வெறும் 4.52% மட்டும் தான். அதேநேரத்தில் பஞ்சாபிலிருந்து 23.62%, தெலங்கானா 12.15%, சத்தீஸ்கர் 15.80%, ஒதிஷா 9.17% நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உழவர்களிடமிருந்து போதிய அளவு நெல்லை கொள்முதல் செய்யாமல் திமுக அரசு துரோகம் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை?
உழவர்களுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 விலை கொடுப்பதாக திமுக அரசு பெருமைப்படுகிறது. ஆனால், ஒதிஷாவில் ரூ.3169, ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.2869 வீதம் ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டு உழவர்களுக்கு திமுக அரசால் இழைக்கப்படும் துரோகம் அல்லவா?
உழவர்களுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 தருவது திமுக அரசு அல்ல. அதில் ரூ.2369 -ஐ மத்திய அரசு தான் வழங்குகிறது. திமுக அரசின் சார்பில் வழங்கப்படுவது வெறும் ரூ.131 ஊக்கத்தொகை மட்டும் தான். அதுவும் கூட முந்தைய ஆட்சியில் ரூ.50 வழங்கப்பட்டு வந்தது. அதை கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.81 உயர்த்தியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் நெல்லுக்கு ரூ.2500 வழங்குவதாக சத்தியம் செய்த திமுக ஐந்தாண்டுகளில் வெறும் ரூ.81 உயர்த்தி வழங்கியிருப்பது சாதனையா, வேதனையா?
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததாலும், மழையில் நனைந்து நெல் வீணாணதாலும் உழவர்கள் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். அதைத் துடைக்க திமுக அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. மாறாக கடந்த கால புள்ளிவிவரங்களை காட்டி திமுக அரசு புளங்காகிதம் அடைந்து கொள்கிறது. இந்த வெற்று புள்ளிவிவரங்களால் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு எந்த பயனும் இல்லை.
எனவே, ஒன்றுக்கும் உதவாத கணக்குகளைக் கூறுவதை விடுத்து காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலை தீவிரப்படுத்தி, உழவர்களின் கண்ணீரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 20 நாள்களுக்கும் மேலாக கண்ணீரில் மிதக்கும் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் விடும் சாபம் திமுக ஆட்சியாளர்களை சும்மா விடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.
- கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.
எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி 2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு!
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.
கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.
கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.
நேற்று நான் பைசன் காளமாடனில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
- புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
- புலிகாட், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் கனமழை பெய்யும்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னமானது நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி மாலை அல்லது இரவில் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
மேலும் முதலில் மணிக்கு 10 கி.மீ.வேகத்தில் நகர்ந்து வந்த புயல் சின்னத்தின் வேகம் தற்போது குறைந்து மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கரை நோக்கி நகர்கிறது.
இதனிடையே மோன்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் மழைக்கான அறிகுறி இல்லாத நிலையில், திருவள்ளூரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சில மணி நேரமாக திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, புலிகாட், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சென்னையில் நிச்சயமாக மழை பெய்யும். ஆனால் சென்னை நகரம் குறைந்தபட்சம் 100 மிமீ கனமழையைப் பெறுமா என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கான விடைக்காக நாம் இன்று மாலை அல்லது இரவு வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- குழந்தையை மீட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
- தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் - சந்தான லட்சுமி. இவர்களுக்கு 1½ வயதில் தனுஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான அலமேலுவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க சந்தான லட்சுமி குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது குழந்தை தனுஷ் அலமேலு வீட்டில் குளியல் அறையில் இருந்த 1½ அடி தண்ணீர் வாளியில் தவறி விழுந்துள்ளது.
இதனால் பதறிப் போன சந்தான லட்சுமி குழந்தையை மீட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. இது பற்றி தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






