என் மலர்tooltip icon

    சென்னை

    • மதுபானக் கடையின் இருபுறமும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
    • பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி பள்ளிப்பாளையம் நகராட்சி பைபாஸ் சாலையில் எப்.எல்.2 மதுபானக் கடை நடைபெற்று வருகிறது. இந்த மதுபானக் கடையின் இருபுறமும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    அதே போல், மருத்துவமனைகள் மற்றும் வங்கிகளும் செயல்பட்டு வருவதன் காரணமாக, எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வரும் இந்த இடத்தில் மதுபானக் கடை இருப்பதால், பள்ளி மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளிப்பாளையம் நகராட்சி, பை பாஸ் சாலையில், பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் இடையூறாக இருந்து வரும் எப்.எல்.2 மதுபானக்கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி இந்த மதுபானக்கடையை உடனடியாக அகற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில், பள்ளிப்பாளையம் பஸ் நிலையம் அருகில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 55% ஆக இருந்த அகவிலைப்படியை 58% ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.
    • அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 55% ஆக இருந்த அகவிலைப்படியை 58% ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.

    ஜூலை 1 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

    • தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை முதல் 16-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    17-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    18-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    19-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 17-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • இதுவரை மொத்தமாக 38 நாட்களில் 81 சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது நிர்வாகிகளிடம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானவர்களை இடம்பெற செய்ய உதவ வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    இதுவரை மொத்தமாக 38 நாட்களில் 81 சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.

    • பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.
    • மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    • மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல்.
    • தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாக தகவல்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, SIR-ஐ கண்டித்து வரும் நவம்பர் 16ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், ஆர்ப்பாட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • மகளிரிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் ஜனவரி மாதம் விரிவுபடுத்தப்படும்.
    • இந்தத் திட்டத்தை இந்தியா மொத்தமும் பின்பற்றத்தக்க வகையில் செயல்படுத்திக் காட்டுவோம்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் 'மகளிர் நலமே சமூக நலம்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கான புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, இதய நோய்கள் பரிசோதனை செய்யத் தொடங்கி வைத்துள்ள, மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவைத் திட்டத்தைப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    காஞ்சியில் தொடங்கும் இந்தத் திட்டம், மகளிரிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் ஜனவரி மாதம் விரிவுபடுத்தப்படும்.

    மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் முதலியவற்றைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து நம் பெண்களின் நலனைக் காக்கும் இந்தத் திட்டத்தை இந்தியா மொத்தமும் பின்பற்றத்தக்க வகையில் செயல்படுத்திக் காட்டுவோம்! என்று கூறியுள்ளார். 



    • தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தொடங்கியது.
    • மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஜனவரியில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

    சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தொடங்கியது.

    மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஜனவரியில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

    மேலும் வருகிற 2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.
    • தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.

    கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

    எனவே, விடியா திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
    • ஞாயிறு அன்று 7 ஆயிரத்து 563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 பஸ்களும், நாளை மறுநாள் 55 பஸ்களும், இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுதவிர, மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 பஸ்களும், சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களில் பயணிக்க நாளை 7ஆயிரத்து 227 பயணிகளும், நாளை மறுநாள் 2 ஆயிரத்து 975 பயணிகளும், ஞாயிறு அன்று 7 ஆயிரத்து 563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு TIDEL Park அமைக்க உள்ளது.
    • மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக்கூட பல்வேறு வகைகளில் சிரமப்பட வேண்டிய அவலநிலை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இச்செயல், வாக்களித்த மக்களுக்கு திமுக செய்து வரும் மாபெரும் துரோகமாகும்.

    கடந்த 54 மாத காலமாக, வெற்று விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வரும் விடியா திமுக ஆட்சியில், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

    அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி, இராசிபுரம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு TIDEL Park அமைக்க உள்ளது. இங்கு TIDEL Park அமைக்கப்பட்டால் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த வேதனையுடன் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்நிலையில், மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில், இராசிபுரம் பகுதியில் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TIDEL Park அமைக்க இருக்கும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் 17.11.2025 திங்கட்கிழமை காலை 10 மணியளவில், ராசிபுரம் ஆண்டகலூர் கேட், திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர். கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பா, தாளடி பருவத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்ய ஏக்கருக்கு 564 ரூபாயை உழவர்கள் பிரீமியமாக செலுத்த வேண்டும்.
    • பெரும்பாலான பகுதிகளில் உழவர்களால் பயிர்க்காப்பீடு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு பெறுவதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பயிர்களில் இதுவரை வெறும் 48% மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை என்றால், சம்பா பயிர்களை காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 69,571 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல லட்சம் ஏக்கரில் சம்பா நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நடவு செய்யப்பட்ட பயிர்களில் 4 லட்சத்து 16,241 ஏக்கர் பயிர்கள் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன. நடைமுறை சிக்கல்கள் காரணமாக மீதமுள்ள பயிர்களுக்கு இன்னும் காப்பீடு பெற முடியவில்லை.

    சம்பா, தாளடி பருவத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்ய ஏக்கருக்கு 564 ரூபாயை உழவர்கள் பிரீமியமாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் சேதமடையும் பட்சத்தில், விதிகளுக்கு உட்பட்டு ஏக்கருக்கு ரூ.37,600 வரை காப்பீடாக வழங்கப்படும். நவம்பர் 15-ஆம் தேதிக்குள் காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பாதி அளவு கூட காப்பீடு செய்யப்படவில்லை.

    கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருப்பதால், அவர்களிடமிருந்து சாகுபடி சான்றிதழ் பெற முடியாத நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் தான் பெரும்பாலான பகுதிகளில் உழவர்களால் பயிர்க்காப்பீடு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    உழவர்களால் பயிர்க்காப்பீடு செய்ய முடியாததற்கு அவர்கள் காரணமல்ல.... மாறாக, அரசு எந்திரம் தான் காரணம். எனவே, உழவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 15-ஆம் தேதியிலிருந்து மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×