என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
சட்டசபையின் 2-வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியது: இரங்கல் தீர்மானம் வாசிப்பு
- ஆளுநர், அரசின் உரையை வாசிக்காமல் ஏதோ கூறிவிட்டு, சபையில் இருந்து வெளியேறினார்.
- சட்டசபையில் மறைந்த எம்.எல்.ஏ. உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. அதில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று தலைமை செயலகம் வந்தார்.
சட்டசபை வளாகத்தில் அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் புத்தகம் கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்று, பேரவைக்கு அழைத்து வந்தனர்.
முதலில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர், அரசின் உரையை படிக்காமல் வேறு சில கருத்துகளை கூறினார். அப்போது சபாநாயகர் அப்பாவு எழுந்து நின்று, இந்த சபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே பேச அனுமதி இருக்கிறது. மற்ற யாருக்கும் அனுமதி கிடையாது. எனவே அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர், அரசின் உரையை வாசிக்க வேண்டும் என்றார்.
ஆளுநர் ரவி, மீண்டும் ஏதோ பேசினார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, இந்த சபையில் முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டும். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும், இதுதான் இந்த சபையின் மரபு. இது ஏற்கனவே ஆளுநருக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து ஆளுநர், அரசின் உரையை வாசிக்காமல் ஏதோ கூறிவிட்டு, சபையில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். இதையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டசபையில் மறைந்த எம்.எல்.ஏ. உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஏ.வி.எம்.சரவணன், எம்.எல்.ஏ. கே.பொன்னுசாமி, முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரான அருணாச்சலம் வெள்ளையன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.








