என் மலர்
சென்னை
- இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டனர்.
- சிகிச்சை முடிந்ததும் ஆசிரியர் மோகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
சென்னை:
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மதுரவாயலை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மோகன் மாணவியை தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி வகுப்பறையில் தனியாக இருந்த போது ஆசிரியர் மோகன் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இது பற்றி மாணவி பயந்து போய் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால் அறிவியல் ஆசிரியர் மோகன் மாணவியிடம் காம லீலையில் ஈடுபட்டது பற்றி பள்ளியில் பணியாற்றி வரும் வேறு ஒரு ஆசிரியருக்கு தெரிய வந்தது. அவர் இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் பள்ளிக்கல்வித்துறையில் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கும் தங்கள் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவல் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார் விருகம் பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆசிரியர் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது ஆசிரியர் மோகன் திடீரென மறைத்து வைத்திருந்த 25 தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கினார். இதில் மயக்கம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு ஆசிரியர் மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்ததும் ஆசிரியர் மோகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வி துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் படித்து வந்த சக மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் கூட தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உள்துறை செயலாளர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விசா காலம் முடிந்த பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது.
- தமிழ்நாட்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 60 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை இன்று வெளியிட்டார்.
மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைக் கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு குறைக் கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை 2024 -தனை அறிமுகப்படுத்தியது.
இக்கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்திட வழிவகுத்துள்ள நிலையில், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டம் என்ற திட்டத்தின் கீழ் பயனடையும் நிறுவனங்களை மாநிலத்திற்கு ஈர்த்திடும் வகையில், ஒன்றிய அரசுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசும் ஊக்கத்தொகை வழங்கிட இந்த திட்டம் வழிவகை செய்யும். இதன்மூலம், தமிழ்நாட்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 60 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. தலைவா்களை தனித்தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து கலந்தாலோசனை நடத்துகிறாா்.
- பா.ஜ.க. முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ந்தேதி வருகை தரவுள்ளாா். சென்னை வரும் பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பா.ஜ.க. மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
மேலும், பா.ஜ.க. தலைவா்களை தனித்தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து கலந்தாலோசனை நடத்துகிறாா்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவா், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளாா்.
அவரது வருகையையொட்டி பா.ஜ.க. முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
டெல்லி சென்றுள்ள தமிழக பா.ஜ.க. தலைவா் நயினாா் நாகேந்திரன், பிரதமா் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளாா்.
அவா்களது ஆலோசனை படி பா.ஜ.க.வினரையும், கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்வது தொடா்பாக ஜெ.பி.நட்டா வருகையின்போது ஆலோசனை நடத்தப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஊக்கத்தொகை கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் இருந்ததில்லை.
- ரூ.1.2 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
* நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் மின்னணு உதிரி பாகங்கள் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
* மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு இணையாக இந்த திட்டத்தில் grant வழங்கப்பட்டுள்ளது.
* ஊக்கத்தொகை கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் இருந்ததில்லை.
* தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கையால்தான் முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகள் செய்கின்றனர்.
* ரூ.1.2 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
* தமிழ்நாட்டில் ரூ.30000 கோடி முதலீடுகளை ஈர்த்து 60000 நபர்களுக்கு வேலை வழங்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எத்தகைய கூட்டணி வந்தாலும் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
- நெருக்கடிகள் பலவற்றை சந்தித்தே வளர்ந்த இயக்கம் தி.மு.க.
சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலுவின் இல்ல திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு ஊர்ந்து கொண்டிருந்ததாக கூறியதால் அ.தி.மு.க.வினருக்கு கோபம் வருகிறது.
* ஊர்ந்து என்று கூறியது பிடிக்கவில்லை என்றால் தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளலாம் என்றேன்.
* தவழ்ந்து என நான் கூறவில்லை, எடப்பாடி பழனிசாமியே தன்னை அப்படிதான் வெளிப்படுத்துகிறார்.
* மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே எடுத்துக்காட்டான ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம்.
* 2026-ம் ஆண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம்.
* வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
* நம்மை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் எத்தகைய கூட்டணி வந்தாலும் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
* நெருக்கடிகள் பலவற்றை சந்தித்தே வளர்ந்த இயக்கம் தி.மு.க.
* எமர்ஜென்சியை பார்த்து பயப்படாமல் தீரத்துடன் எதிர்த்தவர்கள் நாம் என்றார்.
- உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்!
- எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்…
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.
மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.
நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.
அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்…
நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்…அதுதான் நீங்க…
இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும்…
உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ்…
அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன்…
ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்…
எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்…
நீங்கதான் எனக்கு precious…
இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல…
உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்…
உங்க அன்ப நான் மதிக்கறேன்… இனி எப்பவும் மதிப்பேன்… அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது…
நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க…தப்பே இல்ல…
நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்…
அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்...
இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்… செய்வீங்க… செய்றீங்க…
ஓகே?...
Thank u friends….
Love you all…
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது.
அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது. இதனை தொடர்ந்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,840-க்கும் ஒரு கிராம் ரூ.8,980-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.8,980-க்கும், ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.
3-வது நாளாக இன்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
25-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-04-2025- ஒரு கிராம் ரூ.111
28-04-2025- ஒரு கிராம் ரூ.111
27-04-2025- ஒரு கிராம் ரூ.112
26-04-2025- ஒரு கிராம் ரூ.112
25-04-2025- ஒரு கிராம் ரூ.111
- காலை முதலே சென்னையில் உள்ள அனைத்து நகைகக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.
- நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வருகிற 3-வது திதியை 'அட்சய திருதியை' என்று குறிப்பிடுவார்கள். அந்த நாளில் சிறிய அளிவிலாவது தங்கம் உள்பட மங்கல பொருட்களை வாங்குவது வழக்கம். தங்க ஆபரணங்களை வாங்குவது நன்மை தரும் என்றும் அதன் மூலம் மேலும், மேலும் தங்கம் அபிவிருத்தியாகும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்த நிலையில், இன்று அட்சய திருதியை ஆகும். இதனால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் காலை முதலே சென்னையில் உள்ள அனைத்து நகைகக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலையில் மாற்றமில்லை. ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.8,980-க்கும் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.
காலை 10.30 மணிக்கு தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதால் காலையில் நகைக்கடைகளுக்கு செல்வோர் பழைய விலையில் தங்கம் வாங்கலாம் என நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
- விடுதிக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது.
- பெண்கள் படிக்கும் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே பணியில் இருத்தல் வேண்டும்.
சென்னை:
அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சூழலை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சில நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள் வருமாறு:-
* பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்த 6 மாத காலத்துக்குள் முறையான பயிற்சி அளித்தலை உறுதிசெய்திட வேண்டும். அதன் பின்னர் 6 மாதத்துக்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.
* மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். அதேபோல் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்வி சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துசெல்லவேண்டும். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண-சாரணியர் இயக்க முகாம்களில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
* விடுதிக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது. விடுதி பராமரிப்பு பணிகளுக்காக அனுமதிக்கப்படும் பணியாளர்கள், பெண்விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.
* பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ, பாலியல் குற்றங்கள் பற்றி தெரியவந்தாலோ, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக போலீசாருக்கு புகார் அளிக்கவேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவர் மனசு புகார் பெட்டி அனைத்து பள்ளிகளிலும் நிறுவப்பட்டு, அது தினசரி பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புகார் அளிக்கும் குழந்தைகளின் விவரங்களை வெளியிடக்கூடாது என்பதால், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடத்தில் இந்த பெட்டியை வைக்கவேண்டும்.
* கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் அமைத்திட வேண்டும்.
* ஆண் ஆசிரியர்கள், பணியாளர்கள் அறையில் குறிப்பாக பெண் குழந்தைகள் செல்வதை அனுமதிக்கக்கூடாது. இதனை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் பள்ளி நேரமில்லாமல் நடத்தப்படும்போது, குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதால், கண்காணிப்பதை கட்டாயமாக செயல்படுத்த ஒரு பெண் பணியாளர்கள் பொறுப்பாக மாற்றுப் பணியை செய்யவேண்டும்.
* பெண்கள் படிக்கும் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே பணியில் இருத்தல் வேண்டும். இருபாலர் பள்ளிகளில் குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருக்கவேண்டும்.
* பாலியல் குற்றச்சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதால் மேற்கூறியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
- கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
- சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை:
சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
அரசு பணத்தை தி.மு.க. அமைச்சர்கள் சூறையாடுகிறார்கள் என கூறும் பா.ஜ.க.வின் தமிழிசை சவுந்திரராஜனுக்கு வேறு வேலை கிடையாது. அதனால் தான் சொல்லிக் கொண்டு உள்ளார்.
நாங்கள் ஏற்கனவே நீண்ட நாட்களுக்கு முன் சட்டசபை தேர்தல் பணியை தீவிரப்படுத்தி பிரசாரத்தை தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.
- தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டிற்கு 7.35 மணிக்கு சென்றடையும்.
- செங்கல்பட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை இரவு 10.50 மணிக்கு வந்தடையும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வந்தன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 19ஆம் தேதி 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இது தொடர்பாக பயணிகளிடம் தெற்கு ரெயில்வே கருத்து கேட்டது. பெரும்பாலான பயணிகள் ஏ.சி. ரெயில் சேவையை வரவேற்றனர். அதேவேளையில் இயக்கப்படும் நேரம் தொடர்பாக தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.
இதனடிப்படையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2ஆம் தேதியில் இருந்து கீழ்கண்டவாறு ரெயில் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
(49001) தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டிற்கு 7.35 மணிக்கு சென்றடையும்.
(49002) செங்கல்பட்டில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை 9.25 மணிக்கு வந்தடையும்.
(49003) ரெயில் சென்னை கடற்கரையில் இருநது 9.41 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை காலை 10.36 மணிக்கு சென்றடையும்.
(49004) தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு 13.55 மணிக்கு வந்தடையும்.
(49005) சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு மாலை 4 மணிக்கு வந்தடையும்.
(49006) செங்கல்பட்டில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரையை மாலை 6 மணிக்கு வந்தடையும்.
(49007) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 6.18 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டை இரவு 7.50 மணிக்கு வந்தடையும்.
(49008) செங்கல்பட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை இரவு 10.50 மணிக்கு வந்தடையும்.






