என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்று அட்சய திருதியை... காலையில் திறக்கப்பட்ட நகைக்கடைகள்... தங்கம் விலை நிலவரம்
- காலை முதலே சென்னையில் உள்ள அனைத்து நகைகக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.
- நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வருகிற 3-வது திதியை 'அட்சய திருதியை' என்று குறிப்பிடுவார்கள். அந்த நாளில் சிறிய அளிவிலாவது தங்கம் உள்பட மங்கல பொருட்களை வாங்குவது வழக்கம். தங்க ஆபரணங்களை வாங்குவது நன்மை தரும் என்றும் அதன் மூலம் மேலும், மேலும் தங்கம் அபிவிருத்தியாகும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்த நிலையில், இன்று அட்சய திருதியை ஆகும். இதனால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் காலை முதலே சென்னையில் உள்ள அனைத்து நகைகக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலையில் மாற்றமில்லை. ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.8,980-க்கும் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.
காலை 10.30 மணிக்கு தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதால் காலையில் நகைக்கடைகளுக்கு செல்வோர் பழைய விலையில் தங்கம் வாங்கலாம் என நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.






