என் மலர்tooltip icon

    சென்னை

    • நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
    • பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழலில், இந்தியப் படைகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் ஆகியோர் கையில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பேரணி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
    • பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கியது.

    இந்த பேரணி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே வரை நடைபெறுகிறது.

    இந்தப் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி பங்கேற்றுள்ளனர்.

    பேரணி செல்லும் சாலையில் மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

    தமிழகத்தில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில்கள், வண்ண கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படவுள்ளன.

    அவர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்காக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

    இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 495 தலைப்புகளில் மொத்தம் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

    அவற்றில் 2.72 கோடி பாடப்புத்தகங்கள் மாணவா்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும்.

    எஞ்சியுள்ள 1.47 கோடி பாடநூல்கள் விற்பனைக்காக அச்சிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 64 லட்சம் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.

    அனைத்து மாவட்ட கிடங்குகளிலும் உள்ள பாடப் புத்தகங்கள் ஒரு வாரத்துக்குள் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

    இதையடுத்து கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது முதல் நாளே மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

    • இந்த மாதம் முதல் ஜனவரி 4-ம் வாரம் வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் இயங்கும்.

    சென்னை:

    சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது 1256 முகாம்கள் மூலம் மக்களைத்தேடி உயர் மருத்துவ சேவைகள் ரூ.9.42 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது

    அதன்படி மாதிரி மருத்துவ முகாம் இன்று நடந்தது. அதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த மாதம் முதல் ஜனவரி 4-ம் வாரம் வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார். அதன்பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் இயங்கும்.

    இந்த மாதம் முதல் ஜனவரி 2026 வரை திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் ஈ.சி.ஜி. இதய சுருள் அறிக்கை, எக்கோகார்டியோகிராம், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறிதல் சோதனைகள், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனைகள், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.

    தமிழகத்தில் இன்று முதல் 12-ந்தேதி வரை ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13 மற்றும் 14-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதனிடையே, இன்று முதல் 13-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூ.8,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடி வரையிலான மதிப்புடைய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்கூட்டியே கூடுதலான மருந்துகளை தங்களுக்கு அனுப்புமாறு ஆா்டா் கொடுத்துள்ளன.

    சென்னை:

    உச்சக்கட்ட போா் சூழலைத் தொடா்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. அதை ஏற்று தமிழக மருந்து உற்பத்தியாளா் சங்கத்தினா் ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்தினா்.

    இதுகுறித்து தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநில மருந்து உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் டாக்டா் ஜெயசீலன் கூறியதாவது:-

    இந்தியாவின் மருந்து சந்தை மிகப்பெரியது. உலக அளவில் உற்பத்தியாகும் மருந்துகளில் 60 சதவீத பங்களிப்பு இந்தியாவுடையது என்பதில் இருந்தே அதை உணரலாம். உள்நாட்டு பயன்பாட்டுக்கு மட்டுமன்றி அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, நெதா்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    குறிப்பாக, 'ஜெனரிக்' எனப்படும் மூலப்பெயரிலான மருந்துகள் மற்றும் அதற்கான மூலப்பொருள்கள் ஏற்றுமதியில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது. ஆண்டுதோறும் ரூ. 2.40 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் உலக நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன.

    தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூ.8,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடி வரையிலான மதிப்புடைய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உயிா் காக்கும் சில முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. அதன் வா்த்தக மதிப்பு ரூ.100 கோடி வரை உள்ளது.

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியும், தேச நலனைக் கருத்தில் கொண்டும் பாகிஸ்தானுக்கு மருந்து மற்றும் மூலப்பொருள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளோம். இதன் காரணமாக ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படலாம். அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்நிலை தொடரும். அதேவேளையில் பிற நாடுகளுக்கான ஏற்றுமதியில் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்கூட்டியே கூடுதலான மருந்துகளை தங்களுக்கு அனுப்புமாறு ஆா்டா் கொடுத்துள்ளன.

    தமிழகத்துக்கு தேவையான சில மூலப்பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, போா்ச் சூழல் அதிகரித்தாலும் உள்நாட்டு மருந்துகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று நடைபெற உள்ள பேரணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் இன்று நடைபெற உள்ள பேரணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து மாற்றங்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி கொள்ளலாம். பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அண்ணாசாலை, தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.

    * அண்ணா சிலையிலிருந்து வரும் மாநகரப் பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு - ஜிபி சாலை - டவர் கிளாக் - ஜிஆர்எச் பாயிண்ட் -ராயப்பேட்டை நெடுஞ்சாலை - லாயிட்ஸ் சாலை - ஜம்புலிங்கம் தெரு - ஆர்.கே.சாலை - வி.எம்.தெரு, மந்தைவெளி - மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷை அடையலாம்.

    * கிரீன்வேஸ் பாயின்ட்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை, டிடிகே சாலை, அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். மேலும், வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

    • வெள்ளி விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்ப்பதற்ற சூழல் நிலவுவதன் காரணமாக, தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    07-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600

    06-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-05-2025- ஒரு கிராம் ரூ.110

    08-05-2025- ஒரு கிராம் ரூ.110

    07-05-2025- ஒரு கிராம் ரூ.111

    06-05-2025- ஒரு கிராம் ரூ.111

    05-05-2025- ஒரு கிராம் ரூ.108

    • இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளது.
    • தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.

    சென்னை:

    இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளது.

    இந்த பேரணி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

    தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.

    இந்த பேரணி இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது.

    • போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
    • புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

    புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார்.

    அதன்படி, புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், புதிய போப்-ஆக தேர்வான 14ம் லியோவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ரோமன் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு புனித போப் 14ம் லியோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அமைதி மற்றும் ஒற்றுமை பற்றிய அவரது செய்தி உலகம் முழுவதும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், போர் பதற்றம் நிலவுவதால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ், வி.ஆர். மால், ஸ்பென்சர் பிளாசா, விஜயா மால் உள்ளிட்ட இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்ற சூழல் எதிரொலியால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாட அரசு அறிவித்துள்ளது.
    • புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    15ம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாட அரசு அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,842 புதிய மினி பேருந்துகளை இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி, புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    ×