என் மலர்
சென்னை
- ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர். இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம்.
அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது.
108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சினிமா, அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.
- அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.
சென்னை:
நடிகரும், பா.ஜ.க. உறுப்பினருமான சரத்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
சினிமா, அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.
அன்றாடம் நீங்காத நினைவுகளில் நிறைந்திருக்கும், அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை அவர்தம் பிறந்தநாளில் நினைவுகூர்ந்து மகிழ்வோம் என்று கூறியுள்ளார்.
- அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
- தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று மாணவிகள் காணொளியில் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா?
ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில், தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகிவிடாதா? அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? மேலும், தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
- விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ் பணியிடங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழக அரசு பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள்:-
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் (Group I, II, IV, காவல்துறை, ஆசிரியர், கிளார்க், முதலியன) மொத்த பணியிடங்களில் 3 சதவீத இடங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசிய / மாநில / பல்கலைக்கழக / பள்ளி மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ்கள் கொண்டவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் போது விளையாட்டு சான்றிதழின் தரம், அளவு, பெற்ற இடம் ஆகியவை மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தேர்வு அறிவிப்பு (Recruitment Notification) வெளியிடும் போது, அதில் "Sports Quota / 3% Reservation for Sports Persons" என்று குறிப்பிடப்படும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் "Sports Quota" என தேர்வு செய்து சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
- கேப்டன் விஜயகாந்த் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன்.
சென்னை:
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர், மக்கள் மனங்களை கவர்ந்த அரசியல்வாதியும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.
தமிழக அரசியலில் எப்போதும் தனித்துவமான குரலாகவும், சமூகநீதிக்காக எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டவராகவும் அவர் வாழ்ந்தார். திரை உலகில் அவர் சாதித்த பெருமை, அரசியல் உலகிலும் மக்கள் நலனுக்காக அவர் எடுத்துக்கொண்ட துணிச்சலான நிலைப்பாடுகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.
அவரது மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
இந்நாளில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன். அவரது நினைவுகள் எப்போதும் நம் மனங்களில் நிலைத்து நிற்கும் என்றார்.
- திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன்.
- ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தேமுதிக நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று.
திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை.
கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
- அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கும் வகையில் பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் வகையில் பாடத்திட்டம் தொடக்கம்.
சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதழியல் நிறுவனத்தில் 2025-2026-ம் கல்வியாண்டு முதல் இதழியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கும் வகையில் பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் வகையில் பாடத்திட்டமும், இதழியல் கல்வி நிறுவனத்தில் இதழியலுடன் இணைந்த டிஜிட்டல் மீடியா பயிற்சியும் வழங்குகிறது.
- அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல...
- பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.
உலகின் முதல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்றும் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்தான் எனவும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,
பா.ஜ.க.வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.
நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
- விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
- வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9.305-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 74,440-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 131 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 31ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520
23-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520
22-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,720
21-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,840
20-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-08-2025- ஒரு கிராம் ரூ.130
23-08-2025- ஒரு கிராம் ரூ.130
21-08-2025- ஒரு கிராம் ரூ.128
21-08-2025- ஒரு கிராம் ரூ.126
20-08-2025- ஒரு கிராம் ரூ.125
- ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.
- இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது.
சென்னை:
முகமது நபியின் பிறந்த நாளை மிலாடி நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கொண்டுள்ளனர். மேலும், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.
இந்த நிலையில், மிலாடி நபி விழா வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது. எனவே மிலாடி நபி விழா (இறை தூதர் முகமது நபி பிறந்தநாள்) வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- ஆணவ படுகொலைகளுக்கு பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது.
- அந்த கோட்பாட்டை நாம் அழித்தொழிக்க வேண்டும்.
மயிலாப்பூர்:
சென்னை மயிலாப்பூரில் ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் கோரி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்து கடவுள் ராமன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கருத்தரங்கில் வன்னி அரசு பேசியதாவது:-
தவம் செய்த சம்பூகன் தாழ்ந்த சாதி என்பதால் ராமன் அவரை கொன்று விட்டார். பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமன்.
ஆணவ படுகொலைகளுக்கு பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது. அந்த கோட்பாடு தான் சனாதன கோட்பாடு. அந்த கோட்பாடு வர்ணாசன கோட்பாடு. அந்த கோட்பாட்டை நாம் அழித்தொழிக்க வேண்டும். அதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார்கள்... இந்து மதம் அழிக்கப்பட வேண்டிய மதம். இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. இந்து மதத்தில் எப்போதுமே சமூக நீதி இல்லை. ஆகவே இந்து மதத்திற்கு எதிராக மதம் மாறுகிறார்.
ராமன் பார்ப்பனர் அல்ல... ஆனால் பார்ப்பனர்களுக்காக இந்த படுகொலை செய்கிறார். ராமதாஸ் பார்ப்பனர் அல்ல... ஆனால் பார்ப்பனர்களுடைய இந்த கருத்தியலுக்காக படுகொலை செய்கிறார். படுகொலை செய்ய தூண்டுகிறார். இரண்டும் ஒன்று தான். ராமனும் ஒன்று தான்.. ராமதாசும் ஒன்றுதான். ராமதாசுடன் இதை நான் முடிக்கவில்லை.
இதன் தொடர்ச்சி இன்றைக்கு நிறைய இருப்பதால் இந்த கருத்தியலை உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றார்.
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும்.
- விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான 'கேட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன.
இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் பெரும் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, 'கேட் 2026' நுழைவுத்தேர்வு என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட 30 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்கள் தேர்வை தேர்வு செய்து எழுதலாம்.
இந்த தேர்வை என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுத முடியும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.






