என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சார் என்றாலே அலர்ஜி: வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் தி.மு.க. அமைச்சர்கள் அச்சம்- நயினார் நாகேந்திரன்
- பீகார் மாநிலத்தில் 60 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் வாக்குகள் அதிகமாக உள்ளது.
கோவை:
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. பருவமழை பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு, அந்தந்த மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.
தி.மு.க.வினருக்கு சார் என்றாலே ஒரு அலர்ஜி. தற்போது வந்துள்ள சாரால் அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வினர் நடுக்கத்தில் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்தே வாக்காளர் பட்டியலில் விடுப்பு, சேர்ப்பு, இறந்தவர்கள் பெயரை நீக்குவது நடந்து தான் வருகிறது. பீகார் மாநிலத்தில் 60 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 28 லட்சம் பேர் இறந்தவர்கள். மற்றவர்கள் குடி பெயர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் வாக்குகள் அதிகமாக உள்ளது. அதிக அளவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் பார்த்து அவர்கள் பயத்தில் உள்ளனர்.
தி.மு.க அமைச்சர்கள் தாங்கள் பொய்யாக சேர்த்த வாக்காளர்களை பட்டியலில் நீக்கி விடுவார்களோ, அதனால் தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற பயத்தில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் வாக்காளர் பட்டியல் குறித்து பொய்யான தகவலை கூறி வருகிறார்கள்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவது தமிழக அரசு அதிகாரிகள் தான். பிறகு ஏன் அவர்கள் பயப்பட வேண்டும்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவி பணத்தை சிலர் திருப்பி அனுப்பி உள்ளதாக கேட்கிறீர்கள். சிலர் பணம் வாங்குவார்கள். சிலர் அதை விருப்பப்பட மாட்டார்கள். எனவே விருப்பமில்லாதவர்கள் அதை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குமார், ஏ.பி.முருகானந்தம் மற்றும் பலர் இருந்தனர்.






