என் மலர்
சென்னை
- திராவிட மாடல் அரசு நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
- மக்களை முட்டாள்களாக்க நினைப்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் அரசை நம்பி அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்ட போதே, இது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதையும், இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் காரண, காரியங்களுடன் விளக்கியிருந்தேன்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டிருப்பதன் மூலம் அப்போது நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது.
ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இப்போது புதிய புதிய திட்டத்தை செயல்படுத்துவதாக திராவிட மாடல் அரசு நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். மக்களை முட்டாள்களாக்க நினைப்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 11.50 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன.
- மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் மட்டும் சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், "உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் இதுவரை 11.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 11.50 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன.
மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் மட்டும் சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும்" என்றார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், " அரசுத்துறை சேவைகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்திட, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் கீழ், 4 ஆயிரத்துக்கும் அதிகமான முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அவை குறித்து அரசு உயர் அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்புடனான ஆய்வுக்கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம்.
ஒவ்வொரு மனுவுக்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் மகிழும் வண்ணம் அவற்றிற்கு தீர்வை ஏற்படுத்த அறிவுறுத்தினோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
- வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.
- இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும்.
உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சிகளின் மாநில தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய-மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.
இந்த முயற்சியில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.
1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பானது, ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் சிறந்ததொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது என்றும், இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதாகவும், வலுவான ஒன்றியமும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டிருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து, ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
1967-ஆம் ஆண்டில், அன்புக்குரிய தலைவரும், அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான டாக்டர் சி.என். அண்ணாதுரை அவர்கள், "இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒன்றியத்தைப் பொறுப்பேற்கச் செய்யத் தேவையான அனைத்து அதிகாரங்களும் ஒன்றியத்திடம் இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானியர்களிடமிருந்தோ அல்லது சீனர்களிடமிருந்தோ இந்தியாவைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு இங்கு ஒரு சுகாதாரத் துறையை வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
அது எந்த வகையில் இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்துகிறது? ஒன்றிய அரசிடம் கல்வித் துறை இருக்க வேண்டுமா? அங்குள்ள இராணுவ வீரர்களின் போர்த் திறனை அது எந்த வகையில் மேம்படுத்துகிறது?.
அதேபோன்று, தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், "மாநிலங்களுக்கு சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற கொள்கையைத் தொடர்ந்து ஆதரித்தார் என்றும், 1969-ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராக இருந்தபோது, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் முதல் குழுவை அமைத்தார்.
1971-ஆம் ஆண்டு இந்தக் குழு அளித்த அறிக்கை, இந்தியாவில் கூட்டாட்சி குறித்த விவாதங்களை வடிவமைப்பதில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
1974-ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றம், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, உண்மையான கூட்டாட்சி அமைப்புக்கு வழிவகுக்கும் வகையில் அரசமைப்பைத் திருத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது.
பின்னர், ஒன்றிய அரசு சர்க்காரியா கமிஷன் (1983 – 1988) மற்றும் புஞ்சி கமிஷன் (2007 – 2010) ஆகியவற்றை அமைத்தது என்றும், இவை இரண்டும் அதிகாரப் பகிர்வு குறித்து விரிவான முறையில் ஆராய்ந்தன என்றாலும், அவற்றின் பரிந்துரைகள் உண்மையான, சமநிலையான கூட்டாட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு உதவிடவில்லை.
இதற்கிடையில், தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், யூனியன் சட்டங்கள் மற்றும் ஒன்றியத்தின் கொள்கைகள், அதிகார சமநிலையை ஒன்றிய அரசுக்குச் சாதகமாக படிப்படியாக சாய்த்துள்ளன.
ஒன்றிய அரசில் உள்ள பெரிய அமைச்சகங்கள் மாநிலங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு, நிதிக் குழு அளிக்கும் மானியங்களுக்கான நிபந்தனைகள், ஒன்றிய நிதியுதவி திட்டங்களுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள், பணி வாரியாக கட்டாய ஒப்புதல்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் மாநில முன்னுரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன அல்லது ஆணைகளை வெளியிடுகின்றன.
இன்றைக்கு நாம் ஒன்றிய-மாநில அதிகாரங்களில் உள்ள இந்த முன்னேற்றங்களை தீர்க்கமாக மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவை.
இந்த நோக்கத்தின் அடிப்படையில், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு. குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்டும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. கே.அசோக் வரதன் ஷெட்டி மற்றும் முன்னாள் திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் திரு. மு. நாகநாதன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்டும், உயர்நிலைக் குழு ஒன்றினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
இக்குழுவின் பணி செம்மையுற அமையும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிசீலிக்கப்பட்ட கருத்துக்களைப் பெறுவதற்கு ஏதுவாக, ஒரு கேள்வித்தாளை இக்குழு தயாரித்துள்ளது.
கடந்த 23-8-2025 அன்று, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கில், உயர்நிலைக் குழுவின் இணையதளத்தினை தான் தொடங்கி வைத்து, இணையவழி வினாத்தாள் படிவத்தினை வெளியிட்டேன். அதனை https://hlcusr.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
இந்த விஷயத்தில் மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கவனம் செலுத்தி, உயர்நிலைக் குழுவின் வினாத்தாளினை ஆராய்ந்து, விரிவான பதில்களை வழங்கிட வேண்டுமென்றும், அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பிரதிபலிக்கும் ஒரு ஆவணத்தை வடிவமைப்பதிலும், நமது நாட்டின் கூட்டாட்சி அடித்தளங்களை வலுப்படுத்துவதிலும் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் தீவிர பங்கேற்பு மிக முக்கியமானதாக விளங்கும்.
இந்த முயற்சி அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நிற்பதாகவும், ஒன்றாக, நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி உணர்வைப் புதுப்பித்து, எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சி கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தீ ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டில் அறிவித்திருந்தது.
- தீத்தடுப்பு முறைகளை புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும் தமிழக அரசு முடிவு.
தமிழக காவல் டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவருக்கு தீ ஆணைய தலைவர் பதவி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டில் அறிவித்திருந்தது.
தீத்தடுப்பு முறைகளை புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும், புதிய பயிற்சிகளை அளிக்கவும், புதிய தட்டங்களை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, புதிதாக தீ ஆணையம் உருவாக்கப்பட்டு அதில் சங்கர் ஜிவாலுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.
- இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனையானது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும், புதன்கிழமை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும், நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470-க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனையானது
இந்நிலையில், தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு 520 அதிகரித்த நிலையில், தற்போது மேலும் 520 உயர்ந்துள்ளது.
இதன்மூலம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.76,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறப்பு.
- இரு நூல்களை பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வருவாய் நலன்களைப் பாதுகாப்புடன், நியாயமான முடிவுகளை உறுதி செய்ய வேண்டும்.
- மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பலன் தராது.
மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் GST-ல் சீர்திருத்தம் செய்வது பயனளிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் டெல்லியில் கூடி ஆலோசித்த புகைப்படத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
GST வரி குறைப்பு சீர்திருத்தம் மக்களை சென்றடைய வேண்டும். வருவாய் நலனை பாதுகாக்க அனைத்து மாநிலங்கள், மத்திய அரசின் ஆதரவு கோரும் வரைவு GST கவுன்சிலிடம் வழங்கப்படும்.
மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பலன் தராது.
குறைப்பு விகிதங்களின் நன்மைகள் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும். வருவாய் நலன்களைப் பாதுகாப்புடன், நியாயமான முடிவுகளை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம்.
- சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. ஆக லட்சுமி, சிலை திருட்டு தடுப்புப்பிரிவு ஐ.ஜி. ஆக அனிஷா ஹுசைன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை மாநகர சிபிசிஐடி கண்காணிப்பாளராக ஜவஹர், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* கோவை காவல் தலைமையக துணை ஆணையராக திவ்யா, பதவி உயர்வு பெற்ற சஜிதா சென்னை சிபிசிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* சிபிசிஐடி-யில் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புப்பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு அதன் எஸ்.பி.யாக சஜிதா ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார்.
- காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
சென்னை:
தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக உள்ள சங்கர் ஜிவால் வருகிற 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
இதையொட்டி இன்று மாலையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவருக்கு பணி நிறைவு விழா நடத்தப்படுகிறது. சங்கர் ஜிவாலுடன், காவல் துறை வீட்டு வசதி நிறுவன இயக்குனர் உள்ள டி.ஜி.பி. சைலேஸ் குமார் யாதவும் ஓய்வு பெறுகிறார்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விழாவில் தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சங்கர் ஜிவால், சைலேஸ் குமார் யாதவ் ஆகிய இருவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார்கள்.
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டம்-ஒழுங்கு பதவியில் டி.ஜி.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த போது தான் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் சில ஆண்டுகள் முன்னணி நிறுவனங்களில் என்ஜினீயராகவும் பணி புரிந்துள்ளார். அதன் பிறகே ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். மதுரை மற்றும் சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ள சங்கர் ஜிவால், திருச்சி கமிஷனராகவும், உளவு பிரிவில் ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார். மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார். சிறப்பான பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் ஓய்வு பெற உள்ள போலீஸ் டி.ஜி.பி சங்கர் ஜிவால் சந்தித்து பேசினார். அதேபோல் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேலும் காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமன் குறித்த தகவல்கள்...
* 1968-ம் ஆண்டு மே 8-ந்தேதி நாகப்பட்டினத்தில் பிறந்தார்.
* யு.பி.எஸ்.சி. தேர்வில் 1994-ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* இளங்கலை பொருளாதாரம்; பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் முதுகலைப் பட்டம்.
* நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்தபோது, காவல்துறையில் காகிதமில்லாப் பணியை நடைமுறைப்படுத்தினார்.
* ஏடிஜிபியாக சிபிசிஐடி மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளில் முக்கியமான வழக்குகளை வெற்றிகரமாகக் கையாண்டவர்.
* கடந்த டிசம்பர் மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார்.
* தற்போது சட்டம்-ஒழுங்குப் பிரிவுக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
* சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், படைத் தலைவர் பொறுப்பையும் கவனிக்க உள்ளார்.
- நல்லகண்ணு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 22-ந்தேதி வீட்டில் தவறி விழுந்ததால் காயம் அடைந்தார். கடந்த 24-ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை நேரில் பார்த்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
- சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
- செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும்.
சென்னை:
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
- விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனங்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவகங்கை வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.
மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி, உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.






