என் மலர்tooltip icon

    அரியலூர்

    செந்துறை அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதனங்குறிச்சி வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தளவாய் போலீசாருக்கு தகவல் கிடை த்தது. இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் அங்கு ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும்  2 டாரஸ் லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒரு லாரியை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அதற்குள் மற்றொரு லாரி, பொக்லைன் எந்திரமும் எடுத்து தப்பி ஓடி விட்டனர். 

    அதனை தொடர்ந்து பிடிபட்ட லாரி மற்றும் டிரைவரை தளவாய் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியை பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சீமான் என்பவர் ஓட்டி வந்து மணல் திருட்டில் ஈடுபட்டது  தெரியவந்தது. அதனை தொடர்ந்து தளவாய் போலீசார் வழக்குபதிவு செய்து சீமானை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் ராஜாவை தேடி வருகின்றனர்.
    அரியலூரில் மத போதகரை துன்புறுத்திய பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கோக்குடி அருகே உள்ள காணிக்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோன்குமார். மதபோதகரான இவர் அரியலூர் மீனாட்சி நகரை சேர்ந்த மார்க்ஸ்ட், திருச்சியை சேர்ந்த அந்தோணி ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் சாலையில் நடந்து சென்றவர்களிடம் கிறிஸ்தவ மதம் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

    அப்போது அங்கு வந்த கடுகூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க. ஒன்றிய தலைவர் முத்துவேல் (வயது 25), காமராஜர்நகரை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட அலுவலக செயலாளர் வைரவேல் (39), ஓ.கூத்தூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் பொன்சேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆரோன்குமார் உள்ளிட்ட 3 பேரையும் தாக்கி உள்ளனர்.

    மேலும் அவர்களை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று, அவர்களின் நெற்றியில் குங்குமம் மற்றும் விபூதியை பூசி கீழே விழுந்து வணங்கும்படி துன்புறுத்தியதோடு, அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஆரோன்குமார் அரியலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேல், வைரவேல், பொன்சேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருமானூர் அருகே போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகையிட்டனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுர் காவல் நிலையத்திற்குட்பட்ட கீழகொளத்தூர் கிராமம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்வர்மா (வயது 22), சித்திரவேல்(22), கார்த்திக் (23) மற்றும் அவர்களது நண்பர்கள் ஊரின் கடைவீதியில் நின்றிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த விஜய்(19), ராகுல்(22) ஆகியோர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். 

    இதையடுத்து ஏன் இவ்வளவு வேகமாக செல்கின்றீர்கள் என ராஜேஸ்வர்மாவும், சித்திரவேலும் கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

     இந்தநிலையில் கீழப்பழுர் போலீசார் அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜேஸ்வர்மா தரப்பினர் மீது மட்டும் வழக்குபதிந்து, அவர்கள் தரப்பினர் சிலரை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஸ்வர்மா தாப்பினர்,  அம்பேத்கர் நகர் பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமானூர் ஊராட்சி ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர் நல்லத்தம்பி, மாநில துணை செயலாளர் அன்பானந்தம், அரியலூர் தொகுதி செயலாளர் மருதவாணன், துணை செயலாளர் பாலமுருகன், உள்ளிட்டோர் கீழப்பழுர் போலீசாரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதையடுத்து அரியலூர் போலீஸ் டி.எஸ்.பி., மோகன்தாஸ் போராட்டகாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சம்பவம் நடந்த இருதரப்பினர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றனர்.
    திருமானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருமானூர்:

    திருமானூர் அருகே  உள்ள இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவரது மகன் நெல்சன் (வயது25 ). இவர் இறைச்சி கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை சாத்த மங்கலம் அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த கார், நெல்சன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக நெல்சனை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நெல்சன் இறந்தார். இது குறித்து கீழப்பழுர் போலீசார் கார் ஓட்டுனர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
    மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயகன் பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 

    பாப்பாக்குடி மரபட்டறை அருகே வந்த போது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் வழக்குபதிவு செய்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். 
    விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர்கள் தாமதமாக வந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் விளாங்குடியை சுற்றியுள்ள வி.கைகாட்டி, ரெட்டிபாளையம் அம்பாபூர், தேளூர், ஓரத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்பதால் கர்ப்பிணிகள் அதிக அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    நேற்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக பலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தனர். நீண்ட நேரமாகியும் டாக்டர்களோ, செவிலியர்களோ யாரும் வராததால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கர்ப்பிணிகள் ஓரிடத்தில் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மருத்துவர்கள் எப்போது வருவார்கள் என நோயாளிகளை பதிவு செய்யும் அலுவலரிடம் கேட்டால் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று கூறியதையடுத்து நோயாளிகள் காத்திருந்தனர்.

    10 மணிக்கு மேல் வந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் காத்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என உள்ள நிலையில் செவிலியர்கள் கூட இல்லாமல் மருத்துவமனை இயங்கி வருகிறது. இது குறித்து சிகிச்சைக்காக கர்ப்பிணியை அழைத்து வந்த உறவினர் ஒருவர் கூறியதாவது:-

    காலை 6 மணிக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது உறவினரான கர்ப்பிணியை கூட்டி வந்தேன். ஆனால் நீண்ட நேரமாகியும் டாக்டர்களோ, செவிலியர்களோ வராததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் என கூறிவிட்டு டாக்டர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவசர சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன் பேசினார்.

    இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கட்சியின் மாவட்ட பொருளாளர் அன்பழகன், துணை செயலாளர் தங்க.பிச்சைமுத்து, இலக்கிய அணி செயலாளர் சிவசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவசங்கர், பொய்யூர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செய்தனர். 
    போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ- ஜியோ தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #JactoGeo #thirumavalavan #teachersprotest
    ஜெயங்கொண்டம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜெயங்கொண்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

    ஐந்தாண்டு காலம் ஆட்சி நடத்திய மோடி கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்கு என்ன முயற்சி செய்தார். இந்தியாவில் மாற்றம், வளர்ச்சி என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மோடி கூறினார். ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லை. அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்ரேட் நிறுவனங்கள் தான் வளர்ந்தனர். ஆனால் இந்த முறை அவருடைய மாயாஜால வார்த்தைகளுக்கு யாரும் மயங்க மாட்டார்கள். 

    மதுரையில் சின்னப்பிள்ளை அம்மாள் உள்பட 5 பேருக்கு வழங்கப்பட்ட விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதை கண்டிக்கிறோம். 

    நெய்வேலியில் 34 கிராமங்களை உள்ளடக்கி பொதுமக்களை அப்புறப்படுத்தி புதிய சுரங்கம் ஏற்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் பொது மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து இதுவரை அடிப்படை வசதி செய்துதரப்பட வில்லை. இதற்காக மக்கள் போராடும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். ஜாக்டோ- ஜியோ தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #thirumavalavan #teachersprotest
    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அண்ணா சிலை, கடைவீதி, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன் வரவேற்றார். முடிவில் துணை தலைமையாசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார். 
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வெளியே வரும் என்று தினகரன் பேசினார். #dinakaran #bjp #edappadipalanisamy #parliamentelection

    அரியலூர்:

    அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வில் கருணாநிதி தங்களது குடும்ப ஆதிக்கத்தை கொண்டு வந்ததால் அதனை எதிர்த்த எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து அண்ணாவை முன்னிலைப்படுத்தி தொடங்கிய கட்சி அ.தி.மு.க.,

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் , தமிழக முதல்வராக பதவியேற்க உறுதுணையாக இருந்த சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. துரோகத்தை எதிர்த்து அன்று தொடங்கப்பட்ட இயக்கம். இன்றும் துரோகிகளை எதிர்த்து வெற்றி பெறும் இயக்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு சுயேட்சை வேட்பாளரான நான் வெற்றிபெற்றது மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதில், நமது வேட்பாளர் காமராஜை போட்டியிட வைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்த நேரத்தில், பயில்வான் தி.மு.க.வே தேர்தலை நிறுத்த பல வேலைகளை செய்தது. 10 தலைகளை கொண்ட ராவணன் போல, பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டே தி.மு.க., பயப்படுகிறது.

    தம்பிதுரை பேச்சு எல்லாம் டூபாக்கூர். முன்பு எம்.பி.,க்களுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து உத்தரவுகள் வரும். ஆனால், தற்போது, மோடியிடம் இருந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்றால் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் தீபாவளி பட்டாசு போல பட படவென வெளியே வரும். என்னை மு.க.ஸ்டாலின் 20 ரூபாய் என கூறுகிறார். அவர் ஆர்.கே. நகரில் டெப்பாசீட் வாங்காததால் நான் ஸ்டாலினை டெபாசீட் ஸ்டாலின் என அழைப்பேன். கரூரில் தி.மு.க.வினருக்கு ஆள் இல்லாததால் நம்ம செந்தில் பாலாஜியை மாவட்ட செயலாளராக ஆக்கியுள்ளனர். அவரை பற்றி தான் நமக்கு தெரியுமா? இல்லையா?.திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.பரவாயில்லை. 3 மாதத்தில் தேர்தல் வரும் போது தெரியும் . வரும் ஏப்ரல் , மே மாதத்தில் நடைபெறவுள்ள 18 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க.அமோக வெற்றி பெறும் .

    தமிழக மக்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர். எனவே கட்சியினர் மக்களை சந்தித்து 40 பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்வது எரியும் நெரிப்பில் எண்ணை ஊற்றும் செயலாகும். மாணவர்களின் நலன் கருதி ஜாக்டோஜியோ அமைப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை கொண்டு வர அரசு முன்வர வேண்டும்.


    உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி என கூறுவது கானல்நீராகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். எடப் பாடி பழனிச்சாமி சத்தமாக கூறினால் அது பொய்யாகத்தான் இருக்கும். மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் செயலில் எடப்பாடி அரசு ஈடுபட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்காக அரசு பணத்தை செலவழித்துள்ளார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்றார். #dinakaran #bjp #edappadipalanisamy #parliamentelection

    உடையார்பாளையம் அருகே பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள ஜெ.சுத்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பஸ்சுக்காக நீண்ட நேரம் மாணவ- மாணவிகள் காத்திருந்து வீட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளி விடும் நேரத்திலும், பள்ளிக்கு மாணவர்கள் வரும் நேரத்திலும் பஸ் வசதி கேட்டு ஜெ.சுத்தமல்லியில் மாணவ-மாணவிகள் நேற்று விளாங்குடி- தா.பழூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விளாங்குடி- தா.பழூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    திருமானூர் கீழபழூருக்கு வருகை தரும் டி.டி.வி. தினகரனை வரவேற்க தொண்டர்கள் திரள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் துரைமணிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #dinakaran
    திருமானூர்:

    அரியலூர் மாவட்ட செயலாளர் துரைமணிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருமானூர் ஒன்றியம் கீழபழூரில் உள்ள மொழிப் போர் தியாகி சின்னசாமி திருஉருவ சிலைக்கு நாளை 25-ந் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் வருகிறார். 

    அவரை  பாளை. அமரமூர்த்தி, திருமானூர் ஒன்றிய செயலாளர்கள் வடிவேல் முருகன் (மேற்கு) ஜெயபிரகாஷ் (கிழக்கு), மாவட்ட மாணவர் அணி செயலாளர் கதிர்ஜெகதீசன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் அய்யப்பன், திருமானூர் கூட்டுறவு சங்க இயக்குனர் மூக்கையன் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #dinakaran
    ×