search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வெளியே வரும்- தினகரன் பேச்சு
    X

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வெளியே வரும்- தினகரன் பேச்சு

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வெளியே வரும் என்று தினகரன் பேசினார். #dinakaran #bjp #edappadipalanisamy #parliamentelection

    அரியலூர்:

    அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வில் கருணாநிதி தங்களது குடும்ப ஆதிக்கத்தை கொண்டு வந்ததால் அதனை எதிர்த்த எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து அண்ணாவை முன்னிலைப்படுத்தி தொடங்கிய கட்சி அ.தி.மு.க.,

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் , தமிழக முதல்வராக பதவியேற்க உறுதுணையாக இருந்த சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. துரோகத்தை எதிர்த்து அன்று தொடங்கப்பட்ட இயக்கம். இன்றும் துரோகிகளை எதிர்த்து வெற்றி பெறும் இயக்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு சுயேட்சை வேட்பாளரான நான் வெற்றிபெற்றது மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதில், நமது வேட்பாளர் காமராஜை போட்டியிட வைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்த நேரத்தில், பயில்வான் தி.மு.க.வே தேர்தலை நிறுத்த பல வேலைகளை செய்தது. 10 தலைகளை கொண்ட ராவணன் போல, பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டே தி.மு.க., பயப்படுகிறது.

    தம்பிதுரை பேச்சு எல்லாம் டூபாக்கூர். முன்பு எம்.பி.,க்களுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து உத்தரவுகள் வரும். ஆனால், தற்போது, மோடியிடம் இருந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்றால் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் தீபாவளி பட்டாசு போல பட படவென வெளியே வரும். என்னை மு.க.ஸ்டாலின் 20 ரூபாய் என கூறுகிறார். அவர் ஆர்.கே. நகரில் டெப்பாசீட் வாங்காததால் நான் ஸ்டாலினை டெபாசீட் ஸ்டாலின் என அழைப்பேன். கரூரில் தி.மு.க.வினருக்கு ஆள் இல்லாததால் நம்ம செந்தில் பாலாஜியை மாவட்ட செயலாளராக ஆக்கியுள்ளனர். அவரை பற்றி தான் நமக்கு தெரியுமா? இல்லையா?.திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.பரவாயில்லை. 3 மாதத்தில் தேர்தல் வரும் போது தெரியும் . வரும் ஏப்ரல் , மே மாதத்தில் நடைபெறவுள்ள 18 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க.அமோக வெற்றி பெறும் .

    தமிழக மக்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர். எனவே கட்சியினர் மக்களை சந்தித்து 40 பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்வது எரியும் நெரிப்பில் எண்ணை ஊற்றும் செயலாகும். மாணவர்களின் நலன் கருதி ஜாக்டோஜியோ அமைப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை கொண்டு வர அரசு முன்வர வேண்டும்.


    உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி என கூறுவது கானல்நீராகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். எடப் பாடி பழனிச்சாமி சத்தமாக கூறினால் அது பொய்யாகத்தான் இருக்கும். மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் செயலில் எடப்பாடி அரசு ஈடுபட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்காக அரசு பணத்தை செலவழித்துள்ளார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்றார். #dinakaran #bjp #edappadipalanisamy #parliamentelection

    Next Story
    ×