என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழலே சில நாட்களாக நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் தங்கம் மீண்டும் உச்சத்திற்கு சென்றது.

    இந்த நிலையில், டிசம்பர் மாத தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,070-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    29-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    28-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    27-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    26-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-11-2025- ஒரு கிராம் ரூ.192

    29-11-2025- ஒரு கிராம் ரூ.192

    28-11-2025- ஒரு கிராம் ரூ.183

    27-11-2025- ஒரு கிராம் ரூ.180

    26-11-2025- ஒரு கிராம் ரூ.176

    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
    • காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

    காரைக்குடி அருகே அரசு பஸ்கள் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், பிரதமர் மோடி இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டின் சிவகங்கையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

    • அனுபவம் தான் நம் எல்லோரையும் விட சிறந்த ஆசிரியர்.
    • நீங்கள் கற்றுக்கொள்ளத் தகுதியானதை உங்களுக்கு அது கற்று தருகிறது.

    கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரிடம் 2026 தமிழக தேர்தலுக்கு முன்னதாக விஜய், திமுகவை தனது அரசியல் எதிரி என்று எவ்வாறு அடையாளம் கண்டார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதே போல் மக்கள் நீதி மைய்யத்தின் எதிரி யார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், , "பெரும்பாலான கட்சிகள் அடையாளம் காணத் துணியும் எதிரியை விட எனது எதிரி பெரியவர். சாதிவெறி தான் எனது எதிரி. நான் அதை கொலை செய்ய நினைக்கிறன். கொலை போன்ற வன்முறை வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்? என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் சாதிவெறி அதைவிட மிகவும் வன்முறையானது" என்று தெரிவித்தார்.

    கமலிடம், விஜய்க்கு ஏதாவது ஆலோசனை இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, "நான் ஆலோசனை வழங்கும் நிலையில் இல்லை. ஒருவேளை ஆலோசனை வழங்க இது சரியான தருணமாக இருக்காது. அனுபவம் தான் நம் எல்லோரையும் விட சிறந்த ஆசிரியர், ஏனென்றால் நமக்கெல்லாம் ஒரு சார்பு இருக்கிறது. ஆனால் அனுபவத்திற்கு அந்த சார்பு கிடையாது. நீங்கள் கற்றுக்கொள்ளத் தகுதியானதை உங்களுக்கு அது கற்று தருகிறது" என்று கூறினார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
    • தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 110, புதுச்சேரியிலிருந்து 90, காரைக்காலிருந்து 180 கி.மீ. தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலவுகிறது.

    தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன்காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதனிடையே, பலத்த காற்று வீசுவதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

    அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,739.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,750-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது. 

    • படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும், கூவத்தூரில் இருந்து வேலைக்குச் செல்ல 20 பேரை ஏற்றிக்கொண்டு வந்த வேனும் நேருக்க நேர் மோதி விபத்த ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணித்த தனியார் நிறுவன பெண் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. சென்னையின் தெற்கு-தென்கிழக்கு பகுதியில் 180 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் உள்ளது.

    தமிழ்நாட்டில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் தரைக்காற்று 60 - 70 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது.
    • ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம்.

    இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை 11:05 மணியளவில் முதற்கட்டமாக 177 பேர் (ஆண்கள் 113, பெண்கள் 60, குழந்தைகள் 4) தமிழ்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.

    இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் எளிதாக வடிவதற்குத் தற்காலிக கால்வாய்கள் வெட்டப்பட்டு உள்ளன.
    • சென்னை சென்ட்ரலில் தானே இயங்கும் விபத்து நிவாரண ரெயில் தயார் நிலையில் உள்ளன.

    சென்னை:

    'டிட்வா' புயலைக் கருத்தில் கொண்டு, பயணி கள் மற்றும் ரெயில்வே கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் விரிவான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. இதற்காகக் கோட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, பெரம்பூர், ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் சூலூர்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர்.

    வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் எளிதாக வடிவதற்குத் தற்காலிக கால்வாய்கள் வெட்டப்பட்டு உள்ளன.

    அனைத்து அதிகாரிகளும் தங்களது தலைமையகத்தில் இருக்கவும், குறுகிய அறிவிப்பில் பணிக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    எந்தவொரு அவசர நிலையையும் சமாளிக்க, சென்னை சென்ட்ரல், செங்கல்பட்டு மற்றும் ஜோலார்பேட்டையில் விபத்து நிவாரண ரெயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரலில் தானே இயங்கும் விபத்து நிவாரண ரெயில் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

    மின் இணைப்புகளைச் சரிசெய்யப் பணியாளர்களுடன் கூடிய 'டவர் வேகன்கள்' மற்றும் அவசரத் தேவைக்காக டீசல் என்ஜின்கள் முக்கிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. குறைந்தது 72 மணி நேரத்திற்குத் தேவையான டீசல் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உயிர் சேதத்தைத் தடுப்பதே எங்களின் முதல் முன்னுரிமை என்று, சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கருதி தேவைப்பட்டால் சில பகுதிகளில் ரெயில் சேவைகள் நிறுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

    மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • இருளர் குடும்பத்தினர் கோவளம் சாலையில் உள்ள மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல், ரிசார்ட், விடுதிகள் முடங்கினர்.

    மாமல்லபுரம்:

    வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள "டிட்வா" புயலின் தாக்கத்தால் நேற்று மாலை மாமல்லபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் காற்றுடன் மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மீனவர்கள் தங்களது படகுகள், மிஷின், வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.

    கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தென்பகுதி, பட்டிப்புலம் பகுதிகளில் கடற்கரை கரையோரம் குடில் அமைத்து தங்கியிருந்த இருளர் 120 குடும்பங்கள் பாதுகாப்பு இன்றி இருப்பதாக தகவலறிந்த, மாவட்ட கலெக்டர் சினேகா அவர்களை பாதுகாக்க உத்தரவிட்டார்.

    சப்-கலெக்டர் மாலதி ஹலென் தலைமையில் திருப்போரூர் தாசில்தார் சரவணன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாசுதேவன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து, அப்புறப்படுத்தி கோவளம் சாலையில் உள்ள முத்தமிழ் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு மாமல்லபுரம் நகராட்சி ஆணையர், தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்டோர் உணவுகள் வழங்கினர்.

    மாமல்லபுரத்தில் ஞாயிறு, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும். டிட்வா புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல், ரிசார்ட், விடுதிகள் முடங்கினர். கடற்கரை சாலையோர கடைகள் மற்றும் அரசு கைவினை பொருட்கள் கடை இருக்கும் ஐந்துரதம் வளாகங்களில் உள்ள கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

    • உழவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு அடுத்தடுத்து செய்து வரும் துரோகங்கள் கண்டிக்கத்தக்கவை.
    • காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    டிட்வா புயல் காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கொட்டித் தீர்த்து வரும் மழையால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நன்றாக வளர்ந்து கதிர் வைக்கும் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதால் உழவர்கள் கவலையும், வேதனையும் அடைந்துள்ளனர்.

    பருவமழையில் பயிர்கள் சேதமடைவதால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு அடுத்தடுத்து செய்து வரும் துரோகங்கள் கண்டிக்கத்தக்கவை. திமுக ஆட்சிக்கு வந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் பல முறை பருவமழையால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருமுறை கூட அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை; பல முறை அவர்களுக்கு இழப்பீடே வழங்கப்படவில்லை. ஏனோ அந்த அளவுக்கு உழவர்களை திமுக அரசு பழிவாங்கி வருகிறது.

    கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.

    நடப்பாண்டின் நிலை இதுவென்றால், கடந்த ஆண்டின் நிலைமை இன்னும் மோசமாகும். காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்த பிறகும் கூட பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

    கடந்த ஆண்டுகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.39, ரூ.52, ரூ.90 என நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகையை வாரி வழங்கிய பெருமை திமுக ஆட்சியாளர்களுக்கு உண்டு. தமிழ்நாடு கடுமையான வறட்சியைச் சந்தித்த காலத்தில் உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை விட இந்த திமுக ஆட்சியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அதைப் பற்றி திமுக அரசு கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    கடந்த ஆண்டுகளிலும், நடப்பு வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்திலும் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாமல் உழவர்களை ஏமாற்றிய திமுக அரசு மீண்டும் ஒருமுறை துரோகம் செய்யக்கூடாது. டிட்வா புயல் - மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×