என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கண்டமனூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.45 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 1600 கன அடி.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. சற்று மழை ஓய்ந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு, அய்யனார்கோவில், டானா தோட்டம் போன்ற பகுதிகளில் பெய்த மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கண்டமனூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே கண்டமனூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது. எனவே பொதுமக்கள் யாரும் தடுப்பணையில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நீர் வரத்து அதிகரிப்பால் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 63.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1740 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1319 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4262 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.45 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6987 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் நீடிப்பதால் அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடி. வரத்து 57 கன அடி. சண்முகாநதி அணை நீர்மட்டம் 43.10 அடி. வரத்து 17 கன அடி. திறப்பு 14.17 கன அடி.

    • வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இதனால் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560

    30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    29-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    28-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    27-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    01-12-2025- ஒரு கிராம் ரூ.196

    30-11-2025- ஒரு கிராம் ரூ.192

    29-11-2025- ஒரு கிராம் ரூ.192

    28-11-2025- ஒரு கிராம் ரூ.183

    27-11-2025- ஒரு கிராம் ரூ.180

    • அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

    சென்னை அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரில் இருந்து 150 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 130 கி.மீ., நெல்லூருக்கு 180 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

    தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 250 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில் மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றது.
    • சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி வந்த மெட்ரோ ரெயில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில் மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றது. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் திடீரென பழுதாகி நின்றதால் பயணிகள் பீதியடைந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த தொழில்நுட்ப நிபுணர்கள் கோளாறை சரி செய்தனர். இதன்பின் மெட்ரோ ரெயில் சேவையானது சீரானது.

    சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

    • சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 160, புதுச்சேரியில் இருந்து 140 , நெல்லூருக்கு 170 கி.மீ தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலவுகிறது. மேலும் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 35 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

    சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் பல மணி நேரமாக மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது.

    சென்னை அண்ணாசாலை, மெரினா, சாந்தோம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலையில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ., பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. 

    • நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்கிறது.
    • தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் பல மணிநேரமாக மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனை தொடர்ந்து நேற்று மாலைக்கு மேல் சற்று இடைவெளி விட்ட மழை நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முழுமையாக பாதிப்படைந்துள்ளன.
    • மழையில் டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல, ராமேஸ்வரம் நகரமே நீரில் மூழ்கி அங்குள்ள மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

    27.11.2025 முதல் இன்று வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையினால், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முழுமையாக பாதிப்படைந்துள்ளன. மேலும், பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட இதர பயிர்களும் கனமழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள நீரில் மூழ்கிய சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் பாதிப்படைந்துள்ளன.

    அதேபோல், திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் பருவ மழையின் காரணமாக விவசாய நிலங்களில் 10 நாட்களுக்கும் மேலாக, இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பாதிப்படைந்துள்ள பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிட்டிருந்த நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கியதால், நெற்பயிர்களின் அழுகிய நிலையைக் கண்டு விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

    'பயிர் காப்பீடு'-ன் போது பட்டாவில் நேரடி பெயர் இல்லாதவர்கள், இறந்தவர்களின் பெயரில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் என்று பலர் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையில் உள்ளதாக, பாதித்துள்ள விவசாயிகள் விடியா திமுக அரசின் மீது புகார் தெரிவிக்கின்றனர்.

    அம்மா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வந்த "குடிமராமத்துப் பணி" திட்டத்தினால் தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. 2021-ல் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, குடிமராமத்துப் பணியை ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு நிறுத்திவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பருவமழைக்கு முன் டெல்டா மாவட்டங்களில் உள்ள 'வாய்க்கால்களை தூர் வாருங்கள்' என்று நான் அடிக்கடி சட்டமன்றம், பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் அறிக்கைகள் வாயிலாக இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தினாலும், இந்த அரசு தூர் வாருவதில் அலட்சியம் காட்டியதால், டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் நெல் பயிரிட்ட வயல்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழையில் டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல, ராமேஸ்வரம் நகரமே நீரில் மூழ்கி அங்குள்ள மக்கள் தத்தளித்து வருகின்றனர். அவர்களின் துயரைத் துடைக்க சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வேன் என்று

    வாய்ச் சவடால் அடிக்கிறார். ராமேஸ்வரம் நகர மக்கள் 2-3 நாட்களாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படும்போது, மக்களைப் பற்றி கவலையில்லாமல் விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், வாக்கிங் போகும்போது நடிகையுடன் பேசுவதை, வலைதளத்தில் பதிவிடுகிறார்.

    மழைக்காலத்தில் கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது. பாதிக்கப்பட்ட மக்களை விடியா திமுக அரசின் முதலமைச்சர் நேரில் சந்திக்கச் சென்றால்தான், கீழே பணியாற்றும் அமைச்சர்களும், அதிகாரிகளும் விரைந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட நெற் பயிர், 'டிட்வா' புயல் மழையினால், தண்ணீரில் முழுமையாக மூழ்கியுள்ளன என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    'டிட்வா' புயல் மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தற்போது பெய்து வரும் கன மழையினால் தமிழகத்தின்

    கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாய நிலங்களை வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக

    நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது.
    • சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொட்டும் மழையில் விடுமுறை அளிக்காமல் பள்ளிக்குழந்தைகளை பரிதவிக்க விடுவதா?முடிவெடுக்கும் அதிகாரம் கல்வித்துறைக்கே வேண்டும்!

    சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் இன்று வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவச் செல்வங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பியுள்ளனர். மாணவர்களின் துயரத்திற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    டித்வா புயல் காரணமாக சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது. இன்று காலை 7 மணியளவில் டித்வா புயல் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், அதனால் சென்னையில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. அதனடிப்படையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை அரசு செய்யாததால் தான் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

    மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • திமுக ஆட்சியில் கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் பஞ்சமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
    • மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தஞ்சாவூரில் உள்ள திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புதுதில்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் அவர்களின் வீட்டிலிருந்து 300 பவுன் தங்க நகைகள், கிலோ கணக்கில் வெள்ளிப் பாத்திரங்கள், பல லட்ச ரூபாய் பணம் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொலையாளிகள் மற்றும் கொள்ளையர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது என்பதற்கு மிக மோசமான சான்று தான் இந்த கொள்ளை நிகழ்வு ஆகும்.

    ஏ.கே.எஸ். விஜயன் திமுக விவசாயிகள் அணியின் செயலாளராகவும் உள்ளார். நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது புது தில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். இவ்வளவு அதிகாரம் கொண்ட ஏ.கே.எஸ். விஜயனின் இல்லம் எப்போதும் காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருக்கும். ஆனால், அதையும் கடந்து அவரது வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது

    திமுக ஆட்சியில் கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் பஞ்சமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன் கோவையில் அரசு உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வாழும் அரசு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த வட மாநில கொள்ளையர்கள் 2 மணி நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். அதைத் தடுக்க முடியாத காவல்துறை, பிரச்சினையை திசை திருப்புவதற்காக கொள்ளையர்களை பிடித்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

    3 வாரங்களுக்கு முன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலின் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்து அந்தக் கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணம் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளது. இந்த நிகழ்வையும் தடுக்கத் தவறிய காவல்துறை குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பிரச்சினையை திசை திருப்பியுள்ளது.

    ஒரு மாநில அரசின் அடிப்படைக் கடமை அந்த மாநிலத்தின் மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வது ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூட செய்ய திமுக அரசு தவறி விட்டது. தமிழ்நாட்டு மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பது தான் திமுக அரசின் சாதனை ஆகும். மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    • சென்னையில் உள்ள சிறு சிறு கிளினிக்குகளில் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
    • குழந்தைகளுடன் பெற்றோர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் பருவமழை சீசனில் ஏற்படக் கூடிய காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பொதுவாக அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் வரையில் உள்ள காலத்தில் ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். கை, கால் வலி, உடம்பு வலி, காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகுவது, இருமல் போன்ற பாதிப்புகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சுவாசப் பாதை தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. சிறு குழந்தைகள் முதல் பள்ளி மாணவ, மாணவிகள் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவருக்கு வரக்கூடிய காய்ச்சல் மற்றவர்களுக்கும் எளிதாக தொற்றி விடுவதால் குடும்பமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னையில் உள்ள சிறு சிறு கிளினிக்குகளில் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இது குறித்து அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி பொதுநல மருத்துவத்து றையின் தலைவர் டாக்டர் சந்திரசேகர் கூறியதாவது:-

    தற்போது வருகின்ற காய்ச்சல் இந்த பருவ காலத்தில் வரக்கூடியது. நவம்பர், டிசம்பரில் பெய்யும் மழையாலும், குளிராலும் இந்த பாதிப்பு அதிகரிக்கும். வழக்கமான காய்ச்சல் பாதிப்பை விட 10 முதல் 15 சதவீதம் வரை பாதிப்பு அதிகரிக்கும்.

    புளு வைரஸ், அடினோ வைரஸ் போன்றவை இக்காலத்தில் அதிகமாக பாதிக்கும். இத்தகைய காய்ச்சல் பாதிப்பு 95 சதவீதம் தானாகவே சரியாகி விடும்.

    சூடான தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். சுய மருத்துவம் பார்க்கக் கூடாது. மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முகக் கவசம் அணிய வேண்டும். இணை நோய் உள்ள பெரியவர்களுக்கு காய்ச்சலால் மற்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    பருவ கால காய்ச்சலால் பயப்பட தேவையில்லை. வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைவான அளவில் வருவதாக டீன் சாந்தராமன் தெரிவித்தார்.

    'புளு' காய்ச்சல் பாதிப்பு தான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. அதே நேரத்தில் டெங்கு பாதிப்பும் சென்னையில் அதிகரித்து உள்ளது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய "டிட்வா" புயல், நேற்று 17.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.

    இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.

    இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக வெப்பநிலை 22-24° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    வட தமிழகம்-புதுவை கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நாளை காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.
    • கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை சூறாவளி காற்றால் பொதுமக்கள், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டிருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் நகர், பரமக்குடி, சாயல்குடி, மண்டபம், தங்கச்சிமடம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ராமேசுவரத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. 10 மணி வரை நீடித்த மழையால் முக்கிய சாலைகள், அரசு மருத்துவமனை முன்பு தண்ணீர் தேங்கியது. பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர்.

    மேலும் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக சூறாவளி காற்று வீசியது. இதனால் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதன் காரணமாக 8-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.5 கோடி கணக்கில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ×