என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கண்டமனூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தடுப்பணையில் வெள்ளம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
- கண்டமனூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.45 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 1600 கன அடி.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. சற்று மழை ஓய்ந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு, அய்யனார்கோவில், டானா தோட்டம் போன்ற பகுதிகளில் பெய்த மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கண்டமனூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே கண்டமனூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது. எனவே பொதுமக்கள் யாரும் தடுப்பணையில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீர் வரத்து அதிகரிப்பால் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 63.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1740 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1319 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4262 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.45 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6987 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் நீடிப்பதால் அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடி. வரத்து 57 கன அடி. சண்முகாநதி அணை நீர்மட்டம் 43.10 அடி. வரத்து 17 கன அடி. திறப்பு 14.17 கன அடி.






