என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது.
- சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொட்டும் மழையில் விடுமுறை அளிக்காமல் பள்ளிக்குழந்தைகளை பரிதவிக்க விடுவதா?முடிவெடுக்கும் அதிகாரம் கல்வித்துறைக்கே வேண்டும்!
சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் இன்று வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவச் செல்வங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பியுள்ளனர். மாணவர்களின் துயரத்திற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
டித்வா புயல் காரணமாக சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது. இன்று காலை 7 மணியளவில் டித்வா புயல் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், அதனால் சென்னையில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. அதனடிப்படையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை அரசு செய்யாததால் தான் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- திமுக ஆட்சியில் கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் பஞ்சமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
- மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தஞ்சாவூரில் உள்ள திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புதுதில்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் அவர்களின் வீட்டிலிருந்து 300 பவுன் தங்க நகைகள், கிலோ கணக்கில் வெள்ளிப் பாத்திரங்கள், பல லட்ச ரூபாய் பணம் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொலையாளிகள் மற்றும் கொள்ளையர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது என்பதற்கு மிக மோசமான சான்று தான் இந்த கொள்ளை நிகழ்வு ஆகும்.
ஏ.கே.எஸ். விஜயன் திமுக விவசாயிகள் அணியின் செயலாளராகவும் உள்ளார். நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது புது தில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். இவ்வளவு அதிகாரம் கொண்ட ஏ.கே.எஸ். விஜயனின் இல்லம் எப்போதும் காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருக்கும். ஆனால், அதையும் கடந்து அவரது வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது
திமுக ஆட்சியில் கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் பஞ்சமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன் கோவையில் அரசு உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வாழும் அரசு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த வட மாநில கொள்ளையர்கள் 2 மணி நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். அதைத் தடுக்க முடியாத காவல்துறை, பிரச்சினையை திசை திருப்புவதற்காக கொள்ளையர்களை பிடித்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
3 வாரங்களுக்கு முன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலின் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்து அந்தக் கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணம் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளது. இந்த நிகழ்வையும் தடுக்கத் தவறிய காவல்துறை குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பிரச்சினையை திசை திருப்பியுள்ளது.
ஒரு மாநில அரசின் அடிப்படைக் கடமை அந்த மாநிலத்தின் மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வது ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூட செய்ய திமுக அரசு தவறி விட்டது. தமிழ்நாட்டு மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பது தான் திமுக அரசின் சாதனை ஆகும். மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
- சென்னையில் உள்ள சிறு சிறு கிளினிக்குகளில் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
- குழந்தைகளுடன் பெற்றோர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
சென்னை:
சென்னையில் பருவமழை சீசனில் ஏற்படக் கூடிய காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பொதுவாக அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் வரையில் உள்ள காலத்தில் ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். கை, கால் வலி, உடம்பு வலி, காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகுவது, இருமல் போன்ற பாதிப்புகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சுவாசப் பாதை தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. சிறு குழந்தைகள் முதல் பள்ளி மாணவ, மாணவிகள் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவருக்கு வரக்கூடிய காய்ச்சல் மற்றவர்களுக்கும் எளிதாக தொற்றி விடுவதால் குடும்பமாக பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் உள்ள சிறு சிறு கிளினிக்குகளில் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இது குறித்து அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி பொதுநல மருத்துவத்து றையின் தலைவர் டாக்டர் சந்திரசேகர் கூறியதாவது:-
தற்போது வருகின்ற காய்ச்சல் இந்த பருவ காலத்தில் வரக்கூடியது. நவம்பர், டிசம்பரில் பெய்யும் மழையாலும், குளிராலும் இந்த பாதிப்பு அதிகரிக்கும். வழக்கமான காய்ச்சல் பாதிப்பை விட 10 முதல் 15 சதவீதம் வரை பாதிப்பு அதிகரிக்கும்.
புளு வைரஸ், அடினோ வைரஸ் போன்றவை இக்காலத்தில் அதிகமாக பாதிக்கும். இத்தகைய காய்ச்சல் பாதிப்பு 95 சதவீதம் தானாகவே சரியாகி விடும்.
சூடான தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். சுய மருத்துவம் பார்க்கக் கூடாது. மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முகக் கவசம் அணிய வேண்டும். இணை நோய் உள்ள பெரியவர்களுக்கு காய்ச்சலால் மற்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பருவ கால காய்ச்சலால் பயப்பட தேவையில்லை. வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைவான அளவில் வருவதாக டீன் சாந்தராமன் தெரிவித்தார்.
'புளு' காய்ச்சல் பாதிப்பு தான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. அதே நேரத்தில் டெங்கு பாதிப்பும் சென்னையில் அதிகரித்து உள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய "டிட்வா" புயல், நேற்று 17.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.
இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக வெப்பநிலை 22-24° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வட தமிழகம்-புதுவை கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.
- கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை சூறாவளி காற்றால் பொதுமக்கள், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டிருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் நகர், பரமக்குடி, சாயல்குடி, மண்டபம், தங்கச்சிமடம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ராமேசுவரத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. 10 மணி வரை நீடித்த மழையால் முக்கிய சாலைகள், அரசு மருத்துவமனை முன்பு தண்ணீர் தேங்கியது. பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர்.
மேலும் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக சூறாவளி காற்று வீசியது. இதனால் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.
இதன் காரணமாக 8-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.5 கோடி கணக்கில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
- அரையிறுதிப் போட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தபெனிகோபால் லஹோட்டி, ஆனந்த் பாபுவை (223-191) எளிதாக வென்றார்.
- 10 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 95 போலிம் வீரர்கள் கலந்து கொண்டனர்.
2-வது சென்னை ஓபன் டென்பின் போலிம்சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில், இரண்டாம்சீட் பெனிகோபால் எல்., முதல் சீட் மகிபால் சிங்குக்கு எதிராக முதல் பந்தயத்தை (208-194) வென்றார், இதனால்வெற்றியாளரை தீர்மானிக்க இரண்டாவது பந்தயம் ஆடப்பட்டது.
இரண்டாவது பந்தயத்தில், மகிபால் மூன்று தொடர் ஸ்ட்ரைக்குகளுடன் தொடங்கி 200 பின்ஃபால் எடுத்தார். அதேநேரம் பெனிகோபால் 168 ரன்களே எடுத்தார். இதன்மூலம் மகிபால் சாம்பியனாகத் திகழ்ந்தார். இதற்கு முன்னர், ஸ்டெப்லேடர் சுற்றின் முதல் போட்டியில், மூன்றாம் சீட் ஆனந்த் பாபு (தமிழ்நாடு), நான்காம் சீட் நவீன்சித்தம் (தெலுங்கானா) ஆகியோரை (222–183) வீழ்த்தினார்.

அரையிறுதிப் போட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தபெனிகோபால் லஹோட்டி, ஆனந்த் பாபுவை (223-191) எளிதாக வென்றார்.
இரட்டையர் பிரிவின் இறுதி சுற்றில் கிஷன் ஆர் அடித்த ஒருஸ்ட்ரைக், கர்நாடக குழுவிற்கு (351-350) பட்ட வெற்றியை நிச்சயித்தது.
10 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 95 போலிம் வீரர்கள் கலந்து கொண்ட இந்த சாம்பியன்ஷிப், பன்னிரண்டு நாட்கள் உயர் மின்னழுத்த போலிம் நிகழ்வுகளைக்கொண்டு இருந்தது.
- மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பியது.
- அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்த பிறகு பாதிப்பு விவரங்கள் தெரியவரும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு பேரணியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சையில் எப்போதெல்லாம் மழையால் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக ஓடிவந்து ஆய்வு செய்து நிவாரணம் அளிப்பதில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த அடை மழை காலத்தில் துணை முதலமைச்சர் விரைந்து வந்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தினால் தான் கொள்முதல் செய்ய முடியும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பியது.
அந்தக் குழுவினரும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர். ஆனால் ஈரப்பதம் தளர்வு செய்ய முடியாது என மத்திய அரசு கூறியது. இதிலிருந்தே மத்திய பா.ஜ.க அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவது தெளிவாக தெரிகிறது.
தற்போது பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே மழை சேதம் இருக்கிறது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்த பிறகு பாதிப்பு விவரங்கள் தெரியவரும். அதன் அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பித்த பிறகு அவர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்றார்.
- கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அர்ஜுனன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.
கோபி:
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க தொண்டரான அர்ஜுனன் (43) என்பவரும் வந்திருந்தார். அவர் கூட்டம் நடந்த இடத்தின் அருகே உள்ள கோபி -சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அர்ஜுனன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அர்ஜுனன் பரிதாபமாக இறந்தார்.
மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அர்ஜுனன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இறந்த அர்ஜுனன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் எடப்பாடியில் இருந்து கார் மூலமாக கோபிசெட்டிபாளையம் வந்தார். பின்னர் அவர் நேரடியாக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுனன் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அர்ஜுனன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மாவட்ட கட்சி சார்பாக ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினார். கட்சி தலைமை சார்பாக மேலும் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- சட்ட விதியை அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா?
- 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல விழாவிற்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி. வி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டிசம்பர் 31-ந்தேதி வரை உள்ளது. அதற்குள் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் போட்டிருக்கிறீர்களா? கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உறுதியான பின்பு கூட்டணி குறித்து தெரிவிப்பேன்.
துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் மூலம் அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும்.
2017-ம் ஆண்டு தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்து அவரை முதல்வராகிய 18 எம்.எல்.ஏ.க்கள் இவரால் ஜெயித்தவர்கள் அல்ல. இவருடைய அடையாளத்தால் அவர்கள் ஜெயிக்கவில்லை. ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?
அதேபோல் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டுவந்த சட்ட விதிகளை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு தன்னை சுற்றி சில கைத்தடிகளை வைத்துக்கொண்டார். சட்ட விதியை அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா? இன்றைக்கு அ.தி.மு.க என்ற கட்சியை இல்லாமல் செய்து இரட்டை இலை சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறியில் பேசிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
அ.தி.மு.க.வை இன்று எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி ஒரு வட்டார கட்சியாகவும் குடும்ப கட்சியாகவும் மாற்றி வருகிறார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.
- நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவை முக்கிய சுற்றுலாத்தலங்களாக உள்ளது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் அருவியில் குளிக்க வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவிக்கு சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இந்நிலையில் இன்று மழைப்பொழிவு குறைந்து பஞ்சலிங்க அருவியின் நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
- கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
- செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பலத்த காற்றுடன் எழும்பூர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நாட்களில் மழை ஏதுமின்றி வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
இந்த நிலையில், டிட்வா புயல் வலுவிழந்து கரையை கடப்பதால் மழை தொடர்பான எந்தவித அறிவிப்பும் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அறிவிக்கப்படாத நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை விடாது பெய்து வருகிறது.
பலத்த காற்றுடன் எழும்பூர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
இதனிடையே, சென்னையில் காற்றழுத்தம் நெருங்க நெருங்க மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






