என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • உ.பி., சிறைகளில் 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
    • கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல.

    அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22, 2024 அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவை நாடு முழுவதும் உள்ள சாவடி மட்டத்தில் நேரடியாக ஒளிபரப்பும் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

    கும்பாபிஷேகம் விழாவிற்கான வேத சடங்குகள் முக்கிய விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜனவரி 16 அன்று தொடங்குகிறது. 

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி தெரிவித்தார்.

    இதுகுறித்து உத்தரபிரதேச சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி கூறுகையில், "தற்போது 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள். அவர்கள் இந்த நிகழ்வில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

    கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல. சில சம்பவங்கள் நடக்கும் போது அவர்கள் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். புனிதமான அந்நேரத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது" என்றார்.

    • அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
    • திறப்பு விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக தயாராகும் ‘தீர்த்த ஷேத்ரபுரம்’ குடியிருப்புகள்

    உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மும்மரமாக செய்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் மற்றும் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை பயன்படுத்தி சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 22-ம் தேதி கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர விஐபி-க்கள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16-ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது.

    இந்நிகச்ழ்சியில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து செல்ல தயாராகி வருகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால், அவர்களின் வசதிக்கேற்ப பல்வேறு மொழிகளில் பெயர்ப் பலகை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் மட்டுமல்லாது, உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, வாரணாசி, கோரக்பூர், உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு வரும் சாலைகளிலும் பல மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட உள்ளது.

    மேலும், அயோத்திக்கு அருகில் உள்ள 6 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்தி செல்வதற்காக பேருந்து வசதிகளும், பக்தர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்க தயாராகும் குடியிருப்புகளுக்கு 'தீர்த்த ஷேத்ரபுரம்'என பெயரிடப்பட்டுள்ளது.

    • அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    • இதில் பிரதமர் மோடி, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி கடந்த இரு வருடங்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 22-ம் தேதி கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

    இதற்கிடையே, மூலவர் ராமர் சிலை வரும் 17-ம் தேதி அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சமாஜவாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், அது கடவுளின் விழா. கடவுளை விட முதல் மந்திரி பெரியவராக இருக்கமுடியாது. ராமரால் அழைக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக செல்வார்கள் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
    • சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அயோத்தி:

    பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி கடந்த இரு வருடங்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 22-ந்தேதி கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    கருவறையில் 'பால ராமர்' (குழந்தை பருவத்தில் ராமர்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 'பிராண பிரதிஷ்டை' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    நாடு முழுவதும் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு சிறப்பு விமான சேவை, ரெயில் சேவை உள்பட போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏதுவாக 300 டன் அரிசி சத்தீஸ்கரில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதில் ஒரு சிலை ஏற்கனவே அங்கு கடந்த 1949-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலையாகும். இது உற்சவர் சிலையாக இருக்கும். அங்கு நடக்கும் தேர் திருவிழா, ஊர்வலம் போன்றவற்றில் இந்த சிலை பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு சிலை, ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை வடிப்பதற்கு பெங்களூருவை சேர்ந்த கணேஷ் பட், மைசூரு அருண் யோகிராஜ் மற்றும் ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த சத்தியாநாராயண பாண்டே ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட 51 அங்குலம் உயரம் கொண்ட 5 வயது குழந்தை ராமர் தனது கையில் வில்லுடன் காட்சி அளிக்கும் உருவம் வரைந்து கொடுக்கப்பட்டன. அதன்படி சிலை வடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    அவர்கள் 3 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் சிலை வடிக்கும் பணியினை தொடங்கினர். அதற்கான கற்களை கோவில் அறக்கட்டளையினர் வழங்கினர். அதில் 2 கற்கள், கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. மற்றொன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வெள்ளை கற்கள் ஆகும்.

    இந்த 3 சிற்பிகளும், முழுமையாக சிலை வடித்தனர். இதில் ஒன்றை தேர்வு செய்ய கடந்த 29-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    இந்த சிலையை வடித்த அருண் யோகிராஜ் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வடித்த சிலைதான் அயோத்தி ராமர் கோவிலில் இடம்பெறப் போவதால் அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் அயோத்தி நகரம் விழாக்கோலத்திற்கு மாறத் தொடங்கி இருக்கிறது. பக்கத்து மாநிலங்களில் இருந்து மக்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அயோத்தி முழுக்க ஆங்காங்கே அன்னதானம் நடந்து வருகிறது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

    அந்த குழந்தை ராமர் சிலை எப்படி இருக்கும் என்று வடமாநில மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து மூலவர் ராமர் சிலையை வருகிற 17-ந்தேதி உலகுக்கு காட்ட முடிவு செய்துள்ளனர்.

    அன்றைய தினம் (17-ந்தேதி) அந்த ராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த தகவலை ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்து உள்ளார்.

    மேலும் அவர் கோவிலில் மூலவர் சிலையாக பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நேரத்தையும் அறிவித்துள்ளார். கோவில் வளாகத்திலும் அயோத்தி நகரில் வால்மீகி சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலும் அட்ஷதை வழங்கும் நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார்.

    அப்போது சம்பத்ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில் கருவறையில் பால ராமர் சிலையை நிறுவும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி 22-ந்தேதி பிற்பகல் 12.20 மணிக்கு நடைபெறும்.

    அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்தும் பிரசாதம் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீராம ஜோதி என்னும் தீபமேற்றி வழிபாடு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வேண்டுகோளை பிரதமர் நரேந்திரமோடியும் நாட்டு மக்களிடம் விடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயகம், அரசியலமைப்பு இல்லாதபோது வாக்குகள் நம்மிடம் இருந்து பறிக்கப்படும்.
    • பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றைத் தவிர நாடு கடந்த 10 ஆண்டுகளில் எதையும் பெறவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ், ஜனநாயகத்தின் புனிதத்தை அழிக்க பா.ஜனதா சதி செய்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

    புத்தாண்டு தினத்தையொட்டி கட்சி தலைமையகத்தில கூடியவர்களுக்கு, இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கட்டும் என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தொண்டர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா அதிகாரத்திற்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு பூத் அளவில் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். வாக்குகள் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

    2024 மக்களவை தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலைப்பை காப்பாற்றுவதற்கானது. ஜனநாயகம், அரசியலமைப்பு இல்லாதபோது வாக்குகள் நம்மிடம் இருநது பறிக்கப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் நீதியை பெற முடியாது.

    பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றைத் தவிர நாடு கடந்த 10 ஆண்டுகளில் எதையும் பெறவில்லை. பா.ஜனதா அவர்களின் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு பலவீனம் அடைந்துவிட்டது. 2024 மக்களவை தேர்தலில் எந்த விலை கொடுத்தாவது பா.ஜனதாவை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • காபி இயந்திரத்தை அதிகாரிகள் சுத்தியலால் அடித்து உடைத்தனர்.
    • சிலிண்டர் வடிவிலான இரண்டு தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம், லக்னோவில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், காபி இயந்திரத்தில் மறைத்து வைத்து கடத்த செல்ல முயன்ற 3.497 கிலோ தங்க சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சுங்க தறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பயணி ஒருவரின் காபி இயந்திரம் மீது சந்தேக பார்வை விழுந்தது.

    தொடர்ந்து, காபி இயந்திரத்தை அதிகாரிகள் சுத்தியலால் அடித்து உடைத்தனர். அப்போது, அதனுள் இருந்த சிலிண்டர் வடிவிலான இரண்டு தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்ற சம்பவம் ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது, சுங்க அதிகாரிகள் காபி இயந்திரத்தில் இருந்து ரூ. 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். 

    • கடவுள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
    • அயோத்தியில் அதிநவீன விமான நிலையம், ரெயில் நிலையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    மும்பை:

    அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி மிக மிக கோலாகலமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

    எதிர்காலத்தில் அயோத்திக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அதை கருத்தில் கொண்டு அந்த நகரத்தின் உள் கட்டமைப்பை பிரதமர் மோடி மேம்படுத்தி வருகிறார். அதன் முதல் கட்டமாக அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், அயோத்தி ரெயில் நிலையமும் சீரமைக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே கூறுகையில், எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அங்கு செல்ல எனக்கு அழைப்பும் தேவையில்லை. கடவுள் ராமர் ஒரு கட்சியின் சொத்து அல்ல, அனைவருக்கும் சொந்தமானவர். இந்த நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என விரும்புகிறேன். இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, அரசாங்கம் அல்ல என தெரிவித்தார்.

    • அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
    • ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 400 கோடி ஏழைகளுக்கும் வீடு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதன்பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று உலகம் முழுவதும் ஜனவரி 22-ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது

    உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டவேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ராம் லாலா கூடாரத்தில் இருந்தார், இன்று ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 400 கோடி ஏழைகளுக்கும் வீடு கொடுக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் வரலாற்றில் டிசம்பர் 30-ம் தேதி மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1943-ம் ஆண்டு இதே நாளில், அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றி இந்தியாவின் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.

    இங்கு ரூ.15,000 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த உள்கட்டமைப்பு தொடர்பான பணிகள் மீண்டும் நவீன அயோத்தியை நாட்டின் வரைபடத்தில் பெருமையுடன் நிறுவும். இன்றைய இந்தியா தனது புனித யாத்திரை தலங்களை அழகுபடுத்துவதுடன் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிலும் மூழ்கியுள்ளது.

    அயோத்தியின் வளர்ச்சி இங்குள்ள மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி அயோத்தி நகரை தனி கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறார்.
    • பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    லக்னோ:

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுயில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மொத்தம் 80 எம்.பி. தொகுதிகள் கொண்ட உத்தரபிர தேசத்தின் உள்கட்டமைப்பை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி வியக்கத்தக்க வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி மாற்றி இருக்கிறார்.

    பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற வாரணாசி தொகுதி ஏற்கனவே சொர்க்கலோகம் போல் மாற்றப்பட்டு விட்டது. அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் சீரமைக்கப்பட்டது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பிரதமர் மோடி அயோத்தி நகரை தனி கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறார்.

    இதற்கிடையே, புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடி, அதன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்தார். பிறகு அயோத்தி ரெயில் நிலையத்தை பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைத்தார்.


    மேலும், கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரெயில்கள், தா்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹாா் உள்பட இரு அம்ருத் பாரத் ரெயில்களின் சேவையையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்தார்.

    • ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் 2016, மே மாதம் தொடங்கப்பட்டது.
    • இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

    லக்னோ:

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் 'உஜ்வாலா' திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தில், இலவசமாக அளிக்கப்படும் கியாஸ் இணைப்புக்கான செலவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்தி விடும். இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை முடிவு செய்தது.

    இதற்கிடையே, உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.


    இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, 10வது கோடி பயனாளியான மீரா என்ற பெண்மணி வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது வீட்டில் டீ குடித்தார். வெளியே நின்றிருந்த மக்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். அவர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.

    • பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு அயோத்தி சென்றடைந்தார்.
    • பிரதமரை வரவேற்கும் வகையில் சாலையின் இருபுறமும் பிரமாண்டமான கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

    லக்னோ:

    அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி மிக மிக கோலாகலமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

    எதிர்காலத்தில் அயோத்திக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அதை கருத்தில் கொண்டு அந்த நகரத்தின் உள் கட்டமைப்பை பிரதமர் மோடி தனது நேரடி மேற்பார்வையில் மேம்படுத்தி வருகிறார். அதன் முதல் கட்டமாக அயோத்தியில் அதி நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    அதுபோன்று அயோத்தி ரெயில் நிலையமும் சீரமைக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் ஒவ்வொரு பகுதியும் பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் அழகு படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளை பார்வையிட்டு தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி முடிவு செய்தார்.

    அதன்படி இன்று காலை அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு அயோத்திக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்த 2 இடங்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15 கி.மீ. ஆகும். இந்த 15 கி.மீ. தொலைவிலும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.

    அந்த 15 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். இன்று பகல் 11 மணிக்கு இந்த ரோடு ஷோவை தொடங்கினார். பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் 15 கி.மீ. தொலைவுக்கும் சாலையின் இருபுறமும் மலர் அலங்காரங்களுடன் பிரமாண்டமான மோடி கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    சாலையின் இரு புறமும் கண்கவர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு பல்வேறு வடிவங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன. 'புண்ணிய நகரான அயோத்திக்கு வரவேற்கிறோம்' என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன. பிரதமர் மோடி படம் பொறித்த பிர மாண்டமான பேனர்களும் 15 கி.மீ. தொலைவுக்கு நிறைந்திருந்தன.

    பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்திய 15 கி.மீ. தொலைவுக்கும் சுமார் 1.5 லட்சம் பேர் திரண்டிருந்தனர். அவர்கள் பிரதமர் மோடி மீது மலர்களை அள்ளி தூவி கோஷம் எழுப்பி அயோத்திக்கு வருக வருக என்று வரவேற்றனர். மோடியை உற்சாகப்படுத்தும் வகையில் 40 இடங்களில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சுமார் 2 ஆயிரம் நடன கலைஞர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே நடனமாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றபடி பிரதமர் மோடி வாகனம் புதிய ரெயில் நிலையத்துக்கு சென்று அடைந்தது.

    இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடி, அதன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்தார். பிறகு அயோத்தி ரெயில் நிலையத்தை பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைத்தார். அதன்பின் அங்கு அம்ரித் பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தகவல்.
    • ஸ்மிரிதி இரானியிடம் புகார் அளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுபாடு.

    பா.ஜனதா கட்சியின் உத்தர பிரதேச மாநில அமேதி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி தனது சொந்த தொகுதிக்கு 3 நாள் பயணமாக சொந்த தொகுதிக்கு சென்றுள்ளார்.

    நேற்று அவர்கள் தொகுதிகளை சேர்ந்தவர்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அப்போது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலர் புகார் அளிக்க வந்திருந்தனர். அவர்கள் நாங்கள் ஓய்வு பெற்ற போதிலும், வேலைப் பார்த்தபோது எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இன்னும் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில்தான் உள்ளது. அதை பெற்றுத்தர உதவ வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    ஸ்மிரிதி இரானி உடனடியாக மாவட்ட கல்வி ஆய்வாளரை தொடர்பு கொண்டார். அவரிடம், உங்கள் முன் நிலுவையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சரிபார்த்து அனுப்புங்கள் என உத்தரவிட்டார். அதுவும் இன்றைக்குள் அனுப்ப வேண்டும் எனக் கூறினார்.

    மேலும், கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுங்கள். இது அமேதி. இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அணுகலாம். யோகி ஆதித்ய நாத் அரசு, சம்பளம் நிலுவையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களுடைய சம்பளத்தை உடனடியாக பெற வேண்டும் என விரும்புகிறது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×