என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி" என்று கல்வித் துறையினர் மாற்றியுள்ளனர்.
    • நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதிலிருந்து 'பாஜக' என்று மாற்றுவது ஒன்றுதான் இன்னும் நடக்காமல் இருக்கிறது

    1965இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வீரமரணமடைந்தவர் இந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீத். போரில் 8 பாகிஸ்தான் பீரங்கிகளை அழித்த அப்துல் ஹமீத் 9வது பீரங்கியை தாக்கும்போது வீரமரணமடைந்தார். பரம் வீர் சகாரா பெற்றவர் இவர்.

    உத்தரப் பிரதேசம் காஜிபூர் அருகே ஜகானியன் தாலுகாவின் கீழ் உள்ள தாமுபூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர். அங்கு இயங்கி வரும் அரசு பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பு, பள்ளியில் பெயிண்ட் அடித்தபோது, பள்ளியின் பெயரை "பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி" என்று கல்வித் துறையினர் மாற்றியுள்ளனர்.

    இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கல்வித் துறை அதிகரிகள், சுவரின் ஹமீத்தின் பெயரை எழுதி அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.

    இருப்பினும், ஹமீத்தின் பேரன் ஜமீல் அகமது, இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். "தேசத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு போர் வீரரின் பெயரை அழித்தது மன்னிக்க முடியாத தவறு" என்று அகமது கூறினார்.

    மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 18) பள்ளியின் பெயர் பிரதான நுழைவாயிலில் 'ஷாஹீத் வீர் அப்துல் ஹமீத் பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி' என்று மாற்றப்பட்டுள்ளது.

    சமாஜ்வாடி கட்சித் தலைவரும் முன்னாள் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் இந்த விவகாரத்தில் பாஜக தலைமையிலான மாநில அரசை கடுமையாக சாடினார். "நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள் மற்றவரை விட குறைவான முக்கியத்துவத்தைப் பெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அநாகரீகமானது.

    இப்போது நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதிலிருந்து 'பாஜக' என்று மாற்றுவது ஒன்றுதான் இன்னும் நடக்காமல் இருக்கிறது என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சுதந்திரம் பெறுவதிலும் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதிலும் எந்தப் பங்கையும் வகிக்காதவர்கள், தியாகிகளின் முக்கியத்துவத்தை எப்படி அறிந்திருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
    • இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    இந்த நிலையில், பிரயாக்ராஜ் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும். இவை அதிகளவில் இருக்கும் ஆற்றில் நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் புனித நீராடி வருகின்றனர்.

    • புறாக்களின் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.
    • புறாக்கள் அந்த பகுதியின் அடையாளமாகவே இருந்துள்ளது.

    மீரட்:

    உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் முகமது கியூம் (வயது 65) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது முன்னோர்கள் முகலாயர்கள் காலத்திலிருந்து புறாக்களை வைத்து விளையாடும் கபூர்தாசி என்ற விளையாட்டை மிகவும் பிரபலமாக நடத்தி வந்துள்ளனர்.

    முன்னோர்கள் வழியில் தற்போதும் அந்த விளையாட்டை மீரட்டில் முகமது கியூம் தொடர்ந்து நடத்தி வருகிறார். இதற்காக அவர் தனது வீட்டு மாடியில் 400 புறாக்களை வளர்த்து வருகிறார். இந்த புறாக்களின் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.

    அதில் பல அரிய வகை வெளிநாட்டு வகை புறாக்கள் கண்ணைக் கவரும் வகையில் பல வண்ணங்களில் இருந்தன. தினமும் காலையில் புறாக்களுக்கு உணவளிப்பது, அதற்கு பயிற்சி கொடுப்பது என தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த புறாக்களோடு மகிழ்ச்சியாக அவர் நேரத்தை செலவிட்டும் வந்துள்ளார்.


    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் புறாக்களுக்கு உணவளிக்கு மாடிக்கு முகமது கியூம் சென்றுள்ளார். அப்போது அங்கு புறாக்கள் இல்லாமல் திறந்து கிடக்கும் காலி கூண்டுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    மற்ற எல்லா பொருட்களும் அந்தந்த இடத்தில் அப்படியே இருந்தது. இதனால் புறாக்களை மர்ம கும்பல் திருடிச் சென்றிருக்கலாம் என்று அவர் சந்தேகமடைந்தார்.

    இதுகுறித்து லிசாடி கேட் போலீஸ் நிலையத்தில் முகமது கியூம் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் கூறியிருப்பதாவது:-

    அப்பகுதியை சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். திருடர்கள் ஏணி மூலம் மாடியில் ஏறி புறாக்களை திருடிச் சென்றுள்ளனர். அவர் வீட்டிலிருந்து வேறு எந்த பொருளும் திருடுபோக வில்லை. புறாக்களை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றுள்ளனர். திருடர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    முகமது கியூம் வளர்த்த புறாக்கள் அந்த பகுதியின் அடையாளமாகவே இருந்துள்ளது. அப்பகுதி மக்கள் தினமும் புறாக்களை வந்து பார்த்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். திருடர்கள் புறாக்களை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது. 

    • மணமகளின் வீட்டில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக, மணமகனின் உறவினர் அருண்குமார் என்ற வாலிபர் சென்றார்.
    • ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருமணம் என்றாலே விருந்து உபசரிப்புக்குதான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். இன்னார் வீட்டு திருமணத்தில் சாப்பிட்டோம், சாப்பாடு பிரமாதம் என்று உறவினர்கள் கூறுவதை கேட்டு திருமண வீட்டார் மகிழ்ச்சி அடைவார்கள்.

    அதே சமயம் சாப்பாடு ருசியாக இல்லை என்றால், 'பல லட்சம் ரூபாய் செலவு பண்ணி சாப்பாடு ஒழுங்காக இல்லையே' என்று குறைபட்டு கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

    ஆனால் திருமண விருந்து பிரச்சனை, கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சி தரக்கூடியதுதான். உத்தரபிரதேசத்தில்தான் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேசத்தின் காஸ்கன்ஜ் மாவட்டம் சஹாவர் பகுதியில் திருமண விழா நடந்தது. மணமகளின் வீட்டில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக, மணமகனின் உறவினர் அருண்குமார் என்ற வாலிபர் சென்றார்.

    உறவினர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட அருண்குமார், 'சாப்பாடு ருசியாக இல்லை. சரியாக வேகவில்லை. தரமாகவும் இல்லை' என்று குறை கூறினார். இது மணமகள் வீட்டாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

    ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த மணமகளின் மாமா விஜயகுமார் என்பவர், ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து அருண்குமாரை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இதில் தலையில் குண்டு பாய்ந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். கொண்டாட்டமாக இருக்க வேண்டிய திருமண வீடு, கொலைக்களமாக மாறியதால், உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் குண்டு பாய்ந்த விஜயகுமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வாலிபரை சுட்டுக்கொன்ற விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆக்ராவுக்கு 2 நாள் பயணம் வந்துள்ளார்.
    • ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் சென்றார்.

    லக்னோ:

    இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆக்ராவுக்கு இரண்டு நாள் பயணம் வந்துள்ளார்.

    இந்நிலையில், ரிஷி சுனக் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு நேற்று தனது குடும்பத்தினருடன் சென்றார். தாஜ்மகாலைப் பார்வையிட்ட அவர், அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கருத்துகளை பதிவிட்டார்.

    ரிஷி சுனக்குடன் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் மற்றும் மாமியார் சுதா மூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர்.

    இதுதொடர்பாக, ரிஷி சுனக் கூறுகையில், தாஜ்மகாலைப் போல உலகின் சில இடங்கள் ஒன்றிணைக்க முடியும். இதைப் பார்க்கும் குழந்தைகள் மறக்க மாட்டார்கள். அன்பான விருந்தோம்பலுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் முழு குடும்பத்திற்கும் மறக்க முடியாத அனுபவம், நன்றி என தெரிவித்தார்.

    முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் வருகையை முன்னிட்டு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    • தீ விபத்தில் ஏழு கூடாரங்கள், அதில் தங்கியிருத்த யாத்ரீகர்கள் இருந்த உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.
    • யாத்ரீகர்கள் உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    செக்டார் 19 இல் அமைந்துள்ள லவ் குஷ் சேவா மண்டல் முகாமில் இன்று மாலை 6:15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

    அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ விபத்தில் ஏழு கூடாரங்கள், அதில் தங்கியிருத்த யாத்ரீகர்களின் போர்வைகள் உள்ளிட்ட உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.

    தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், தீ தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் பிரயாக்ராஜ் கூடுதல் பொது மேலாளர் பானு பாஸ்கர் தெரிவித்தார்.

    முன்னதாக,

    ஜனவரி 19: செக்டார் 19 இல் உள்ள கீதா பத்திரிகையாளர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 180 கூடாரங்கள் எரிந்து நாசமானது.

    ஜனவரி 30: செக்டார் 22-ல் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கூடாரங்கள் எரிந்து நாசமாயின.

    பிப்ரவரி 7: செக்டார் 18 இல் உள்ள சங்கராச்சாரியார் மார்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பந்தல்கள் எரிந்து சாம்பலாயின.

    பிப்ரவரி 15: செக்டார் 18-19 இல் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

    • திருமணத்தின் போது, ​​விலையுயர்ந்த கார், நகைகளை தந்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
    • தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் அவர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர்.

    வரதட்சணை கொண்டு வராத மருமகளுக்கு (30 வயது) மாமியார் (56வயது)  எச்.ஐ.வி. வைரஸ் ஊசியை செலுத்திய கொடூரம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் பிரன் காலியர் காவல் நிலையத்தில் உள்ள ஜஸ்ஸா வாலா கிராமத்தில் வசிக்கும் அபிஷேக் என்பவருடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி 15, 2023 அன்று திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்தின் போது, விலையுயர்ந்த கார், மகள் தனது மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை பெண்ணின் தந்தை வரதட்சணையாக கொடுத்திருந்தார். திருமணத்திற்கு சுமார் ரூ.45 லட்சம் செலவிடப்பட்டது.

    இதற்குப் பிறகு, மீண்டும் ரூ.10 லட்சம் ரொக்கமும், மற்றொரு பெரிய எஸ்யூவி காரும் வரதட்சணையாக கேட்டு மருமகளை மாமியார் நச்சரித்து வந்துள்ளார். இந்த விஷயம் பஞ்சாயத்தில் பேசி தீர்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னும் மாமியார் அந்த பெண்ணை விடுவதாக இல்லை. தொடர்ந்து மருமகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.

    இதன் உச்சமாக மருமகளுக்கு எச்.ஐ.வி தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி செலுத்தி நோய்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். இதன் காரணமாக அவரது உடல்நிலை வேகமாக மோசமடையத் தொடங்கியது.

    பின்னர் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் அவர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர்.

    எனவே இதுதொடர்பாக பெண்ணும் அவரது தந்தையும் சஹாரன்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது.

    இதனையடுத்து காங்கோ காவல்நிலையத்தில் பெண்ணின் கணவர், 2 மைத்துனர்கள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 498A (கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் தொடர்புடைய வரதட்சணை பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின், தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவது ஏன்?
    • தமிழ்நாடு மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. அவர்கள் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

    தமிழக கல்வித்துறைக்கு மத்திய அரசு தரக்கூடிய நிதியை வழங்காமல் இழுத்தடிக்கிறது என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசை குற்றம்சாட்டியிருந்தார்.

    இது தொடர்பாக காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அப்போது இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

    இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின், தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவது ஏன்?. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் விதிகளின்படி நிதி ஒதுக்க முடியும். இல்லையென்றால் நிதி ஒதுக்க இயலாது.

    தமிழ்நாடு மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. அவர்கள் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். மற்ற மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் 3-வது மொழியை கற்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மற்றும் 3-வது மொழியை ஏற்கமாட்டோம் என்றால் அது விதிகளின்படி தவறு. நிதி ஒதுக்க முடியாது.

    இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    • பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நேற்று மாலை வரை 50 கோடி பக்கதர்கள் புனித நீராடியுள்ளனர்.
    • பல கி.மீ. தூரம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

    மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் தொடங்கியது முதல் தினந்தோறும் லட்சணக்கான மக்கள் புனித நீராடி வருகிறார்கள்.

    நேற்று மாலை வரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். மொத்தம் 45 நாட்கள் விழாவான மகா கும்பமேளா வருகிற 26-ந்தேதி நிறைவடைகிறது.

    பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாகனங்கள் பல மைல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படுகிறது. அவர்களால் புனித நீராட முடியுமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக மகா கும்பமேளா விழாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு அகிலேஷ் யாதவ் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "இதற்கு முன்னதாக மகா கும்பமேளா, கும்பமேளா 75 நாட்கள் வரை கடைபிடிக்கப்பட்டது. தற்போது நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.

    தற்போது லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியாது. இந்த சூழ்நிலையில் அரசு மகா கும்பமேளா விழா நாட்களை நீட்டிக்க வேண்டும்" என்றார்.

    பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கூட்டம் அலைமோதும் நிலையில், பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் மக்கள் ஏற முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜ் ரெயில் நிலையம் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாலையில் பல கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் தத்தளித்து நிற்கிறது.

    கடந்த மாதம் பிரயாக்ராஜியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை உ.பி. அரசு மறைக்கிறது என அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • ​​குந்தி குரு திடீரென ரிக்ஷாவில் வந்து இறங்கி புன்னகையுடன், 'நீங்க என்ன பண்றீங்க' என்று கேட்டார்.
    • பூரி-சப்ஜி மற்றும் அவரது பதின்மூன்றாவது நாள் துக்க கூட்டத்திற்காகத் இனிப்புகள் தயாரிக்கப்பட்டன

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அம்மாநில பாஜக அரசு மறைப்பதாக சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் அன்று நடந்த கூட்டநெரிசலில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட ஒருவர் உயிருடன் தனது வீட்டுக்கு சென்று அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிரயாக்ராஜை சேர்ந்த உள்ளூர்வாசியான 60 வயது முதியவர் குந்தி குருவுக்கு குடும்பம் இல்லை. அவர் தனியாக வசிக்கிறார்.

    மௌனி அமாவாசையின்போது குளிப்பதற்காக, ஜனவரி 28 ஆம் தேதி மாலையில் குந்தி குரு திரிவேணி சங்கமத்திற்குச் சென்றிருந்தார். ஜனவரி 29 அன்று நடந்த கூட்டநெரிசல் சம்பவத்திலிருந்து அவரை காணவில்லை.

    உள்ளூர் சமூக சேவகர் அபய் அவஸ்தி கூறுகையில், கூட்ட நெரிசலுக்குப் பிறகு, நாங்கள் அவரை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இறுதியாக, அவர் இறந்துவிட்டதாகக் கருதி, பிப்ரவரி 11 ஆம் தேதி அவரது ஆன்மா சாந்தியடைய ஒரு சிறிய பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு பிராமணர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, குந்தி குரு திடீரென ரிக்ஷாவில் வந்து இறங்கி புன்னகையுடன், 'நீங்க என்ன பண்றீங்க' என்று கேட்டார்.

    குந்தி குரு உயிருடன் இருப்பதைக் கண்டு, அவரது அண்டை வீட்டார் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், பூரி-சப்ஜி மற்றும் அவரது பதின்மூன்றாவது நாள் துக்க கூட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் அவர் திரும்பியதைக் கொண்டாட உள்ளூர்வாசிகளிடையே விநியோகிக்கப்பட்டன.

    இவ்வளவு நாட்களாக அவர் காணாமல் போனது குறித்த கேள்விக்கு, குந்தி குரு, சாதுக்கள் குழுவுடன் சேர்ந்து புகைத்தேன். இதன் காரணமாக அவர் நீண்ட நேரம் தூங்கினேன். இதன் பிறகு நாக சாதுக்களின் முகாமுக்குச் சென்றதாகக் கூறினார். மேலும் அவர்களின் கடைகளில் உணவு பரிமாறும் சேவை செய்தேன் என்று அப்பாவியாகத் தெரிவித்தார். 

    • சார்ஜ் போர்டை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 25 போன்களுக்கு சார்ஜ் செலுத்த முடியும்.
    • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரை பாராட்டி பதிவிட்டனர்.

    உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். தொடர்ந்து அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், ஒரு வாலிபர் செல்போன்களுக்கு 'சார்ஜ்' போடுவதன் மூலம் 1 மணி நேரத்துக்கு ரூ.1,000 வரை வருமானம் ஈட்டுவது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

    அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் செல்போன்களுக்கு 'சார்ஜ்' போட்டு தருகிறார். ஒரு பலகை முழுவதும் செல்போன்கள் நிறைந்துள்ள நிலையில், மேலும் பலர் தங்களது செல்போன்களை 'சார்ஜ்' செய்ய காத்திருக்கின்றனர். அந்த சார்ஜ் போர்டை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 25 போன்களுக்கு சார்ஜ் செலுத்த முடியும்.

    இதற்கு அவர் தலா ரூ.50 வசூலிக்கிறார். இதன் மூலம் அந்த வாலிபர் 1 மணி நேரத்துக்கு ரூ.1,000 வரை சம்பாதிப்பதாக கூறியுள்ளார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரை பாராட்டி பதிவிட்டனர்.

    • பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது.
    • மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வருகிறது.

    இதில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் ஒரு காரில் கும்பமேளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பஸ் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது.

    அதிலிருந்து பக்தர்கள் 10 பேர் பலியானார்கள். மேலும் பஸ்சில் இருந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்கள் உடல்களை ஸ்வரூப் ராணி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    பலியானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    ×